search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.
    • புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாக குழு கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    தேர்தல் தோல்வியை மறைக்க என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா உட்கட்சி பிரச்சனை என்று நாடகமாடுகிறார்கள் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.

    ஆட்சி ஆளும் தார்மீக உரிமையை இழந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த மக்கள் விரோத என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.

    மக்களை பாதிக்கின்ற 3 குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டாம் என்றும் அதற்காக போராடும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 65 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    • 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
    • காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.

    இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர் மணல் லாரியால் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.
    • ஓட்டுநர் உரிமம் உட்பட ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்குவது தெரிந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதிகளில் இருந்து சாலை மற்றும் ரெயில்வே பணி விரிவாக்க பணிகளுக்காக தினந்தோறும் மணல் ஏற்றிக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது.

    இந்த லாரிகள் எந்தவித சாலை விதிகளையும் பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. லாரிகளில் இருந்து வெளியேறும் மண் புழுதிகளால் எதிரில் வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    அதிவேகமாக சென்று வரும் லாரிகளால் விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர் மணல் லாரியால் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

    பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வரும் நேரத்தில் அதிவேகத்தில் மணல் லாரி இயக்கப்படுவதாக மாவட்ட போக்குவரத்துத் துறை போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.

    இதனால் காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும் லாரிகள் இயக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. ஆனால் உத்தரவை காற்றில் பறக்க விட்டு மணல் லாரிகள் வழக்கம் போல் பள்ளி விடும் நேரத்தில் அதிவேகமாக இயங்கி வந்தன.

    இதையடுத்து திருநள்ளாறு சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதி தலைமையான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிவேகமாக சென்ற 30-க்கும் மேற்பட்ட லாரிகளை மடக்கிப் பிடித்தனர். இதில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் உட்பட ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்குவது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஆய்வின்போது ஒரு ஓட்டுநர் தனக்கு தெரிந்த வி.ஐ.பி. பேசுவதாக கூறி போனை ஆய்வாளரிடம் கொடுக்க வந்தார். போனை வாங்க மறுத்த ஆய்வாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். பொது மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி லாரிகளை இயக்கினால் இனிவரும் காலங்களில் தண்டனை கடுமையாக இருக்கும் என எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார்.
    • புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரசிடம் ஆளுங்கட்சியான பா.ஜனதா தோற்றதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    அதில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் அரசில் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டா, மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், கட்சி அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறினர். அதோடு ரங்கசாமி அரசிற்கான ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே பாஜக மாநிலதலைவர் செல்வ கணபதி எம்.பி.யின் செயல்பாட்டை முன்னாள் தலைவர் சாமிநாதன் விமர்சித்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் போர்குரல் எழுந்துள்ளது. இதனால் புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியிலும், பா.ஜனதா கட்சிக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பாஜக கட்சியின் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் எம்.எல்.ஏ.க்கள் புகார், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதற்காக புதுச்சேரிக்கு நாளை (திங்கட்கிழமை) வரும் நிர்மல் குமார் சுரானா காலை 10.30 மணிக்கு கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்கிறார்.

    பின்னர் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திப்பார் என கூறப்படுகிறது. கூட்டணி மோதல் மற்றும் உட்கட்சி பிரச்சனையில் சமரசம் காணுமாறு பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு பா.ஜனதா தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை நாளைய ஆலோசனை கூட்டத்தில் சமரசம் ஏற்படாத பட்சத்தில் பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் அடுத்த கட்டமாக புதுவைக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.

    • கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
    • கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன.

    இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.

    அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25-ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.

    அதன் பிறகு சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக்கடைகளும், 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஏலம்போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783-க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877-க்கும், லிங்கா ரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது.

    இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1 என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக்கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.

    • பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின் தொடர்ந்து கடும் வெயில் வாட்டி வருகிறது.

    பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று காலையும் வழக்கம்போல வெயில் கொளுத்தியது. ஆனால் மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தி ருந்தது.

    இதற்கு ஏற்றார்போல நேற்று இரவு 8 மணிக்கு மேல் பயங்கர வெளிச்சத்துடன் மின்னலும், பெரும் சத்தத்துடன் இடியும் புதுவை மக்களை மிரட்டியது.

    இதன்பின் மழையும் கொட்டத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் நகர பகுதியில் பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோடியர் மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் குளம்போல தண்ணீர் தேங்கியது.


    இடி, மின்னல் காரணமாக புதுவை நகரம் மற்றும் ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மர கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மர கிளைகள் விழுந்தது.

    இதேபோல நகரை ஒட்டியுள்ள புநகர் பகுதிகளிலும் மரங்களும், மர கிளைகளும் முறிந்து விழுந்தது. சாய்ந்த மரங்களை புதுவை, கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.

    வழக்கமாக இரவு நேரத்தில் புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். ஆனால் நேற்று கடுமையான இடி, மின்னல் இருந்ததால் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இன்று காலையில் 10 மணி வரையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும், இதமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. தற்காலிக பஸ்நிலையம் சேறும், சகதியுமாகியுள்ளது. அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது.
    • தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

    தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்ற புதுவை பாஜக, ஆதரவு மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என கட்சி தலைவர் நட்டா, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.

    ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

    அதே நேரத்தில் ஆட்சியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவை சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், 2 நியமன எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்க்கவில்லை. இதனால் புதுவை பா.ஜனதா பிளவுபட்டிருப்பது பகிரங்கமாகியுள்ளது.

    இந்த நிலையில் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கொடுத்த பணியை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். பிரதமர் எந்த வேலை கொடுத்தாலும், சிறப்பாக செய்வோம். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றுள்ளது குறித்து கட்சித்தலைவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம்.

    சிவப்பு ரேசன்கார்டுகள் நீக்கப்படாது. விநியோகம் செய்யப்பட்டுள்ள ரேசன்கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய முடிவெடுப்போம். தீயணைப்பு துறை பணியிடங்கள், வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார்.
    • டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராகவும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் புரையோடியிருப்பதாகவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதை கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார். இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசுகிறார். இதனால் நேற்றைய தினம் மத்திய மந்திரியும், புதுவை பொருப்பாளருமான அர்ஜூன்ராம் மெக்வாலை மட்டும் சந்தித்து பேசினர்.

    இன்று பிற்பகலுக்கு பிறகு புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கு முன்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    அதில் புதுவையில் இதே நிலையில் ஆட்சி நீடித்தால், பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது போல 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கட்சித்தலைமை உரிய முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்க ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடைய பாஜக மாநில தலைவர் செல்வகணபதி ராஜ்யசபா கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் உள்ளார். அவரும் கட்சித் தலைவரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    • விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்.
    • நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கால்நடைத் துறை சார்பில் மாடு வளர்ப்போருக்கு கறவை எந்திரம் வழங்கும் விழா காரைக்கால் மதகடி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கி பேசியதாவது:-

    வறட்சி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது விவசாய பூமியான காரைக்கால்தான். விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்

    காரைக்காலில் ஒரு மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறோம். காரைக்காலில் நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது. காரணம் இயற்கையாக கிடைக்க கூடிய புற்கள் கிடைப்பதில்லை.

    மாடு வளர்க்காதவர்களுக்கு திட்டங்களை கொடுக்காதீர்கள். தகுதியானவர்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துங்கள்.


    நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாத இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வளர்த்து தரமான பால் கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பேசிய விவசாயி ஒருவர் தாய்ப் பாலுக்கு இணையானது மாட்டுப்பால். ஆனால் இதை பலரும் உணரவில்லை. மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. மாட்டை பிடித்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் ஓரமா போயா...? என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.

    ஆனால் நாய் பிடித்து நடைபயிற்சி செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். நாய்க்கு கொடுக்கும் மரியாதை பால் தரும் மாட்டிற்கு இல்லை என கூறினார்.

    விவசாயி பேச்சை விழாவில் கூடியிருந்தோர் கைத்தட்டி வரவேற்றனர்.

    • வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.
    • பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது.

    புதுச்சேரி:

    உலக மக்கள் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவை ஆரோவில் சர்வதேச நகரம் மூலம் நனவாக்கியவர் ஸ்ரீஅன்னை.

    இங்கு பல வெளிநாட்டவர் ஆரோவில்வாசிகளாகவே மாறி அவர்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து வசித்து வருகின்றனர். அப்படி வசிக்கும் ரஷிய தம்பதிகள் செர்க்கே - தான்யா.

    இவர்கள் பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது. நமது பாரம்பரிய ரிக்சாதான். ஆரோவில் ஆட்டோமொபைல் பணிமனையில் வேலை செய்யும் செர்க்கே வடிவமைத்த கூரை போட்ட ரிக்சாவில் தான் குடும்பமே பயணிக்கிறது.

    அவரது மனைவி தான்யா ஒரு ஓவியர். இவர்களுக்கு 3 குழந்தைகள். ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு ரிக்சாவில் தான் வந்து செல்கின்றனர்.

    வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    எத்தனை கி.மீ. தூரமாக இருந்தாலும் செர்க்கே தானே ரிக்சாவை மிதித்து ஓட்டி செல்கிறார். இந்த வாகனம் நகர பகுதியில் செல்லும் போது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

    • ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார்.
    • இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஸ்கூபா டைவிங் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ.

    ஆழ்கடலில் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் வீரர்கள் சாதனை படைக்கும் போது அதனை தனது குழுவுடன் இணைந்து ஆழ்கடலில் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


    உலக கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது.

    இதனை கொண்டாடும் வகையிலும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியும், இந்திய தேசிய கொடியை ஆழ்கடலுக்குள் எடுத்து சென்று இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடினர்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ×