search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
    • படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    பாகூர்:

    புதுவை அடுத்த பாகூர் தாமரைகுளம் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாகூர் முருகன் கோவிலில் இருந்து குருவிநத்தம் வழியாக மோட்டார் சைக்கிளில் பாகூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாகூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. மண்டபத்திற்கு வந்திருந்த சிலர் போக்குவரத்து இடையூறாக வாகனங்களில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுரேந்தர் இது குறித்து அவர்களிடம் ஏன் இடையூறு செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு நீ யாருடா எங்களைக் கேட்கிறாய் என்று கேட்டு சுரேந்தரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் அவரது நண்பரான கோகுல் மற்றும் சேகருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சுரேந்தர் நண்பர்கள் அவரை தாக்கியவர்கள் யார் பிரச்சனை எப்படி ஏற்பட்டது என்று கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் இது போல் கேள்வி கேட்டால் உங்களை வெட்டி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    சேகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பாகூர் இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவியது. உடனே 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனியார் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமண மண்டபத்தின் கேட்டை இழுத்து பூட்டினர். பின்னர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் அதை மறுத்தனர். பின்னர் தகவல் அறிந்த தெற்கு பகுதி எஸ்.பி பக்தவச்செல்வம் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னரே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    படுகாயம் அடைந்த சுரேந்தர் இது குறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பாகூர் பகுதியில் நள்ளிரவு 3 மணி நேரம் பதட்டமாக காணப்பட்டது மேலும் பாகூர் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் மணமக்களை மண்டபத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். மேலும் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை போலீசார் தனியார் வாடகை வண்டியை வரவழைத்து போலீசாரே அதனை ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும்.
    • நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    புதுச்சேரி:

    மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2-வது சர்வதேச ஆன்மிக மாநாடு ஆரோவில் யூனிட்டி மையத்தில் நடந்தது.

    இந்த மாநாட்டில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாழ்வில் அமைதி பல நேரங்களில் ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் அமைதியையும், வலிமையையும் நாம் பெற்று வருகிறோம்.

    கடலில் அலையானது எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது. அதே போல வாழ்க்கையில் எப்போதும் பல சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகள் போல் உறுதியாக எதிர்கொள்ளவேண்டும்.

    தற்கால சூழலில் தற்கொலைகள் அதிகம் நிலவுகிறது. அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    காலை தியானத்தோடு யோகா பயிற்சி செய்து வருவதன் மூலம் மிகப்பெரும் மனசக்தியை அடைய முடியும். அதன் மூலம் எத்தகைய சிக்கல்களையும் உங்களால் சமாளிக்க முடியும். இதைத் தான் ஆன்மிகம் சொல்கிறது.

    மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை, பேச்சுக்களை கேட்டால் தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு பெற முடியும். அதன் மூலம் நம்மால் உயரமுடியும். யோகா, தியானம் நமக்கு வலிமையை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக்குழுவில் புதுவையை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் கல்லூரி வேலை வாய்ப்பில் புதுவைக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்தும், ரேஷன்கடைகளை திறந்து பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தாதது, சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவு செய்யாதது, புதிய தொழிற்சாலைகளை அமைக்காதது, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்தும் இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஊர்வலத்துக்காக கடலூர் சாலை ரோடியர் மில் திடலில் காலை 9 மணி முதல் அ.தி.மு.க.வினர் திரள தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் வேன், பஸ் உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

    தொடர்ந்து காலை 11.15 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ரோடியர் மில் திடலில் தொடங்கி, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை பின்புறத்தை அடைந்தது. அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
    • மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.

    ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

    வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.

    புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.

    இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிட செய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சியான பா.ஜனதா வெற்றிபெற பாடுபடுவோம் என முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிதலைவருமான ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் தெரிவித்தார். இதனால் பாஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியங்களிலும் பிரபலமானவர்களை நிறுத்தினால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். இதை அறிவுறுத்தும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி, பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் தெரிவித்துள்ளார்.

    புதுவை தொகுதியில் பாஜனதா சார்பில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், புதுவை சுயேச்சை எம்.எல்.ஏ., நியமன எம்எல்ஏ, புதுவை நிர்வாகி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் அதையே பிரச்சாரமாக செய்வார்கள். இது வெற்றியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வெளியூர் வேட்பாளர்களை பாஜனதா தவிர்க்கும் என தெரிகிறது.

    அதேநேரத்தில் அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிடசெய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சித் தலைமையிடம் பலரும் கைகாட்டியுள்ளதாக தெரிகிறது.

    ஆனால் அவர் உள்ளூர் அரசியலை விட்டு விலக விரும்பவில்லை என தலைமையிடம் கூறியுள்ளார். அவரை போட்டியாக கருதுபவர்கள் உள்ளூர் அரசியலிலிருந்து, மத்திய அரசியலுக்கு அனுப்ப திட்டமிட்டு அவர் பெயரை வேட்பாளராக சிபாரிசு செய்துள்ளனர்.

    உளவுத்துறை மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பாஜனதா ஏற்கனவே கள ஆய்வு நடத்தியுள்ளனர். ஆர்எஸ்எஸ் இயக்கமும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் பாஜனதா விவிஐபி வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியாக உள்ளது.

    இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயரும் இடம்பெறும் என பாஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுதி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.

    புதுவை:

    புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் பல்வேறு நிறங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வந்தனர்.

    இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

    இந்நிலையில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * புதுச்சேரியில் அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் "ரோடமின்-பி" என்ற நச்சுப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    * பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    * உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம்.

    * மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
    • அடுத்தக்கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் ஆலோசனை நடத்தினார்.

    பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2-வது முறையாக முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை 30 நிமிடம் வரை நீடித்தது.


    கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில்,

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மற்றும் பா.ஜனதாவினரின் எண்ணம் அதுகுறித்து விவாதித்தோம். அடுத்தக்கட்டமாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.

    பா.ஜனதா வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதாவில் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று யார் சொன்னது? அதுபோன்ற குற்றச்சாட்டு ஏதும் இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க, சார்பில் போட்டியிட பலரும் சீட் கேட்டுள்ளனர். நேரம் வரும் போது அதிகாரப்பூர்வமாக அறிப்போம் என்றார்.

    • திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
    • வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    வருகிற 14-ந் தேதி இந்த திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    இது சம்பந்தமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்குகிறோம். நின்றுபோன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம்.

    பிரதமர் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்.

    அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவினை வழங்க உள்ளோம். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 14-ந் தேதி தொடங்க உள்ளோம்.

    இந்த திட்டத்தை காட்டேரிக் குப்பம் அரசுப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த திட்டத்தின்படி வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

    சுமார் 20 கிராம் எடையில் இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்லும்போது சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம் 4 மாதத்துக்கு அரசுக்கு ரூ.90 லட்சம் கூடுதல் செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
    • மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.

    இதை உறுதி செய்யும் வகையில் பா.ஜனதாவின் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி ஆண்டு விழாவின்போது முடிவு தெரிவிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டுவிழாவில் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.

    விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி (பா.ஜனதா) போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். தொண்டர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்தார்.
    • இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தனர்.

    புதுச்சேரி:

    டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சந்தித்தார்.

    புதுவை திரும்பிய கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு நேற்று மாலை வந்தார். மணக்குள விநாயகரை வழிபட்ட அவருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது. மாலையை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் கோவிலை கவர்னர் தமிழிசை வலம் வந்தார். அப்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தனர்.

    அவர்களுடன் கவர்னர் தமிழிசை கலந்துரையாடினார். தொடர்ந்து இத்தாலி சுற்றுலா பயணிகள் கவர்னர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர், காரில் ஏறிய கவர்னர் தமிழிசையிடம் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் காரில் இருந்து இறங்கி பஞ்சாப் சுற்றுலா பயணிகளுடனும் புகைப்படங்கள் எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

    • காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
    • வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது.

    வேட்பாளர் யார்? என இன்னும் முடிவு செய்யப்படாத சூழ்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜனதாவினர் சுவர் விளம்பரங்கள் வாயிலாக தேர்தல் பணியினை தொடங்கியுள்ளனர்.

    தேர்தல் பணியில் முந்திக்கொண்ட பா.ஜனதாவினர் மண்ணாடிப்பட்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.

    அதில் தாமரை சின்னத்துடன் வாசகமும் இடம்பெற்றிருந்தது.

    காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுமாறு கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

    உற்சாகமடைந்த பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி முழுவதும் சுவர் விளம்பரம் வரையும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    அதற்கு முன்னதாக திருக்கனூர் கடைவீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 62 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 78 லட்சம் உதவித்தொகை வழங்கும் பணி ஆணையினை அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளிடம் வழங்கினார்.

    வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .

    எதிர்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    ×