search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சில் 8 ரன்களை சேர்த்தார்.
    • இதன்மூலம் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தை ரூட் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 325 ரன்களைச் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

    அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இலங்கை அணிக்கு 219 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையிலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காராவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

    அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 8 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6-வது வீரர் எனும் சங்கக்காராவின் சாதனையை முறியடித்துள்ளார். சங்கக்காரா 12,400 ரன்களுடன் 6-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட், 12,402 ரன்களைக் குவித்து 6=ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

    • இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம்.
    • அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாகிஸ்தானைப் போன்று இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்கதேச அணி வீரர் சோரிபுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். அப்படிப்பட்ட பலம் பொருந்திய அணியை நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டால் மொத்த உலகமும் எங்களை திரும்பிப் பார்க்கும். எனவே இந்தியாவில் எங்களது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் கடினமாக பயிற்சி செய்து வருகிறோம்.

    மேலும், பாகிஸ்தானில் எங்களுக்கு நல்ல தொடராக அமைந்தது. இதனால் நாங்கள் இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

    என்று சோரிபுல் கூறினார். 

    • ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றன.
    • 20 ஓவர் போட்டிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    கொழும்பு:

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் முத்தையா முரளிதரன்.இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீரரான அவர் 133 டெஸ்டில் விளையாடி 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    அவருக்கு அடுத்தப்படியாக வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட், ஆண்டர்சன் (இங்கிலாந்து) 704 விக்கெட்டும், கும்ப்ளே (இந்தியா) 619 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    தற்போதுள்ள வீரர்களில் 36 வயதான நாதன்லயன் (ஆஸ்திரேலியா) 530 விக்கெட்டும், தமிழகத்தை சேர்ந்த வீரர் 37 வயதான ஆர்.அஸ்வின் 516 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    இந்த நிலையில் எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டி பற்றி நான் கவலைப்படுகிறேன். ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடலாம். ஆனால் மற்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் அதை அதிகம் விரும்பி பார்ப்பதில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

    எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க இயலாது. மிகவும் கடினமானது. ஏனென்றால் 20 ஓவர் போட்டிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் நாங்கள் 20 ஆண்டுகளாக விளையாடினோம். ஆனால் தற்போது விளையாடும் ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.

    இவ்வாறு முரளிதரன் கூறியுள்ளார்.

    • மழை பெய்யாமலே முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
    • கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    நொய்டா:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கூட இல்லை. அதனால், ஆப்கானிஸ்தான அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை சொந்த மண்ணாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிசிசிஐ அவ்வப்போது ஆப்கானிஸ்தான் ஆடும் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி அளித்து வருகிறது. அப்படி செய்யும் உதவி சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள விமர்சனத்துக்கு முக்கிய காரணம்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்ட ஆப்கானிஸ்தான் அணி பிசிசிஐ-இடம் உதவி கேட்டது. பிசிசிஐ-யும் இந்தியாவில் போட்டியை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதற்காக நொய்டா மைதானத்தை தேர்வு செய்து அளித்தது. இந்த போட்டி நடக்கவிருந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி செய்ய முடியாமல் தவித்தன.

    இந்த நிலையில் நேற்று முதல் நாள் போட்டி நடைபெற இருந்தது. காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் நிச்சயமாக போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது.

    பந்துவீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசும் பகுதிகளிலும் நிறைய மழைநீர் தேங்கி இருந்தது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அவற்றை விரைவாக நீக்க முடியாமல் மைதான ஊழியர்கள் அவதிப்பட்டனர். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு சில ஓவர்களையாவது வீசி விடலாம் என மாலை 4 மணி வரை நடுவர்கள் முயற்சி செய்தனர்.

    ஆனால், மைதான ஊழியர்களால் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நொய்டா மைதானத்தை தேர்வு செய்த பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நொய்டா மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட நடத்தப்பட்டதில்லை. அங்கு மழை நீர் வடிகால் வசதி இல்லாதது மட்டுமின்றி, கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக பத்திரிக்கையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்தியாவில் சிறந்த வசதிகளை கொண்ட மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளித்து இருக்கலாம். அதுவே அந்த அணிக்கு செய்யும் சிறந்த உதவியாக இருக்கும்.

    இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி கூறியதாவது:-

    இது ஒரு பெரிய குழப்பம். நாங்கள் இங்கு திரும்பி வரமாட்டோம். வீரர்களும் இங்குள்ள வசதிகளால் மகிழ்ச்சியடையவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் முன்கூட்டியே பேசினோம், எல்லாமே ஒழுங்காக இருக்கும் (ஊடக வசதிகளுடன்) என்று ஸ்டேடியம் தோழர்களால் உறுதியளிக்கப்பட்டது.

    என்று அவர் கூறினார்.

    கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தில், 2016 -ல் இளஞ்சிவப்பு பந்து துலீப் டிராபி போட்டி நடைபெற்றது.

    இருப்பினும், கார்ப்பரேட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் காரணமாக செப்டம்பர் 2017-ல் பிசிசிஐ தடை செய்தது. பிசிசிஐயுடன் இணைந்த எந்தப் போட்டியும் இங்கு நடத்தப்படவில்லை. இந்த மைதானம் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமாக செயல்பட்டது.

    "நாங்கள் இங்கு வந்ததில் இருந்து எதுவும் மாறவில்லை, இது கொஞ்சம் கூட முன்னேறவில்லை" என்று மற்றொரு ஏசிபி அதிகாரி கூறினார்.

    • ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார்.
    • 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரிஷப் பண்டை பார்க்கிறேன். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் திரும்பியதில் (வங்காளதேசத்துக்கு எதிரான தொடர் 19-ந்தேதி தொடக்கம்) ஆச்சரியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார். அதே சமயம் அவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் (20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி) முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பல போட்டிகளை தவற விட்டுள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அதற்குள் அவர் அணிக்கு திரும்ப வேண்டும். இந்த தொடரை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய அணிக்கு உண்மையான சவால் அளிக்கக்கூடிய போட்டியாக இது இருக்கும். அடுத்த ஆண்டு ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு தொடர்களும் நமக்கு முக்கியமானது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது சிராஜ் இருக்கிறார்கள். ஷமியும் இணையும் போது பந்துவீச்சு மேலும் வலுவடையும். ஆகாஷ் தீப் திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசுகிறார். கவனிக்கத்தக்க ஒரு பவுலராக இருக்கிறார்.

    வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை இரு டெஸ்டிலும் வீழ்த்தியது எளிதான விஷயமல்ல. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் இந்திய அணி முற்றிலும் வித்தியாசமானது. உள்நாடோ, வெளிநாடோ எல்லா இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. எனவே வங்காளசேதம் இந்திய மண்ணில் வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் தோற்கடித்த நம்பிக்கையுடன் வருவதால் இந்த முறை வங்காளதேசத்திடம் இருந்து கடினமான போட்டியை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    26 வயதான ரிஷப் பண்ட் இதுவரை 33 டெஸ்டுகளில் விளையாடி 5 சதம் உள்பட 2,271 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    • இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 263 ரன்களை எடுத்தது.

    பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 39 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் நிசங்கா சதம் அடிக்க, ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களை எடுத்த நிலையில், இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் பதும் நிசங்கா 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சார்பில் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

    • ஜாக் காலிஸ் கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார்.
    • 2015-ல் பொறுப்பு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடித்தப்படியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகமுறை (3) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சுமார் 10 வருடத்திற்குப் பிறகு 2024 சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த இரண்டு முறை வென்ற நிலையில், அவர் ஆலோசகராக இருக்கும்போது 3-வது முறையாக வென்றுள்ளது.

    தற்போது கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சப்போர்ட் ஸ்டாஃப் ஆக பணிபுரிந்து வந்த அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டஸ்கொதே ஆகியோரும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் கொல்கத்தா அணி ஆலோசகர் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரை நியமிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கிரிக்கெட்டி தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸை தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜாக் காலிஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக இருந்துள்ளார். 2015-ல் பொறுப்பு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேவருடத்தில் பேட்டிங் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

    கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் ஜாக் காலிஸ் 2012 மற்றும் 2014 சீசன்களில் விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோரை நியமிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ரிக்கி பாண்டிங் டெல்லி அணியில் இருந்து வெளியேறியுள்ளார். சங்கக்காரா இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் நீடிக்கிறார்.

    • 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
    • இரண்டு சீசன்களில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிரவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டதால் ஐ.பி.எல். அணியில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவியும் முடிவடைந்தது.

    இதனைத்தொடர்ந்து ஐ.பி.எல். அணிகள் அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தது. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராகுல் டிராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதற்கிடையே ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத செக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் டிராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் ஆஃபரை நிராகரித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 சீசனில் விளையாடியுள்ளார். வார்னே ஓய்வுக்குப்பின் இரண்டு சீசன்களில் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.

    ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

    • லஹிரு குமாரா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • நிசாங்கா 42 பந்தில் அரைசதம் விளாசி 53 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 263 ரன்கள் சேர்த்தது.

    62 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டதில் இலங்கை பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து 67 ரன்கள் அடித்தார் மற்ற வீரர்கள் சொதப்ப இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டதால் இலங்கை அணிக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் கருணாரத்னே 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து பதுன் நிசாங்கா உடன் குசால் மெண்டில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பதுன் நிசாங்கா அதிரடியாக விளையாடி 42 பந்தில் அரைசதம் அடித்தார். இலங்கை அணி 15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பதுன் நிசாங்கா 53 ரன்னுடனும், குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 125 தேவை. கைவசம் 9 விக்கெட் இருப்பதால் இலங்கை இந்த டெஸ்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
    • இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வரால், சுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர்.

    சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேலுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 154 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் பென் டெக்க்ட் 86 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதம் கடந்து 64 ரன்கள் எடுத்தார்.

    கருணரத்னே 9 ரன்னும், குசால் மெண்டிஸ் 14 ரன்னும், மேத்யூஸ் 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். சண்டிமால் டக் அவுட்டானார்.

    93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது. 6வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா-கமிந்து மெண்டிஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் போட்டி இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

    6வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 69 ரன்னில் வெளியேறினார். கமிந்து மெண்டிஸ் 64 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெங்களூரு:

    துலீப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி 321 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்து 181 ரன்னும், நவ்தீப் சைனி 56 ரன்னும் எடுத்தஉள்ளனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா பி அணி சார்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    90 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பி அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்து 61 ரன்னும், சர்ப்ராஸ் கான் 46 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா பி அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 275 ரன்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி 198 ரன்களில் ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 57 ரன்னும், ஆகாஷ் தீப் 43 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கு அளிக்கப்பட்டது.

    ×