search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தம்பதியின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விரக்தி மனநிலையில் இருந்து வந்தனர்.
    • திருத்தங்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது50). இவரது மனைவி பழனியம்மாள்(48).

    இதில் லிங்கம் தேவதானம் அரசு பள்ளியிலும், பழனியம்மாள் சுக்கிரவார்பட்டி அரசு பள்ளியிலும் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஆதித்யா என்ற மகனும், ஆனந்தவல்லி என்ற மகளும் இருந்தனர். ஆனந்தவல்லிக்கு திருமணமாகி சசிகா என்ற 2 வயது குழந்தை இருந்தது.

    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தம்பதியின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விரக்தி மனநிலையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று லிங்கம், தனது மகன் ஆதித்யா, மகள் ஆனந்தவல்லி, அவரது குழந்தை சசிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    திருத்தங்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கோடை மழை கொட்டி வருகிறது.
    • சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதத்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாளை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    மலைமேல் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசனம் செய்ய மேற்கண்ட நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகிறார்கள். அதன்படி வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று (20-ந் தேதி) முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கோடை மழை கொட்டி வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


    பாப்பநத்தன் ஓடை, வழுக்குபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. நேற்று மாலையில் இருந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் 5 மணி நேரம் கனமழை பெய்ததால் ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை கருதி பவுர்ணமி தரிசனத்துக்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை சதுரகரி செல்ல கார், பஸ் மூலம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவேரிப்பாக்கம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் 70 பேர் வரை அடிவாரமான தாணிப்பாறைக்கு வந்தனர். ஆனால் மழை காரணமாக அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதையடுத்து அவர்கள் நுழைவுவாயிலில் சூடம் ஏற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

    • பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
    • 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, கண் மாய், வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் தொடங்கி செண்பகத் தோப்பு, அய்யனார்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதி வரை கடுமையான மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் வெளியேறி தங்கு தடை இன்றி அடிவாரத்தை நோக்கி வருகிறது.

    குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. அதேபோல் பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

    இதற்கிடையே செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்ட போது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    மேற்கண்ட இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்க ளாகவும் விளங்குகிறது. கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.

    வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோவில் ஆறு, அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் அருவி, செண்பகத் தோப்பு மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு முழு வதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்ய னார் கோவில் ஆறு, செண் பகத்தோப்பு பேயனாறு மற்றும் அதனைச் சார்ந்த நீர்வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதன் மூலம் தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ராஜபாளையம் அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில், சாஸ்தா கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தி மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதேபோல் அந்த பகுதியில் மலைப்பகுதியில் வேலைக்குச் செல்பவர்களும் பத்திரமாக சென்று வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வருகிறார். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்க ளில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    • ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதாக கருதி கடந்த மார்ச் 1-ந்தேதி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் ஆலை செயல்படுவது போல் தினமும் பலர் அந்த ஆலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோத மாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில் தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.

    இந்த ஆய்வில் 50 தொழி லாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறி யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் மாரனேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய பயிற்சி பெற்ற போர்மேன்களை மட்டுமே பணியில் அமர்த்தி உரிய விதிமுறைகளை பின்பற்றி அவரது மேற்பார்வையில் மருந்து கலவை செய்ய வேண்டும் என்று கலெக்டர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இதில் முரண்பாடு இருந்தால் ஆலை மீதும், அந்த போர்மேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    சிவகாசி:

    சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறியதாக இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த பட்டாசு ஆலையை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக வருவாய் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்த செங்கமலபட்டி கிராம மக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க மர்ம கும்பல் வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கொள்ளையர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கிராம மக்கள் ஒப்படைத்த மோட்டார் சைக்கிளில் ஒரு மோட்டார் சைக்கிளில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த போலீஸ் வாகனத்தை விசாரித்து வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை முயற்சி நடைபெற்ற செங்கமலபட்டி பட்டாசு ஆலையில் தற்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பட்டாசு ஆலையில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் பழைய அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், கட்டடம் எழுப்பியுள்ளார்.
    • வீடு சரிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர பாண்டியன். இவர் வசித்து வந்த வீடு 1988-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த வீட்டின் பழைய அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், கட்டடம் எழுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று பெய்த லேசான மழையில் பழைய அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விபத்துக்குள்ளானது.

    2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விழும்போழுது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வீடு சரிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
    • காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசு ஆலையில் இருந்த 10 அறைகள் தரைமட்டமாகின.
    • மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 13 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு விதிமீறலே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆலையின் போர்மேன், குத்தகைதாரர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
    • தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 57). அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.

    நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். அங்கு நேற்று மதியம் 2.10 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியது. அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இதில் ஆலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் அடைந்தன. 8 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின. வெடி விபத்து நடந்ததும் அறைகளில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தப்பி ஓடினர். அவர்களில் சிலர் வெடிவிபத்தில் சிக்கினர். பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டனர்.

    இந்த பயங்கர வெடி விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இதில் பெண்கள், ஆண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் சிலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில் ஆலை ஒப்பந்ததாரார் முத்து கிருஷ்ணனை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • விபத்து ஏற்பட்ட ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
    • ஒவ்வொரு அறையிலும் 3 முதல் 4 தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7  தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு அறைகள் தரைமட்டமாகின.

    தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • பக்தருக்கு சிறிது அசவுகரியம் ஏற்பட்டாலும் வத்திராயிருப்பு மற்றும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது.முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கை யுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.

    பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை யேறும்போது சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுவதும், நெஞ்சுவலி ஏற்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே மலையடிவாரத்தில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த முறை மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. பக்தருக்கு சிறிது அசவுகரியம் ஏற்பட்டாலும் வத்திராயி ருப்பு மற்றும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களின் உயிருக்கு மதிப்பு அளித்து வருங்காலங் களில் தாணிப்பாறையில் மருத்துவ குழுவினரை பணியமர்த்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது.
    • அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களையொட்டி தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் தங்களை விரைவாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறியதையடுத்து காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை சோதனை செய்யப்பட்டது. அப்போது பாலித்தீன் கேரிபை, பீடி, சிகரெட், மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என வனத்துறையினர் சோதனை செய்த பின்பு பக்தர்கள் அனுமதித்தனர்.

    இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இன்று காலை வெயில் இல்லாத நிலையில் பக்தர்கள் வேகமாக மலையேறிச் சென்றனர். வெயில் தாக்கம் காரணமாக விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையிலே காணப்பட்டது.

    வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை மறுநாள் சித்திரை மாத அமாவாசை தினத்தன்றும் பக்தர்கள் அதிகம் வர வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கூறினர். கோவிலுக்கு செல்கின்ற வழியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்க சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    ×