search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    • குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.
    • நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

    புதுச்சேரி:

    மருத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுவது வாடிக்கை. ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்க ரோபோ பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது.

    ஆம்... புதுச்சேரியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்தினர்களை ரோபோ ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்றது பிரமிக்க வைத்தது.

    புதுச்சேரியில் நேற்று 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் வருகை தந்த விருந்தினர்களை ரோபோ ஒன்று வரவேற்றது.

    பெண் போன்று பாவாடை, தாவணி மற்றும் தலையில் தொப்பியுடன் மிடுக்காக காணப்பட்டது. தட்டில் கொடுக்கப்பட்ட ரோஜா பூ, சாக்கெட் ஆகியவற்றை விருந்தினர்களை தேடிச்சென்று வழங்கியது. மேலும் மக்கள் விரும்பும் பாடல்களை அது இசைக்க செய்தது. குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.

    சூறாவளி போல் சுற்றி சுற்றி வலம் வந்த ரோபோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

    மும்பை மற்றும் ஐதராபாத்தை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த ரோபோவை 3 மாதத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர்.

    இதனை முதல் முறையாக புதுச்சேரியில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    • கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.

    கடந்த தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 2 தொகுதியிலும், தி.மு.க. 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    இதனால் தங்கள் கட்சிக்கே பலம் உள்ளதாக கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.


    அதே வேளையில் சிட்டிங் எம்.பி. என்ற பெயரில் காங்கிரசே போட்டியிடும் என்று அக்கட்சி தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு அப்போதைய கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் கமிஷன் அரசு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுவார். அவரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவரை அபார வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரசில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் உள்ளனர்.

    பா.ஜனதாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே பா.ஜனதா தொடங்கிவிட்டது. தொகுதிதோறும் மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பை மத்திய மந்திரி எல்.முருகன் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கட்சி நிர்வாகிளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

    இருப்பினும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. 4 பிராந்தியங்களிலும் அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். அத்தகைய வேட்பாளரை போட்டியிட செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிற மாநிலங்களைப்போல இல்லாமல், புதுச்சேரி ஒரு தொகுதிதான். அதையும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதா? என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் வெளி மாநிலத்தினரை புதுவை மக்கள் ஆதரிப்பார்களா? என்ற தயக்கமும் பா.ஜனதாவுக்கு உள்ளது.


    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, பா.ஜனதா வேட்பாளருக்காக ஒரு பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    என்ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தயவு இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமான காரியமாகும்.

    அதோடு அவர் பரிந்துரைக்கும் வேட்பாளர் என்றால் தேர்தல் பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்வார்.

    இது பா.ஜனதாவின் வெற்றி மேலும் பிரகாசமாகும். ஏற்கனவே ராஜ்யசபா பதவியை பா.ஜனதாவுக்கு தர முதலமைச்சர் ரங்கசாமி முன்வந்தார். அப்போது 3 பேர் கொண்ட பட்டியலை பா.ஜனதா தலைமை அளித்து அதில் ஒருவரை எம்.பி.யாக தேர்வு செய்ய பரிந்துரைக்கும்படி கேட்டது. அதனடிப்படையில்தான் தற்போதைய பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.


    2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி.யை முதலமைச்சர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தார். அப்போதும் அவருக்கு நெருக்கமான கோகுல கிருஷ்ணனை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. யாக்கினார்.

    இதேபோல தற்போதும் பாஜனதா வேட்பாளராக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். இது பா.ஜனதா தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமை முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்றால், அவர் பா.ஜனதா வேட்பாளராககளம் இறங்குவார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
    • தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடற்கரையையொட்டி கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

    ஒயிட்டவுண் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு காலனி பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடந்தது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் புதுச்சேரியில் போலீசார் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    இதற்காக புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதேபோல் மின்சாரமும் தடை செய்யப்பட்டது.

    அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையின்போது துப்பாக்கி சுடும் சத்தமும், வெடிகுண்டு சத்தமும் அவ்வப்போது கேட்டது. விடிய விடிய இந்த சத்தம் ஒலித்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

    இந்த தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன. அதேபோல் அப்பகுதியில் டிரோன்கள் மூலமாக பயங்கரவாத கண்காணிப்பு பணி நடந்தது.

    பின்னர் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை என்று தெரிந்த பின்னரே அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்தனர்.

    இதேபோல் கடற்கரைக்கு ஒயிட் டவுண் வழியாக சென்ற சுற்றுலா பயணிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.

    இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை அதிகாலை வரை நீடித்தது. விடிய விடிய நடந்த இந்த ஒத்திகையால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதாவது கைதிகளுக்கு யோகா, ஓவியம், சிற்பம் ஆகிய பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் உடற் பயிற்சி மற்றும் நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறை சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கரில் கைதிகளால் துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டு, 60 வகையான பழம், மூலிகை , காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவர்கள் இது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகரை சந்தித்து பேசினர்.


    இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜிப்மர் டாக்டர்கள், காலாப்பட்டு சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்து பேசினர். அப்போது 57 தண்டனை கைதிகள், 89 விசாரணை கைதிகள் என 146 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் 2 அதிகாரிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஜிப்மர் டாக்டர்கள் அவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

    உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    • 5 மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
    • மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் கடற்கரை பகுதியான காரைக்கால் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.

    மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நிலையில் இந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

    • கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.
    • கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்பது கவர்னரையே குறிக்கும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை கூறும் அவையாகத்தான் கருதப்படுகிறது.

    இதனால் எந்த புதிய திட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் அதிகாரிகள் வழியாக கவர்னர் ஒப்புதல் பெற்றால்தான் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.

    திட்டங்களில் சில சந்தேகங்களை கேட்டாலும், அதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

    2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஆட்சியாளர்கள், கவர்னர் இடையே பெரும் மோதல் உருவெடுத்தது.

    ஆட்சியாளர்கள் ஒரு தரப்பாகவும், கவர்னர் தலைமையில் அதிகாரிகள் ஒரு தரப்பாகவும் இரண்டாக பிரிந்தனர். இதனால் கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    இதன்பிறகு மத்திய அரசின் கூட்டணி அரசே புதுச்சேரியில் அமைந்தது. இதனால் இந்த மோதல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகளுடனான மோதல் நீடித்தது.

    தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலருக்கு எதிராக போர்க்கொடியும் தூக்கினர்.

    எந்த திட்டத்துக்கான கோப்பை அனுப்பினாலும், அத்திட்டத்துக்கு பல்வேறு கேள்விகளை கேட்டு கோப்பை திருப்பி அனுப்பு வதாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே அதிகாரிகள் மாற்றத்தில் முதல்-அமைச்சரோடு கலந்து பேசாமல் தன்னிச்சையாக தலைமை செயலாளர் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து தலைமை செயலர் முதல்-அமைச்சரிடம் நேரில் விளக்கமளித்தார். இதனால் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை செயலாளரை மாற்றித்தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா சண்டிகர் மாநில அரசுக்கு ஆலோசகராக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள சரத் சவுகான் புதுவை தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுத்ரிஅபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அந்தமான் தீவில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கோவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அருணாச்சல பிரதேச அதிகாரி தால்வ்டே புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை யாரை கலெக்டராக நியமிப்பது என்பது அரசின் முடிவாகும். எனவே புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தால்வ்டே கலெக்டராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த அதிகாரிகள் மாற்றம் புதுச்சேரியில் ஆட்சியாளர்கள்-அதிகாரிகளிடையே நிலவிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • வெளி மாநிலத்தை சேர்ந்த யாரும் புதுவையில் போட்டியிடவில்லை.
    • பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளது.

    தேர்தலில் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் குடியுரிமை பெற்று வாக்காளர் அட்டை வைத்துள்ளவர்கள் எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம். பிரதமர் மோடி குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதேபோல கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்கள்.

    தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மோகன்குமாரமங்கலம் புதுவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த 2004-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் புதுவையில் லலிதா குமார மங்கலம் போட்டியிட்டார். அதன்பிறகு வெளி மாநிலத்தை சேர்ந்த யாரும் புதுவையில் போட்டி யிடவில்லை.

    சிறிய மாநிலமான புதுச்சேரியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதிப்பதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானமாக இருக்கின்றனர். புதுச்சேரியை சேர்ந்தவர்தான் எம்.பி.யாக வேண்டும் என உறுதியாக இருப்பர்.

    இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவர்னர் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியானது.

    அப்போதே உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தற்போது நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல் புதுவை பா.ஜனதா நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கட்சித்தலைமையிடம் புதுவையை சேர்ந்தவர்களே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    • சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • புதுவையில் பணியாற்றும் ஒரு வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபடுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கியது. மத்திய மந்திரி எல்.முருகன் மாதம் 2 முறை புதுவைக்கு வந்து பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார். தொகுதி தோறும் சென்று பொதுமக்களையும் சந்தித்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் இவர்தான் பொறுப்பாளராக செயல்பட்டு புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைய திட்டம் வகுத்தார்.

    தற்போது பா.ஜனதா பொறுப்பாளராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டது புதுவை பா.ஜனதாவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதேநேரத்தில் புதுவையில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


    சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஒரு சிலர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறியுள்ளார். ஏற்கனவே கவர்னர் தமிழிசை, புதுவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவை தொகுதியில் களம் இறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபோல் புதுவையில் பணியாற்றும் ஒரு வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபடுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பா.ஜனதாவினர் உள்ளனர்.

    ×