search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
    • மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைந்து மோடி பிரதமர் ஆவது உறுதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த கருத்து கணிப்புகள் முடிவுகளும் அதையே சொல்கிறது. 4-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரியவரும்.

    தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் தலைமையில் ஏதேனும் மாற்றம் வருமா? என்பது தொடர்பாக கருத்து சொல்வது நல்லதில்லை. தேர்தல் முடிவுக்கு பின்னர் அதைப்பற்றி பேசலாம்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    நான் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ஒன்றரை மாதம் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் அதிகமாக கோவிலுக்கு சென்றேன். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியில் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதா என்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்தும் 4-ந்தேதிக்கு பிறகு சரியாகிவிடும் என்றார்.

    • அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
    • போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    விவசாயிகளின் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் தியானம் இருக்கும் நரேந்திர மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த புறப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் இன்று காலை திருச்சி மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் அவரை அங்கிருந்து வெளியில் செல்ல விடாமல் வீட்டு காவலில் சிறை வைத்தனர். இதில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட சில விவசாயிகள் சிக்கியுள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • சுடுகாட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

    இன்று கர்நாடகா மற்றும் கேரளா அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி ஆற்றில் நதிநீர் பங்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் விவசாயிகள் பிணம் போல படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் கார்த்திகை தீப கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து கோவில் உதவி ஆணையர் அனிதா கொடுத்த புகாரின் பேரில் அய்யாக்கண்ணு உள்பட 8 விவசாயிகள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முக்கொம்பு அணைக்கட்டு பகுதியில் தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகாலை 3, 4 மணிக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும்
    • போராட்டத்தில் டிரைவர்களிடம் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஆவின் பால் பண்ணை நிறுவனம் நாள் ஒன்றுக்கு காலை நேரத்தில் மட்டும் பேக்கிங் செய்யப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது.

    இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவன வாகனங்கள் மட்டுமல்லாமல் வாடகை வாகனங்கள் மூலமாகவும் மாவட்ட முழுவதும் ஆவின் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    அந்த வகையில் 46 வேன், டெம்போ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆவின் நிறுவனம் கடந்த 45 நாட்களுக்கு உரிய வாடகை பாக்கி தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) காலை திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 3, 4 மணிக்கு பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படும். ஆனால் வாடகை வாகன டிரைவர்கள் தங்கள் வாகனங்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் சில வாடகை ஆட்டோக்கள் மூலமாக அருகாமையில் உள்ள ஏஜெண்டுகளுக்கு பால் சப்ளை செய்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆவின் ஏஜெண்டுகளுக்கு இன்று காலை பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் திருச்சி மாநகரில் காலை ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆவின் துணைப் பொது மேலாளர் நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு வாடகை பாக்கியில் பாதி தொகையான ரூ.27 லட்சமும், நாளை மீதித்தொகை ரூ.27 லட்சமும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் டிரைவர்களிடம் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று மாலை வழக்கம் போல் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாகனங்களை இயக்குவதாக உறுதியளித்துள்ளனர்.

    • கல்லணை கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு செல்லும்.
    • மதகுகள் புனரமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட விவசாயத்துக்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வருகிறது. இங்கு வரும் தண்ணீர் உடனுக்குடன் காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும்.

    அந்த வகையில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 6 மணி நிலவரபடி காவிரியில் வினாடிக்கு 1600 கன அடி நீர் வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு, கல்லணை கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு செல்லும்.

    முக்கொம்பு காவிரி மேலணை பகுதியில் உள்ள ஷட்டர்கள் புனரமைக்கும் பணிகள் நடப்பதால் வேறு வழி இல்லாமல் காவிரியில் வரும் முழுமையான நீரும் காவிரி ஆற்றிலேயே செல்கிறது. முன்பு 500 கன அடி நீர் வந்தபோது பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 மதகுகளை அடைத்து தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் இலகுவாக திருப்பி விட்டனர்.

    இப்போது 1600 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பரந்து விரிந்து அனைத்து மதகுகளையும் தொட்டபடி வருகிறது. இந்த மதகுகள் புனரமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 10 நாட்கள் ஆகும். அதுவரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திருப்பி விடுவது தடைபடும் என்ற காரணத்தினால் தற்போது காவிரி ஆற்றில் 2 ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கரை அமைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது.

    இது தொடர்பாக முக்கொம்பு மேலணை அதிகாரி ஒருவர் கூறும்போது, மணல் ஈரமாக இருக்கும் காரணத்தினால் மணல் கரை அமைக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த கரை முழுமையாக அமைக்கப்பட்டு காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டு கல்லணை வழியாக வீராணம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் எதிர்பாராத கோடை மழை பயிர்களை சேதப்படுத்தின.
    • அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நவரை பருவத்தில் பெரும்பாலான விவசாயிகள் பம்பு செட் மூலம் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி இந்த நவரை பருவத்தில் 4850 ஹெக்டேர் பரப்பளவில் நெல், எள் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்திருந்தனர்.

    இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் எதிர்பாராத கோடை மழை பயிர்களை சேதப்படுத்தின. அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பில் உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளது.

    முதல் கட்ட கணக்கெடுப்பின்படி லால்குடியில் 209 ஹெக்டேர், வையம்பட்டியில் 0.40 ஹெக்டேர் சிறுதானியம் மற்றும் நெற்பயிர்கள், மணப்பாறையில் 40 ஹெக்டேர், மருங்காபுரியில் 15. 87, தா.பேட்டையில் 45, வையம்பட்டியில் 15, மணிகண்டத்தில் 4 ஹெக்டேர் என மொத்தம் 329.27 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டு 505 விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த விபரங்களை வேளாண்துறை அதிகாரிகள் கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்த கணக்கெடுப்புகளை மீண்டும் வருவாய்த் துறையினர் மதிப்பீடு செய்து தமிழக அரசுக்கு அது குறித்த விவரங்களை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (மே 26) காலை நடைபெற்றது. 

    இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும் கலந்து கொண்டார்.

    விழாவின்போது அமைச்சர் கே.என். நேரு அவர்கள் விழாவில் பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குருவுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, 'நாம் மரத்தை வளத்தால்; மரம் நம்மை வளர்க்கும்' என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார். 

    அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகள் பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும்.

    தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார். 

    முன்னதாக, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2024-25) தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடும் பணியை தற்போது தொடங்கி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு 4.5 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு திருச்சியில் 2,92,773 மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்" என்றார்.

    2002-ம் ஆண்டு முதல் ஈஷா சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.
    • திருச்சியில் இருந்து இரவு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.


    கோடை விடுமுறை என்பதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் புக் செய்பவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.

    இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயிலை இயக்க திருச்சி ரெயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி திருச்சியில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.

    இந்த ரெயில் திருவரும்பூர் (இரவு 11.20 மணி), பூதலூர் (11.36), தஞ்சை (11.57), பாபநாசம் (நள்ளிரவு 12.21), கும்பகோணம் ( 12.34), மயிலாடுதுறை (12.54), வைத்தீஸ்வரன்கோயில் (1.13), சீர்காழி (1.20), சிதம்பரம் (1.33), கடலூர் துறைமுகம் (2.06), திருப்பாதிரிபுலியூர் (2.13), பண்ருட்டி (2.42), விழுப்புரம் (அதிகாலை 3.40), திண்டிவனம் (4.13), செங்கல்பட்டு (5.18) வழியாக நாளை காலை (திங்கள்கிழமை) 6.05 மணிக்கு தாம்பரம் சென்று அடையும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த சிறப்பு முன்பதிவு இல்லாத ரெயிலை பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.

    • தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.
    • தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.

    திருச்சி:

    மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை நடந்து முடிந்த தொகுதிகளில் 310 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான சாதகமான நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ள தேர்தல்களிலும் சேர்த்து மொத்தம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை பாரதிய ஜனதா செய்ய உள்ளது.

    தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது, யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற இருக்கின்றது. வரும் 4-ம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.

    தமிழக முதலமைச்சர், மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்று கூறி வருகிறார். அது அவர்களுடைய பகல் கனவாகவே இருக்கப்போகிறது. காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.

    பிரதமர் மோடி பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே பொய்யாக திரித்து பேசி வருகிறார். பிரதமர் என்ன பேசினார் என்பதை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி சீமான் என்னை விட அதிகமாக அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன் என சொல்லி உள்ளார் என்ற கேள்விக்கு, அவர் கட்சியைக் கலைக்க தயாராகி விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    • இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
    • ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    மலேசியா சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 68).

    இவர் கடந்த 20-ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை மெயின் ரோடு கோவில்பட்டிக்கு சென்றார்.

    மீண்டும் மலேசியா செல்வதற்காக நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு தனது மனைவி அமுதாவுடன் வந்தார்.

    இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது திடீரென ராஜலிங்கம் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அமுதா, அவரை உடனடியாக மீட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்த தனியார் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராஜலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    • பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகங்கை, மேலதெரு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 53) மற்றும் சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த ஜபருல்லாகான் (56) ஆகிய இருவரும் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் பிறந்த தேதியில் மாற்றம் செய்தும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதனை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
    • அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    திருச்சி:

    பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக் கோவில் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அசாம் மாநிலத்திலிருந்து பெண் யானை கொண்டு வரப்பட்டது.

    அதற்கு இந்த கோவிலின் சார்பில் அகிலா என்று பெயர் சூட்டப்பட்டது. அதனை கவனித்துக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஜம்புநாதன் என்ற யானை பாகனை நியமித்து பராமரித்து வருகின்றனர்.

    பெண் யானை அகிலா கடந்த 2002 மே 24-ந்தேதி பிறந்து அசாம் மாநிலத்திலேயே வளர்ந்தது. 9 1/2 வயதில் திருச்சி திருவானைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அன்று முதல் அகிலாவை கவனித்து வரும் கோவில் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் அதன் பிறந்தநாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக அகிலாவிற்கு 21 வயது முடிந்து 22-வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளது. அதற்காக நேற்று பெய்த சாரல் மழையிலும் ஷவரிலும் அகிலா ஆனந்த குளியல் போட்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தயாரானது.

    இன்று காலையில் யானை அகிலாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவிலை வலம் வர செய்தனர். பக்தர்கள் பலரும் யானைக்கு பழங்கள் கொடுத்து உபசரித்து வணங்கினர். இன்று மாலை 4 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் அகிலாவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதற்காக ஏராளமான பழங்களை பரிசுகளாக கொடுக்கின்றனர். இந்த பிறந்தநாள் விழாவிலும், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அகிலாவிற்கு பரிசு அளிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×