search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.

    இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, " நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வழக்கில் என்ன தான் நடக்கிறது. இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, அக்டோபர் 19ம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து, அவற்றை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்கதரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை சோளிங்கர் சாலையில் ஏழுமலை (வயது 44 ) என்பவர் பேக்கரி மற்றும் சுவீட் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ஏழுமலை மற்றும் கடை ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பேரும் கடையின் உள்ளே இருந்த மிக்சர், சுவீட், கேக் ஆகியவற்றை வயிறார ருசித்து சாப்பிட்டனர். நன்றாக வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் திருப்பதி உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் மீண்டும் மறுநாள் காலை ஏழுமலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் திருப்பதி உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் 2 பேரும் சுவீட், கேக், மிக்சரை ருசித்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது . இது சம்பந்தமாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு;-

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "கண்டா வர சொல்லுங்க... என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?" என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 2 முறை மதுரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வான சு.வெங்கடேசன் பொதுமக்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்பதில்லை. மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் உள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி. நேரில் வந்து விசாரித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனை கூட ஆய்வு செய்ய எம்.பி. சு.வெங்கடேசன் வரவில்லை என தெரிவித்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி,

    திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    21-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கடந்த 14-ந்தேதி நிலவரப்படி புழல் ஏரியில் 14.97 அடியாக இருந்தது.
    • சோழவரம் ஏரிக்கு 498 கனஅடி தண்ணீர் வருகிறது.

    பூந்தமல்லி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சோழவரத்தில் 30 செ.மீட்டரும், செங்குன்றத்தில் 28 செ.மீட்டர் மழையும் பதிவானது. பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    புழல் ஏரியில் மட்டும் கடந்த 3 நாட்களில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. கடந்த 14-ந்தேதி நிலவரப்படி புழல் ஏரியில் 14.97 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 16.90 அடியாக பதிவானது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி ஆகும். ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கனஅடியில் 2,388 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 72 சதவீதம் ஆகும். ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 936 கனஅடியாக குறைந்து உள்ளது.

    பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகபட்சமாக 1380 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இன்று காலை ஏரிக்கு 493 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 13.79 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில்1317 மி.கன அடி நீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 134 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை நின்றாலும் ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வரும் நாட்களில் அதிக அளவில் மழை பொழிந்து, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே, ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சோழவரம் ஏரிக்கு 498 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 198 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் மற்றும் மழைநீர் சேர்ந்து 750 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் 3231 மி.கனஅடியில் 450 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு வெறும் 10 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்தம் உள்ள 500 மி.கனஅடியில் 309 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை.
    • ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

    சென்னை:

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, ஆறுதலாக, உத்வேகமாக இருக்கும் தமது வைர வரிகளால், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

    கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் முதலான நூல்கள், அவரது ஆழ்ந்த இறைபக்தியை விளக்கும். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை. ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

    இறவாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனுக்கு நினைவஞ்சலிகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
    • சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார்.

    நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் 'கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    சென்னை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதலமைச்சர் அவர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டார்.

    • கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டுகள் வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளை வேகப்படுத்தினார்.

    அதுமட்டுமின்றி சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தினார். நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொளத்தூர் வீனஸ் நகர் 200 அடி சாலை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெட்டேரியில் நிரம்பிய தண்ணீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு அவருக்கு அதிகாரிகள் தண்ணீர் வரத்து மற்றும் கரைகளை பலப்படுத்தியது பற்றியும் விளக்கி கூறினார்கள்.

    இதன் பிறகு பாலாஜி நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் தணிகாசலம் நகர் கால்வாயை பார்வையிட்டார். அதன் பிறகு கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் 'கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அங்கிருந்து ஜி.கே.எம்.காலனி ஜம்புலிங்கம் ரோட்டில் உள்ள கனரா வங்கி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

    மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட பிறகு கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: சென்னையில் மழைநீர் முழுமையாக வடிந்து விட்டதா?

    ப: எங்களுக்கு தெரிந்த வரை ஆல் மோஸ்ட் எல்லாம் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் இருந்தால் கூட அதையும் உரிய கவனம் செலுத்தி வடிய வைக்க முயற்சி செய்வோம்.

    கே: மழையின்போது பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பணி எவ்வாறு இருந்தது?

    ப: ரொம்ப சிறப்பாக மிகவும் பெருமைப்படக் கூடிய அளவுக்கு மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் இருந்தது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளை மட்டுமல்ல ஊழியர்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கு எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்து உள்ளேன். வாழ்த்து கூறி உள்ளேன்.

    கே: சமூக வலைதளங்களில் நிறைய பாராட்டுகள் வருவது பற்றி உங்கள் கருத்து?

    ப: பாராட்டுகளும் வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க. அரசை பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சிலர் விமர்சனமும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அந்தப் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

    கே: அரசின் முழு திறமையையை பயன்படுத்துகிற அளவுக்கு மழை இருந்ததா?

    ப: நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எந்த பிரச்சனையும் கிடையாது. ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். சிலர் இதை அரசியலாக்க முயற்சி செய்கிறார்களே தவிர எவ்வளவு வேலை நடந்துள்ளது, என்ன பணிகள் நடந்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். அவங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    ஏனென்றால் இதை அரசியலாக்கி அதை ஒரு வியாபார பொருளாக்க சிலர் நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை.

    கே: வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 2 மாதம் இருக்கிறதே? இந்த மழைக்கே...?

    ப: எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

    கே: மழை அளவு குறைவாக இருந்ததால்தான் பாதிப்பு குறைவாக இருந்ததாக சொல்கிறார்கள்.

    ப: அது வந்து மக்களுக்கு தெரியும். அவங்களுக்கு தெரிகிறேதா இல்லையோ மக்களுக்கு தெரியும் விடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு மற்றும் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    • அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது.
    • ஒன்றாக இருப்பதால் தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் என்னை சந்தித்ததாக கூறுவது பச்சைப்பொய்.

    * அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது. அவர்கள் எல்லோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

    * ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

    * அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.

    * நீக்கப்பட்டவர்களை சேர்க்குமாறு மூத்த தலைவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை.

    * அதிமுக இரண்டாகி விட்டது அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம்.

    * பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள்.

    * ஒன்றாக இருப்பதால் தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம் என்று அவர் கூறினார்.

    • சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை.
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்பம்பர் மாதம் 10 நாட்களுக்கு பின் சம்பளம் வழங்கியது. கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை. மொத்த உற்பத்தியில் கல்வி, சுகாதாரத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. 2030 ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு 4,15 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு 1.61 லட்சம் கோடியாகவும் இருக்கும். தற்போது 1.56 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.20,198 கோடியாகவும் உள்ளது. பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சீரழிய போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். எனவே ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியாக வரும் ஆண்டில் உயர்த்தவேண்டும்.

    சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. வெள்ளதடுப்பு பணிகளை முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. அப்படியும் இக்கடைகள் திறந்தால் நானே அக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

    முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தி 152 அடியாக உயர்த்தலாம் என்று 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் இன்னமும் உயர்த்தப்படாமல் இருக்க கேரள அரசு ஒத்துழைக்காததுதான் காரணமாகும்.

    மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.
    • திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * சென்னை ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை பார்க்க முடிகிறது.

    * சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. கனமழை தொடர்ந்திருந்தால் மக்கள் எங்கும் சென்றிருக்க முடியாது.

    * 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர்.

    * 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது.

    * எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை.

    * வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.

    * திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

    * திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * மக்கள் புரிந்து கொள்வதற்காகவே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

    * அதிமுக ஆட்சியில் அந்தந்த துறை அமைச்சர்கள் பணிகளை கவனித்து கொண்டார்கள்.

    * தற்போது அனைத்து துறை பணிகளையும் துணை முதலமைச்சரே செய்கிறார் என்று கூறினார்.

    • பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது.
    • உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

    மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் உணவும் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன. காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயன் அடைந்தனர்.

    அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.

    மழை காரணமாக வேலையும் வருமானமும் இல்லாமல் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்க உத்தரவு பிறப்பித்து எங்களுக்கு உதவிபுரிந்த முதலமைச்சருக்கு மனதார எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கட்டணமில்லா உணவு சாப்பிட்ட மக்கள் கூறினர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். குறிப்பாக முதலமைச்சர் புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணி மேற்கொண்டிருந்த சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மழைநிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். அங்கு பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. அந்தப் பகுதிகளில் எல்லாம் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்ப்களை பயன்படுத்தி மழைநீர் தேங்க விடாமல் செய்த மாநகராட்சி பணியாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

    தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாத்திட 300 நிவாரண மையங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 2 நாட்களிலும் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

    சென்னை மாநகரம் முழு வதிலும் 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. திடீரென பெய்த பெருமழை காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×