search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப் படவில்லை என்று தெரிகிறது.
    • உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டிஏரி. இந்த நீர் தேக்கம் 1944-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர்வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன.

    பூண்டி ஏரி கட்டப்பட்டதில் இருந்து இதுவரை ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப் படவில்லை என்று தெரிகிறது. அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியில் தற்போது 3085 மில்லியன் கன அடி(3 டி.எம்.சி) நீர் இருப்பு உள்ளது.

    தற்போது மழை இல்லாதததால் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷட்டர்ககளில் இருந்து 30 கன அடி வரை வீணாக உபரி நீராக வெளியேறி வருகிறது.

    எனவே பொதுப் பணித்துறையினர் பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
    • பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.

    திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. திருவள்ளூர் சுற்றுவட்டாரா பகுதிகள், திருப்பதி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளை போர்வை போற்றியது போல் பனிமூட்டம் காணப்படுகிறது.

    இந்நிலையில், மூடு பனி காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர்.

    இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.

    குறிப்பாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பனி குறையாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர்.

    • பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
    • மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.

    நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    காலை 8 மணி வரை புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பல இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனிமூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில்கள், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று காலை வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.

    திருத்தணியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திருத்தணிக்கு காய்கறி, கரும்புடன் சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை பாபு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு மீது சரக்கு வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோமீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் இருந்த பாபு, சூர்யா, வள்ளியம்மா, ஜெயலா, மற்றும் எதிரில் சரக்கு ஆட்டோவில் வந்த சிங்காரவேலன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

    • விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
    • விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
    • பொங்கல் பரிசு பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் தாமோதரன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில் இவரது மகனும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டும் சுமார் 2 வருட காலமாக ரேசன் கடைகளில் எந்த விதமான பொருட்களும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் முதல் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வரை இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் ரேசன் கடைக்குச் சென்று கேட்கும் பொழுது கைரேகை சரிவர பதியவில்லை என கூறி அலட்சியப்படுத்தி அனுப்பி வருவதாகவும் இதனால் மனவேதனையில் இருப்பதாகவும் வள்ளியம்மாள் கண் கலங்கினார்.

    பொங்கல் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.

    இது குறித்த செய்தி நேற்று மாலை மலரில் வெளிவந்தது. இதை பார்த்து உடனடியாக உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் அம்பத்தூர் மண்டல உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று காலை கள்ளிக்குப்பம் கங்கை நகரில் உள்ள நியாய விலை கடைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூதாட்டியை கடைக்கு அழைத்து வந்து பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி சேலை, மற்றும் ரூ.1000 ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் மழை நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் பெறுவதற்கு வழிவகை செய்வதாகவும் அதற்கு முதல் கட்டமாக அதற்குண்டான படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    • பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
    • அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உறி அடித்தார்.

    திருவள்ளூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.


    மேலும் விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கர் குத்தாடம் போட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

    • குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    செங்குன்றம்:

    சென்னை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை சூரப்பட்டு அருகே நங்கநல்லூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 80 ஆயிரம் சதுர அடியில் குடோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம், மணலி, பிராட்வே, செம்பியம், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3132 மில்லியன் கனஅடியாக உள்ளது.

    ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

    தொடர்ந்து ஏரியை கண்காணித்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல்.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது70). அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் தனது சைக்கிளில் பெட்டேரால் பங்க் நோக்கி சென்றார். வல்லூர் சந்திப்பில் வந்தபோது சென்னை துறைமுகம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஆசீர்வாதம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லும் போது குண்டும் குழியுமான சாலையில் மண், தூசி பரந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், கண்டெய்னர் லாரிகளை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி பொன்னேரி- திருவெற்றியூர் சாலையில் திடீர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் சிறை பிடித்தனர். வாகனங்கள் மணலி புதுநகர் சாலை, மீஞ்சூர் சாலையில் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதேபோல் மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை குருவி மேடு சாலையில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் மிகவும் பழுதடைந்து வீடுகள் முழுவதும் தூசி படிந்து சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தூசு பறக்கும் சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் குருவி மேடு கொண்டக்கரை-மணலி புதுநகர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 போலீசாருக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் விழுப்பரம், திருவண்ணாமலை, சேலம், கடலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், ஆவடி, சேலம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளை சேர்ந்த 429 பேருக்கு காவலர் பயிற்சி மற்றும் நீச்சல், ஓட்டுனர், முதலுதவி, தீயணைப்பு, கமாண்டோ மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    பயிற்சி வகுப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த இரண்டாம் நிலை காவலர் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், கனகவல்லிபுரம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான வீரபெருமாள், திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் பேசியதாவது:-

    தமிழ்நாடு காவல்துறையில் இளம் காவலர்கள் இணைந்து உள்ளனர். இந்த 429 பயிற்சி பெற்ற காவலர்களை மட்டுமல்லாது அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்துகிறேன். இந்த பயிற்சி பள்ளியில் 429 பேரில் 204 பேர் பட்டப்படிப்பு, 27 பேர் மேல்பட்டபடிப்பு, 83 பேர் பொறியியல். 57 பேர் பட்டயபடிப்பு, 5 பேர் ஐ.டி.ஐ. படிப்பு, 3 பேர் உடற்பயிற்சியில் பட்டய படிப்பு, 45 பேர் மேல்நிலை வகுப்பு, 9 பேர் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார்கள்.

    இது மிகப்பெரிய மாற்றமாகும். ஒரு காலத்தில் 8-ம் வகுப்பு படித்து போலீஸ் பணியில் சேர்ந்தனர். போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது. இது பொதுமக்களிடையே போலீசாரின் மதிப்பை அதிகப்படுத்தும்.

    பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நியாயமான சட்டத்திற்கு உட்பட்டு, எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிற்சி கல்லூரி துணை முதல்வர் கணேஷ் குமார், கவாத்து பயிற்சியாளர் பாஸ்கர், முதன்மை சட்ட பயிற்சியாளர் கலிய சுந்தரம் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×