search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • இருவருக்கும் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    சேலம் மாவட்டம் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது54). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது நண்பரான சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த அங்குஸ் (39) என்பவருடன் காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காரில் ஊர் திரும்பினர். காரை சேலம் மாவட்டம் சின்னநாயக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த சான்பாட்சா (36) ஓட்டிவந்தார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது சேத்தூரை அடுத்த கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு அருகே கார் திடீரென எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணித்த செல்வம், அங்குஸ், டிரைவர் சான்பாட்சா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரித்தனர். மற்ற இருவருக்கும் முதலுதவிஅளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விருதுநகர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டனர். பலர் வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சாப்பிட்டனர்.


    பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    17 பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட கட்சியினரும், அவர்களது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பொதுக்கூட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததால் கெட்டுபோன இறைச்சி சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.

    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள் உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான மண்பாண்ட பாத்திரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. முன்னோர்கள் சமையல் பாத்திரமாக இதனை பயன்படுத்தி உள்ளனர்.

    சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    • ஒரு சில விநாடிகளில் கைகலப்பாக மாறியது.
    • போலீஸ்காரர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

    அருப்புக்கோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் காளிக்குமார் (வயது 33), ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீஸார் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

    ஆனாலும் அதனை ஏற்காத போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலை மறியல் செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீஸ் டி.எஸ்.பி. காயத்ரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு சில விநாடிகளில் கைகலப்பாக மாறியது.

    ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியை கூட்டத்தில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் பிடித்து இழுத்தார். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதேபோல் போலீஸ்காரர் ஒருவரும் இதில் தாக்கப்பட்டார்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தார். பெண் டி.எஸ்.பி.யை தாக்கியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாராணை நடத்தி வந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்டதாக மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்.
    • போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காளிகுமார் நேற்று அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றனர்.

    அப்போது கடும் கோபத்தில் இருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவில் இருந்த ஒரு சிலர் டி.எஸ்.பி. காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

    அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.
    • 10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல்நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.

    இன்று காலை 6.20 மணிக்கு வனத்துறையினர் நுழைவுவாயில் திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

     

    மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

    மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

    மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் சிறிதளவு தண்ணீர் சென்றது. அதில் சில பக்தர்கள் குளித்துவிட்டு மலையேறி சென்றனர். நடக்க முடியாத வயதான வர்கள் டோலி மூலம் சுமை தூக்கும் தொழிலாளிகள் சுமந்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

    இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.

    சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • குருமூர்த்தியிடம் சிலர் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டனர்.
    • தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 48). இவர் ராஜபாளையத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

    மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளராகவும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    குருமூர்த்தி தனது அலுவலகத்தை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் காம்ப்ளக்சில் அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார்.

    இதற்கிடையே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு வரும் நபர்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக குருமூர்த்திக்கும், மற்ற பயிற்சி பள்ளிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது. சிலர் குருமூர்த்தியிடம் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள் பட 6 பேர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் குருமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர் கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் பவுல் ஏசுதாஸ், பலத்த காயம் அடைந்த குருமூர்த் தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் குருமூர்த்தி தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தலைமறைவான வேல்முருகன் உள்பட 6 பேர் கும்பலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளைத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    • விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் எஸ். ராமலிங்கபுரம் சாலையில் மருத்துவ துணி சலவை செய்யும் ஆலை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் ஜெயபாலன் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் மருத்துவ துணி உற்பத்தி ஆலைகளில் இருந்து கிரே கிளாத் எனப்படும் மருத்துவ துணியை வாங்கி தனது ஆலையில் அதனை சலவை செய்து வெண்மையாக மாற்றி வழங்கி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவில் ஆலையில் கிரே கிளாத் பண்டல்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே அறையில் 100-க்கும் மேற்பட்ட பண்டல்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் ஒரு பகுதியில் பற்றிய தீ மள மளவென அனைத்து பகுதிகளிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளனர். எனவே பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி சக்தி ஸ்தலங்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவை காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு வந்த பக்தர் கள் அம்மனை வேண்டி ஆயிரம் கண்பானை, தவழும் பிள்ளை, கரும்பு தொட்டில் குழந்தை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இன்று மாலை இரண்டு மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் ரிஷப வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் வீதியுலா வந்து ஆற்றில் இறங்கி கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் 4 டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும்.
    • பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

    ×