search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வள்ளியூர் அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதான கட்சி ஒன்றின் பிரமுகராக இருந்து வரும் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் நடத்தப்படும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை அதரித்து தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறார்.
    • அலுவலகத்தில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றவில்லை என ஆவுடையப்பன் விளக்கம்.

    திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு வாக்குகள் திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று திடீரென வருவமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்து அவரது ஆதராவளர்களும், திமுகவினர் அலுவலம் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    வருமானவரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பாக முகவர்கள், வட்ட செயலாளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகின.

    அதேசமயத்தில் தன்னுடைய அலுவலகத்தில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்த ஆவுடையப்பன், தன்னை பிரசாரம் செய்ய விடாமல் சுமார் இரண்டு மணி தடுத்து வைத்தனர் எனக் குற்றம்சாட்டினார்.

    • நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தென்காசி பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் நாகலெட்சுமி (வயது18).

    இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இதனால் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்து நாகலெட்சுமி படித்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நாகலெட்சுமி, விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த அறையில் தங்கியிருந்த சக தோழிகள் இன்று காலை எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் கல்லூரி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார், நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் நாகலெட்சுமி சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதனால் தேர்ச்சி பெறாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மிகவும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசும் தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருவதாகவும், இதனால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. அதே நேரத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நெல்லை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

    அதேநேரத்தில் வேட்பாளரான ராபர்ட் புரூஸ், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்காமல் இருந்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ராபர்ட் புரூஸ் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கூறியுள்ளார். உடனடியாக மேலிடத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நெல்லை தொகுதியின் நிலவரத்தை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோஷ்டி பூசல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார். மேலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருக்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லை பாராளுமன்ற தொகுதி கூடுதல் பொறுப்பாளராக அறிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு ராதாபுரம் தொகுதி கடற்கரை கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொடர்ந்து இன்று ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அம்பை சட்டமன்ற தொகுதிகளில் முகாமிட்டு தி.மு.க.வினரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட முடுக்கி விடும் பணியில் களம் இறங்கி உள்ளார்.

    தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம், கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று மாலை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
    • வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் நெல்லை மாநகராட்சி வார்டு 18-க்கு உட்பட்ட பகுதிகளும் எம்.ஜி.ஆர்.நகரில் வருகிறது. இங்குள்ள தங்கம்மன் கோவில் தெருவில் கடந்த 56 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வீடு கட்டியுள்ள நிலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக வரி செலுத்தி வருவதாகவும், இருப்பினும் தங்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் தங்கம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருந்ததியர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள். அவர்கள் கொரோனா காலத்தில் அயராது அச்சமின்றி பணியாற்றினர். அவர்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பது என்ன நியாயம் என கூறி பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இதனை தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடந்த 14-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி திறந்தவெளியில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.

    தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் மீண்டும் ஒரு பேனரை பொதுமக்கள் வைத்துள்ளனர். அதில் வருகிற 4-ந்தேதி முதல் வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிக்கபோவதாகவும், தீர்வு கிடைக்கும் வரை அரசியல் வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    திசையன்விளை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 245 இருந்தது. அந்த வாகனத்தில் வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் திசையன்விளையை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராஜதுரை (வயது 29) என்பது தெரிய வந்தது.

    சிகரெட் வியாபாரியான அவர் விற்பனையை முடித்துவிட்டு அதற்கான பணத்தை பெற்று வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த கக்கன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவரது காரில் சுமார் 35 பவுன் தங்கநகை, 140 செட் பரிசு பொருட்கள் மற்றும் ஏராளமான சேலைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    காரில் வந்த நபர் திசையன்விளை அருகே உள்ள அழகியவிளையை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 48) என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் சொந்த ஊரில் நடைபெறும் அய்யா கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் எடுத்து செல்வதாகவும், 35 பவுன் தங்க நகைகள் தனது குடும்பத்தினருடையது என்றும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என்பதால் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து நாங்குநேரி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    • கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது.
    • இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெற்றிடத்தை அப்பகுதி பொதுமக்கள் இதுநாள் வரை பயன்படுத்தி வந்தனர்.

    சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வழிபாட்டு இடத்தை மறைமுகமாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    எனவே அலுவலகத்திற்கு கையகப்படுத்தியதில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பதாக கூறி அதனை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சடையப்பபுரம் ஊர் பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அந்த இடத்தை கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த 27-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சத்யாவும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் மனுதாக்கல் செய்ய முதலில் வந்ததாகவும், குறைவான ஆதரவாளர்களுடன் மட்டுமே வந்ததாகவும், ஆனால் காங்கிரசார் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வந்தனர். ஏற்கனவே 16 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஜெகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டனர்.

    அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த ராமசுப்பு, 'காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தது அங்கு பரபரப்பை உருவாக்கியது.

    இந்நிலையில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்.

    காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன் என்று கூறினார்.

    • அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
    • வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

    இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

    அதன்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று மாலை தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை வரும் எடப்பாடி பழனிசாமி, டவுன் வாகையடி முனையில் வைத்து நெல்லை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் காரில் கன்னியாகுமரி புறப்படுகிறார்.

    எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டவுன் வாகையடி முனையில் நடைபெறும் கூட்டத்திற்காக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகையையொட்டி டவுன் ரதவீதியில் மாலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரதவீதிகளில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள்.
    • பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

    கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் வாக்கு தான் ஜனவாயகத்தை காக்க உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாறிவிடும்.

    மணிப்பூர் மாநில மக்கள் அகதிகள் போல் உள்ளனர்.

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? அதற்கான நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.

    புயல், வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாய் அமைச்சர்கள் இருந்தனர்.

    பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்கிறார்.

    நீதிமன்றத்தை நாடி வெள்ள நிவாரணத்தை பெறுவோம்.

    ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது. பாஜகவிற்கு, தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம். ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன ? பட்டியலிட்டு பிரதமர் பேச வேண்டும்.

    எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும், எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை.

    தமிழக மீனவர்கள் கைதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ?

    எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பதையே, பிரதமர் செய்து வருகிறார். தமிழக மீனவர்கள் குறி்தது பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசினாரா?

    இந்தியா சிறப்பாக இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பாஜகவுடன், அதிமுக மறைமுக கூட்டணியில் உள்ளது.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வாய்ப்பு இந்த தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளோம்.

    பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×