search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பெண் மற்றும் அவரது பெற்றோர் திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர்.
    • நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என திருவேங்கை நாதன் ஏங்கினார்.

    மணச்சநல்லூர்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் திருவேங்கை நாதன் (வயது 40 ). இவர் திருமணம் செய்து கொள்வதற்காக ஆன்லைன் முலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து பெண் தேடி வந்தார்.

    இந்த நிலையில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மணச்சநல்லூர் பகுதியில் இருப்பதை அறிந்தார்.

    உடனே பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினார். கடந்த 2021-ம் ஆண்டு அவரது குடும்பத்துடன் மணச்சநல்லூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அந்த பெண்ணிற்கு திருவேங்கையை பிடிக்கவில்லை. அதை தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோர் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டனர். ஆனால் திருவேங்கையால் அந்த பெண்ணை மறக்க இயலவில்லை. நீண்ட நெடிய காலத்திற்கு பின்னர் பார்த்த பெண்ணும் தனக்கு வசப்படவில்லையே என ஏங்கினார்.

    பின்னர் ஆத்திரம் அடைந்த திருவேங்கைநாதன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து மார்பிங் செய்து போலி திருமண அழைப்பிதழ் அச்சடித்து, அதனை பெண் வீட்டாருக்கு தெரியாமல் இரு ஊர்களில் விநியோகம் செய்துள்ளார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனே இச்சம்பவம் குறித்து மணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருவேங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வினியோகம் செய்த வாலிபரை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மற்றும் மண்ணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
    • கோவை மாவட்ட காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா். சவுக்கு சங்கர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆசிரியராக இருக்கும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

    இதனால் பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    அவர் ஆறு மாதங்களுக்கு திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

    கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த வழக்கிலும் ஜாமின் கிடைக்கும் வரை சிறையில் இருந்து வெளியேற வரமுடியாது.

    • போலீசார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
    • போலீஸ் காவலுக்கு பின்னர் மீண்டும் நேற்று மதியம் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திருச்சி:

    தமிழக பெண் போலீசாரை தவறாக விமர்சித்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த 10-ந்தேதி டெல்லியில் திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் தரப்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து போலீசார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையின் போது அவர் கூறுகையில், சவுக்கு சங்கரின் பேட்டி பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால் அவரை பேட்டி எடுத்து எங்கள் சேனலில் ஒளிபரப்பு செய்தேன்.

    இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த தலைவரின் தூண்டுதலின் பேரிலும் இதை செய்யவில்லை.

    பெண் போலீசார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தினை தவிர்த்து இருக்கலாம். இவ்வளவு பிரச்சனையாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

    போலீஸ் காவலுக்கு பின்னர் மீண்டும் நேற்று மதியம் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் , சதாசிவம், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி வழங்காத மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக 120 விவசாயிகள் வாரணாசி புறப்பட்டனர்.

    அவர்களை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று(புதன்கிழமை) சென்னை சாஸ்திரி பவன் மற்றும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மதியம் முதல் அய்யாக்கண்ணு சென்னை செல்வதை தடுப்பதற்காக திருச்சி அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தயாரானார்கள். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் மேகராஜன், நிர்வாகிகள் உமா காந்த், உத்தண்டன், வெற்றிவேல், சதாசிவம், மதிமன்னன், ராஜேந்திரன், கென்னடி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்பு அவர்களை உறையூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளது.

    எங்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கைது செய்துள்ளனர். ஆகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன் என்றார்.

    • கடந்த 20 நாட்களுக்கு முன் கடும் வெயிலால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.
    • ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

    மணப்பாறை:

    கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடும் வெயிலால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலையும் ஏற்பட்டது. விவசாய பயிர்களும் கருகும் நிலையும் ஏற்பட்டது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியிலும் 109 டிகிரிக்கும் மேல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    முதல் 2 நாட்கள் மிதமான மழை பெய்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மிக கனமழை பெய்தது. மணப்பாறை அருகே தொப்பம்பட்டி, நல்லாம்பிள்ளை ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அப்பகுதி விவசாயிகள் சுமார் 300 ஏக்கருக்கு மேல் கோடை காலத்திற்கு ஏற்ற குறுவை நெல் ரகங்களை பயிரிட்டிருந்தனர்.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மணப்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன. மேலும் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் நீரில் மூழ்கி, நெல் மணிகள் முளைவிடத் தொடங்கின.

    தண்ணீரை வெளியேற்றவும், அறுவடை செய்யவும் வழியில்லாமல் தொடர்ந்து நெல் மணிகள் வயல்களிலேயே முளைவிட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்,

    கடந்த 20 நாட்களுக்கு முன் கடும் வெயிலால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. அப்போது மழை பெய்திருந்தால் பயிர்கள் செழிப்பாக வளர உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்போது பெய்திருக்க வேண்டிய மழை காலம் கடந்து நெற்கதிரானபோது காற்றுடன் மழை பெய்துள்ளதால் நெற்கதிர்கள் சாய்ந்து விட்டன.

    அறுவடைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பெய்த மழையால் நெற் பயிர்கள் வயலில் தேங்கிய நீரில் மூழ்கி, முளைவிடத் தொடங்கிவிட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் கோடை கால சாகுபடி என்பதால் விவசயிகள் பலரும் பயிர் காப்பீடு செய்ய தவறிவிட்டனர். எனவே, அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது.
    • ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

    அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருச்சி மாநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 4:20 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி, கருமண்டபம், உறையூர் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோன்று மேலபுதூர் சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதன் காரணமாக பகுதிகளில் முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் கம்பி அருந்து விழுந்தது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்தனர்.

    அதேபோன்று திருவெறும்பூர் பகுதியில் கல்லணை செல்லும் சாலையில் அரசங்குடி பகுதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1154.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக திருச்சி ஏர்போர்ட் பகுதியில் 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோன்று திருச்சி ஜங்ஷன் 82.8, திருச்சி டவுன் 68 , பொன்மலை 45.2 மில்லி மீட்டர் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கள்ளக்குடி 56.4, லால்குடி 81.6, நந்தியாறு அணைக்கட்டு 12.6,புள்ளம்பாடி 34.8,தேவி மங்கலம் 41.4, சமயபுரம் 120, சிறுகுடி 35.2, வாத்தலை அணைக்கட்டு 65.2, மணப்பாறை 74, பொன்னணியாறு டேம் 15.8, கோவில்பட்டி 21.4, மருங்காபுரி 15.2, முசிறி 53, புலிவலம் 20, தா.பேட்டை 44,நவலூர் கொட்டப்பட்டு 40, துவாக்குடி 52.1, கொப்பம்பட்டி 6, தென்பர நாடு 19, துறையூர் 21.


    ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. ஏர்போர்ட் பாரதிநகர் பகுதியில் மழை நீர் வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்ததால் மழைநீர் செல்ல வசதியின்றி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதனால் தெருசாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டாடப்பட்டு கிடக்கிறது.

    நேற்று பெய்த மழையில் சாலையே தெரியாத அளவுக்கு காலி மனைகளில் வெள்ள நீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகளில் முடங்கினர்.

    திருச்சி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் உச்சகட்டமாக இருந்தது 110 டிகிரி வரை வெயில் மக்களை சுட்டெரித்தது. வெயிலுக்கு பயந்து வீட்டில் முடங்கிய மக்கள் நேற்று மழைக்கு பயந்து வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. 

    • கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
    • பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை பெறுவதற்காக எல்லை மீறிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ், பனியன் அணிந்து மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு கவர்ச்சிகரமாக ஆடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. பொதுவாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்கள் திருச்சி தில்லை நகரை சேர்ந்த நடன பள்ளி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ரெயில்வே போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதை அறிந்த அந்த நடன பெண்கள் தங்கள் பதிவுகளை நீக்கி உள்ளனர்.

    • காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது.
    • லைக்ஸ் வாங்குவதற்காக எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் வெளியாகி வருகின்றன.

    திருச்சி:

    சமூக வலை தளங்களில் 'ரீல்ஸ்' மூலம் காணொளி களை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்சுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இந்தச் சூழலில் ரீல்சுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    திருச்சியில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சிக்கென ஜீன்ஸ், கவர்ச்சி பொங்கும் கருப்பு பனியன் அணிந்து அவர்கள் நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

    மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் பின்னணியில் இளம்பெண்களின் அமர்க்களமான நடனம் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

    தாளம் தப்பாமல் 3 இளம் பெண்கள் ஆடும் வீடியோவை இளைஞர்கள் ரசித்து வந்தாலும், இதனை கண்ட திருச்சி ரெயில்வே போலீசாருக்கு சுருக் என்றது. காரணம் அவர்கள் நடனமாடி வீடியோ எடுத்தது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில்.

    மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் புகைப்படம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி படம் பிடிக்க வேண்டும் என்பது விதிமுறை.

    குறிப்பாக பேருந்து, ரெயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரெயில் நிலையத்தில் யார் அனுமதி பெற்று 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடினார்கள்? என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.

    எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர் இந்த இளம் பெண்கள் யார்? அனுமதி இன்றி வீடியோ எடுக்கும் வரை இதனை பார்த்த ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 39). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராசாத்தி (35)என்கிற மனைவியும், சுஜித் சரண் (11) என்கிற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மணிமாறன் தனது வீட்டினை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை மணிமாறனின் தங்கையான மகேஸ்வரி என்பவர் வீட்டினை பார்த்தபொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் எடையுள்ள உள்ள தங்க நகை, ரொக்கம் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரி உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    துறையூர் நகரப் பகுதியில் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியிலேயே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
    • கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக இங்குள்ளன. தற்போது அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதனால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள மிகப்பெரிய ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் அங்கிருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    செந்நிறத்தில் ஓடும் இந்த தண்ணீரின் அழகை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் கொல்லிமலை மற்றும் அடிவாரம் புளியஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கவனமாக செயல்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் அபாய எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாறைகளிலும், எச்சரிக்கை, கற்கள் நிறைந்த பகுதி, பாறையின் மேல் ஏறி குதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் கடந்தவாரம் புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்துள்ளார் அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில் வனச்சரகர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து புளியஞ்சோலை வனப்பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
    • பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் தப்புதான்.

    திருச்சி:

    ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மனு தாக்கல் செய்தார்.

    இதை தொடர்ந்து கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.

    அதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜார்னலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.

    பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுகூட போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
    • உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்கு.

    சவுக்கு சங்கர பேசியது காவலரை மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்துள்ளது என திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது.

    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்டிறிய முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுகூட போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது.

    ஒரு லட்சம் போலீசார் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரும் புகார் அளித்தால் எப்ஐஆர் போட்டு விசாரிப்பார்களா ? என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பறறப்பட்ட பிறகு திருச்சியில் எதற்காக போலீஸ் கஸ்டடி கேட்கிறார்கள் ? என சவுக்கு சங்கர் தரப்பு கூறப்பட்டது.

    இதைதொடர்ந்து, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஜெயப்பிரதாக உத்தரவிட்டுள்ளார்.

    சவுக்கு சங்கருக்கு ஏற்கனவே ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி இருந்த நிலையில், தற்போது வேறொரு வழக்கில் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×