search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தமிழக காவல்துறை அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.

    இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

    வேலூர் :

    வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படலாம் என, ஆட்சியருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், கடந்த ஆண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டதன் அடிப்படையில், புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் ரன்பீர் கபூர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து ரன்பீர் கபூர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    ரன்பீர் கபூர்

    இதையடுத்து நடிகர் ரன்பீர் கபூர் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கங்குலியை, ரன்பீர் கபூர் சந்தித்து பேசியதை வைத்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி பல தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூரிடம், கங்குலி வாழ்க்கை படம் குறித்து கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, "கங்குலி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் இந்த படத்தில் இடம்பெறவில்லை. எனக்காக காதல் கதைகளை தான் இயக்குனர்கள் எழுதி வருகிறார்கள் என நினைக்கிறேன்'' என்று கூறினார்.

    • தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர் சிம்பு.
    • இவர் இலங்கை பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

    தற்போது இவர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாற்பது வயதை நெருங்கியும் சிம்புவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதற்கு முன்பு இவர் பல முன்னணி நடிகைகளுடன் பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.


    சிம்பு

    சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் சிம்புவிற்கு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை அவரது வீட்டார் பார்த்துள்ளதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது.

    இந்நிலையில், இந்த செய்திக்கு சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக பரவிய செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம் என்றும் அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் ஊடகத்திடம் சொல்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 நாட்கள் ஆகியும், ரெயில் சேர வேண்டிய இடத்தை சென்றடையவில்லை என தகவல்
    • உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு செய்தியை வெளியிட வேண்டும் என்று ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

    நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரெயிலை காணவில்லை என இணையதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மிஹான் சரக்கு மையத்தில் இருந்து கடந்த 1 தேதி பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட அந்த ரெயில் நான்கைந்து நாட்களுக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் சென்று சேர்ந்திருக்க வேண்டும். புறப்பட்டு 12 நாட்கள் ஆகியும், ரெயில் சேர வேண்டிய இடத்தை சென்றடையவில்லை எனவும் காணாமல் போனதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    "பிப்ரவரி 1 ஆம் தேதி நாசிக் மற்றும் கல்யாண் இடையே ஊம்பர்மாலி நிலையத்தில், கடைசியாக சரக்கு ரெயில் வந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அதன்பிறகு அதன் இருப்பிடம் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை" என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    ஆனால் சரக்கு ரெயில் காணாமல் போனதாக பரவி வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என ரெயில்வே நிர்வாகம் கூறி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரெயில்வே நிர்வாகம், ரெயில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு செய்தியை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. தவறான தகவல் பரவியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது
    • இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்று கூறி உள்ளது

    மின் கட்டணம் செலுத்த தவறுவோரின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என்று, கடந்த சில மாதங்களாக போலியான தகவல் பரவி வருகிறது. மக்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இந்த தகவல் வலம் வருகிறது.

    'வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவு 8.30 மணியளவில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாரியங்கள் அல்லது மின்விநியோகஸ்தர்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான மொத்த மின்கட்டணத் தொகை மற்றும் நிலுவைத் தேதி குறித்து எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கின்றனர். இதே பாணியில் இந்த போலி செய்தியும் உள்ளது. இதனால் பலர் உண்மையென நம்பி ஏமாந்துவிடுகின்றனர்.

    தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அரசு காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், இந்த தகவல் போலி எனவும், இந்த குறுந்தகவலை பயனாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

    மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் தகவலுக்கு பதில் அனுப்பினால், மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்துகொண்டு, பணத்தை திருடிவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது.
    • மத்திய கல்வி அமைச்சகம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கல்விக் கொள்கையின்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது என சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

    'புதிய கல்விக் கொள்கைக்கு சில மாற்றங்களுடன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மாற்றங்களின்படி, இனி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இல்லை, எம்ஃபில் படிப்பு நிறுத்தப்படும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும்' என அந்த வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி பலமுறை அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது.

    இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அதில், 10வது வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது எனக் கூறும் வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி போலியானது என்றும், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகையில் கிடைப்பதாக தகவல் வைரல்.
    • இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் 2019 வாக்கில் ரூ. 24 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் இந்திய சந்தையில் ரூ. 999 விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த தகவல்களின் படி ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 18 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. உண்மையில் ஏர்பாட்ஸ் ப்ரோவுக்கு இவ்வளவு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என தேடினோம்.

    அதன்படி வைரல் தகவல்களில் உள்ளதை போன்று ப்ளிப்கார்ட் தளத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை தேடினோம். அதில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 18 ஆயிரத்து 999 விலையில் பட்டியலிடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இதிலேயே வைரல் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்த சலுகை தவறானது என உறுதியாகி விட்டது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை வழங்கப்படுகிறது. இது கோடக் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். வைரல் தகவல்களில் ரூ. 999 விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ கிடைப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ப்ளிப்கார்ட் வழங்கும் எக்சேன்ஜ் சலுகை குறிப்பிடப்படவில்லை.

    ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் தங்களின் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அந்த வகையில், தள்ளுபடி சலுகை சேர்க்கும் பட்சத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோவை ரூ. 999 விலையில் வாங்கிட முடியும். மேலும் எக்சேன்ஜ் சலுகையை முழுமையாக பெற சீராக இயங்கும் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்ய வேண்டும்.

    அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மாடலை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 17 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி பெறலாம். ஒருவேளை பயனர்கள் தங்களினை ஐபோன் 12-ஐ எக்சேன்ஜ் செய்து ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்கினாலும், ரூ. 1000 செலுத்த வேண்டும். எக்சேன்ஜ் சலுகை இன்றி ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் வங்கி சலுகையின் படி குறைந்த பட்சம் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்க முடியும்.

    இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் 2019 வாக்கில் ரூ. 24 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும் என ஆப்பிள் அறிவித்து இருந்தது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஆப்பிள் H1 சிப் உள்ளது. மேலும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • பிபிசி ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
    • ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர்.

    2002 குஜராத் கலவரத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது. தொடர்ச்சியான காலத்துவ மனநிலையை இந்த ஆவணப்படம் பிரதிபலிப்பதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், தடையை மீறி பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.

    இந்த சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிற்பதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ள தகவல் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர்.

    எனவே, இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, ராகுல் காந்தியுடன் நிற்பது பிபிசி ஆவணப்பட இயக்குனர் அல்ல, பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா என்பது தெரியவந்தது.

    கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடியபோது இந்த புகைப்படம் பற்றிய உண்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றன. இதே புகைப்படத்துடன் மே 2022 முதல் வெளியிடப்பட்ட அந்த செய்திகளில், லண்டனில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த புகைப்படம் 2022ம் ஆண்டு மே 23ம்தேதி இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.

    ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த ஆவணப்படத்துடன் ஜெர்மி கார்பினுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

    எனவே, சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

    • தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல.

    நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் ஜனவரி 23-ந் தேதி அன்று கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஐபிஎல் போட்டிக்கு பிறகு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஆடம்பர வீடு (50 கோடி) முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து ஆடம்பரமான கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் பைக்குகள் வரை புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமண பரிசு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

    இது குறித்து அதியா ஷெட்டி குடும்பத்தினர் கூறியதாவது:-

    வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல. இது போன்ற தவறான தகவல்களை பொதுகளத்தில் வெளியிடும் முன் எங்களுடன் விவரங்களை உறுதிப்படுத்துமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இது சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நிறுத்தும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறினார்
    • கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கும்போது தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்ந்நிலையில், ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியில் வந்ததும் தேசிய கீதம் இசைப்பதைக் கேட்டு சட்டசபை வாசலில் நின்று மரியாதை அளித்தார் என்றும், இதனைப் பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் அவருக்கு மரியாதை கொடுத்ததாகவும் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆளுநருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமென்ட் செய்கின்றனர். ஆளுநர் "தேசிய கீதத்திற்கு" மரியாதை செலுத்தினார். மறைக்கப்பட்ட உண்மை... இதை ஏன் தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தேடியபோது, அது பொய்யான தகவலை இணைத்து பரப்பப்படும் வீடியோ என்பது தெரியவந்தது. சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு அளிக்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை" என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை, ஆளுநர் உரையுடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம், என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறும்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல, அது ஆளுநர் சட்டசபை வருகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டதாக கூறி ட்விட்டரில் தகவல் வெளியானது
    • மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ.5.5 கோடி செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

    குஜராத் மாநிலம், மோர்பியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த நடைபாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மோர்பிக்கு சென்று பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.

    அவர் வந்து சென்ற சில மணி நேரத்திற்காக குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்திருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இதுபற்றி தகவல் பெறப்பட்டதாக கூறி சகத் கோகலே என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    அதில், ``பிரதமர் மோடி சில மணி நேரம் வந்து சென்றதற்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த 135 பேரின் குடும்பங்களுக்கு மொத்தமே ரூ.5 கோடிதான் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு, நிகழ்ச்சி மேனேஜ்மெண்ட் மற்றும் போட்டோகிராபிக்கு மட்டுமே 5.5 கோடி செலவு செய்துள்ளனர்'' எனப் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவு வைரலான நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. அதில், சகத் கோகலே வெளியிட்ட தகவல் உண்மையல்ல என தெரியவந்தது.

    இதுதொடர்பாக PIBFactCheck தனது ட்விட்டரில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் "ஆர்டிஐ சொன்னதாக மேற்கோள்காட்டி, ஒரு ட்வீட்டில் பிரதமரின் மோர்பி வருகைக்கு சில மணி நேரத்துக்கு ரூ.30 கோடி செலவானது என்று கூறப்பட்டது. அந்த தகவல் போலியானது. இது குறித்து RTI பதில் எதுவும் வழங்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.

    ×