search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
    • விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    இன்று ஆடி 18, ஆடி பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    ஆடி மாதம் 18ம் தேதி ஆடி பெருக்கு என்று நம் முன்னோர்கள் கருதி இந்த நாளை புனித நாளாக கருதி விவசாய பணிகள் தொடங்குவது, வீடுகள் கட்டுமான பணிக்கு நாள் செய்வது என செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

    • குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின.
    • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜெயலாணி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடோன் செல்சீனி காலனி பகுதியில் உள்ளது.

    இன்று காலை அவரது குடோன் அருகே உள்ள முட்புதரில் சிலர் தீவைத்து எரித்துள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியதால் முட்புதரில் வைக்கப்பட்ட தீ அருகே இருந்த பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கும் பரவியது.

    இதில் தீ மள மளவென பரவியதால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள், பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை எரிய தொடங்கின. இதன் காரணமாக கரும்புகை சுமார் 100 அடி உயரம் வரை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் இந்த கரும்புகை தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் பரவியது. 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு புகைமூட்டமானது.

    குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் தென்பாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின.

    சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், முகிலன் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய மாவட்ட உதவியாளர் நட்டார் ஆனந்தி, சிப்காட் ராஜ், தலைமையிலான தீயணைப்பு துறையினர், தெர்மல் நகர், ஸ்பிக் நகர், உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்ததாகவும், அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கழிவு பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை.
    • திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை.

    * தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது.

    * தருமபுரி தொப்பி வாப்பா பிரியாணி கடைக்குள்ளேயே புகுந்து இளைஞரை கொலை செய்துள்ளனர்.

    * மனிதர்களை கசாப்பு கடையில் ஆடுகளை வெட்டுவது போல் வெட்டுவது அதிகரித்துள்ளது.

    * காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டும்.

    * தமிழகத்தில் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

    * அரசியல் பிரமுகர்கள், பெண்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

    * தமிழக மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது.

    * திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    • கிண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
    • கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    • 442-வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி தேரோட்டம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 8.30 மணிக்கு பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

    அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பாட்டிருந்த படகில் இருந்து சைரன் ஒலி இசைக்கப்பட்டது. சமாதானபுறாக்கள் பறக்கவிடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஆயிரகாக்கானோர் கலந்து கொண்டனர்.

    பகல் 12 மணிக்கு முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய மாதா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது,

    திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். வருகிற 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த தேவாலயமானது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த தேவாலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி தூத்துக்குடி மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த ஆண்டு 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ-மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.

    இந்த கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

    • சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து தூத்துக்குடி 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து,முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்லாமொழி கடற்கரை வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 106பீடிஇலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அவற்றை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஆரக்கோட்டை காரைக்குடியை சேர்ந்த அருள் விஜயகாந்த் (வயது 35) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மா சாலையைச் சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென் மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆடி மாத பவுர்ணமி திதியை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழி கிணறு ஆகிய புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை நேரம் நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் கோவில் வளாகம் முழுவதும் சுற்றி வந்து கூட்டத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் தரிசனம் செய்ய தனி பாதை, கடற்கரை செல்வதற்கு தனி பாதை அமைக்கப் பட்டுள்ளது.

    பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம், கழிப்பறை கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தரிசனம் முடித்து இரவு கடற்கரை மணலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் நிலா சோறு சாப்பிட்டு இரவு முழுவதும் அங்கேயே தங்கினர்.

    இன்று அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போலீசார் தெப்பக்குளம் அருகிலும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே உள்ள இடத்திலும், ஐ.எம்.ஏ. ஹால் அருகிலும், தினசரி மார்க்கெட் பகுதி என 6 இடங்களில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை தினமான இன்றும் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடினர். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கடைக்காரருக்கு திடீரென புது விதமான யோசனை தோன்றியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மெஞ்ஞானபுரத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் கரும்புச்சாறு பிழிந்தெடுத்து விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் அவ்வப்போது வேலைக்கு ஆட்கள் தேவை என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கும்.

    அதன்படி, வேலைக்கு இளைஞர்கள் சிலர் வருவார்கள்.

    சில நாட்களில் நின்று விடுவார்கள்.

    இந்த நிலையில் கடைக்காரருக்கு திடீரென புது விதமான யோசனை தோன்றியுள்ளது.

    அதன் விளைவாக வேலைக்கு ஆட்கள் தேவை என வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், "கரும்புச் சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சம்பளம் ரூ.18 ஆயிரம். வேலை நேரம்- காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை. கல்வி தகுதி- பி.இ., பி.ஏ., பி.எஸ்சி., வயது வரம்பு 25-ல் இருந்து 40 வரை" எனவும், தொடர்புக்கு செல் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த 25 பெண்கள் மூச்சு திணறி அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

    மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது.

    1500 ஆண்டுகள் பழமையான இந்த பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    அதன்படி, திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் நாளான வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூய பணிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட்.10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் சுவாமி தரினம் செய்தனர்.

    இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜா, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.

    இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள். ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர்.

    இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    ×