search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாலூர் அண்ணாநகர், கம்மார்பாளையம், தெலுங்கு காலனி, கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கண்டெய்னர் யார்டு,குளிர்பதன கிடங்குகளுக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் சேதமடைந்த சாலை தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்க லாயக்கற்று மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் 12 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரியும், கண்டெய்னர் யார்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதை கண்டித்தும், உயர்மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை அகற்ற கோரியும்,தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த லாரியை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வட்டாட்சியர் மதிவாணன் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
    • புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி-9 செ.மீ., சோழவரம்-4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

    புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கனஅடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    • தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
    • கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.

    தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.

    • 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது.
    • குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை திருவள்ளுர் மாவட்ட நியமன அலுவலர் கலந்தாய்வு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த கூட்டாய்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 32 கடைகளில் சுமார் 273 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    மேலும் ஏற்கனவே விற்பனை செய்து அபராதம் விதித்த போதும் 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதை கண்டறிந்தால் உடனடியாக நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியான Tnfood safety consumer app மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல், https://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மற்றும் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

    மாவட்டம் முழுவதும் அதிலும் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் குட்கா, புகையிலையால் ஏற்படும் தீங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளிகளில் தொடர்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களின் பயன்பாட்டை கண்டறிந்து பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மற்றும் பயணவழி உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமாக உணவு வழங்குதலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.
    • 28-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 22-ந்தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் கோவிலுக்கு சென்று, சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து செல்வர்.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முதல் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த தங்க கவச தரிசனம் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறும்.

    28-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 22-ந்தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.

    தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும். முகம் மற்றும் பாதத்தை பக்தர்கள் தரிசித்துச் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் கழிவுநீர் வாகனங்களை இயக்குவ தற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிய ஆவ ணங்கள் மற்றும் அனு மதியின்றி இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் ஏற்க னவே நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா எச்ச ரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க ளில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து நேற்று இரவு திருவேற்காடு நகராட்சி சுகாதார அலு வலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த கழிவுநீர் அகற்றும் லாரி குறித்து விசாரித்தனர். விசாரணை யில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த கழிவுநீர் அகற்றும் வாகனம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த வாகனத்தின் உரிமை யாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அந்த மருத்துவ மனை வளாகத்தில் தேவையின்றி வைக்கப்பட்டி ருந்த பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தேவையற்ற அந்த பொருட்களை அங்கி ருந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வா கத்திற்கு அறிவு றுத்தப் பட்டது. தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் அந்த மருத்துவ மனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்
    • ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.

    தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


    இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போது போகும்போதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரெயில்வே போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்த தீர்வு ஏற்படும்.

    • ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரடியாக சென்று சோதனை நடத்தி அவர்களது நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் ஆவடி பகுதியில் 1100 ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை சுமார் 1,100 ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப்பட்டு 980 வீடுகள் மற்றும் தங்குமிடங்கள் சோதனையிடப்பட்டது. இதில் கத்தி, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    சுமார் 287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் 479 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. 141 ரவுடிகள், 46 திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளிகள், 40 போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் 13 இதர முக்கிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என சுமார் 240 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரவுடிகள் மீதான வழக்குகளை கண்காணித்து, தலைமறைவான எதிரிகளை பிடிக்கவும் அவர்களை நீதிமன்ற விசாரணையின்போது தொடர்ந்து ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடிக்கவும், தண்டனை பெற்று தரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிணையில் உள்ள ரவுடிகளின் பிணைகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி மாமுல் வசூலிக்கும் ரவுடிகளின் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு அவர்கள் பெற்ற பணத்தில் அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த துரைராஜ் மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • விபத்து குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, மடவிளாகம் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). கூலித் தொழிலாளி. இவர் பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த துரைராஜ், மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் துரைராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்திஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எரிபொருள் படி ரூ. 2500 வழங்க வேண்டும். 1.1.2004 வருடத்துக்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லாலாஜி, பொருளாளர் முனிவேல், துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் குணசேகர், சுரேஷ்குமார், பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது.
    • தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(32), மெக்கானிக்கான இவர் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது மற்றும் வாட்டர் வாஷ் செய்யும் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவர் அந்த எந்திரத்தை கீழே வீசினார். இதில் தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    • திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
    • நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. வீடுகள், வணிக வளாகம், அரசு கட்டடங்கள் என, 12 ஆயிரத்து 724 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளது. சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை, வாடகை உள்ளிட்ட வகையில், நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 11 கோடியே 38 லட்சத்து 87 ஆயிரம் வரி வசூலாக வேண்டும். இதில் வசூலாகும் தொகையில், 50 சதவீதம், நகராட்சி ஊழியர்களின் சம்பளம், மின் கட்டணம், அலுவலகம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவாகிறது. மீதம் உள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்துவதில்லை.

    இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், கடைகள் தோறும் சென்று தொழில் வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தினை விநியோகம் செய்தனர். வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா கூறியதாவது:-

    திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம், 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில்1,245 தொழில் நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம் உள்ள 1,669 தொழில் நிறுவனங்கள், கடைகள் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.

    பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் என, வசூலாகும் நிதியில் தான் நகராட்சியில் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தாததால், நகராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மக்கள் நலத்திட்ட பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே, நகராட்சியில் உள்ள, வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்படுவதுடன், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×