search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • வெள்ளத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
    • சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டன

    பிஜீங்:

    வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

    மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த கனமழையால் ஹுலுடாவ் நகரத்திற்கு குறிப்பாக ஜியான்ஜாங் மற்றும் சுய்சோங் மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள், பயிர்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன

    கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    • பாரீஸ் ஒலிம்பிக்ஸில் சோ யாக்கின் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
    • பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் கொடுத்த அப்பாவித்தனமான ரியாக்ஷனால் யாக்கின் வைரல் ஆனார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.

    18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


    • முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்.
    • லீ முசி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம், இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழமையான பரதக்கலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பரதக்கலை நாடு கடந்து சீனாவிலும் கால்பதித்துள்ளது.

    சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ முசி, பரதக்கலை பயின்று முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம் நடத்தி உள்ளார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய தூதர்கள், ஏராளமான சீன ரசிகர்கள் முன்னிலையில் மாணவி லீ முசி அரங்கேற்றம் செய்தார்.

    பரதம் பயிலும் ஒருவர், குறிப்பிட்ட தேர்ச்சிக்குப் பின்னர், மேடையில் ஆசிரியர்கள், நிபுணர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் முதன் முதலில் மேடையில் நடனம் ஆடுவதை அரங்கேற்றம் செய்தல் என்று குறிப்பிடுவார்கள். அரங்கேற்றம் நடத்திய பின்புதான், அவர்கள் தனியாக நிகழ்ச்சிகளில் நடனமாட முடியும் மற்றும் பயிற்சி வழங்க முடியும்.

    இதுகுறித்து இந்திய தூதரக கலாசார பொறுப்பாளர் டி.எஸ்.விவேகானந்த் கூறுகையில், "முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும்" என்றார்.

    லீ முசியின் அரங்கேற்றம் சீன ஆசிரியரால் பயிற்சி அளிக்கப்பட்டு சீனாவிலேயே முடிக்கப்பட்டது, இது முதல் முறையாகும்.

    'இது பரதநாட்டிய மரபு வரலாற்றில் ஒரு மைல்கல்' என்று லீக்கு பயிற்சி அளித்த நடன கலைஞர் ஜின் ஷான் ஷான் கூறினார். லீ முசி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜின் நடத்தும் நடன பள்ளியில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார். ஜின் 1999-ல் டெல்லியில் தனது அரங்கேற்றத்தை நடத்திய பரத கலைஞர் ஆவார்.

    அரங்கேற்ற விழாவில் பல பிரபலங்கள், சீன மாணவர்கள் முன்னிலையில் பல வரலாற்று சிறப்புமிக்க பாடல்களுக்கு 2 மணி நேரத்திற்கு மேல், லீ பரதம் ஆடினார். இந்த மாத இறுதியில் சென்னையிலும் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் லீ.

    • சீனாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது.
    • மாயமான 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பீஜிங்:

    சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண் சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவில் கிழக்குப்பகுதியில் கேமி புயலால் கனமழை பெய்து வருகிறது.
    • அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

    பீஜிங்:

    சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண் சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.
    • ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என தெரிவித்தார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் துவங்கி, இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. போர் காரணமாக இருபதரப்புக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 29 மாதங்களாக தொடரும் போரில், ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.

    போரில் ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி நேட்டோ அமைப்பு சார்பிலும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பட்தத்தில் உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே, ரஷியாவுக்கு எதிரான போர் குறித்து உக்ரைன் நாட்டின் உயரிய அதிகாரிகளில் ஒருவரான வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்த குலெபா உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் பட்சத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்று தெரிவித்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனின் உயரதிகாரி குலெபா ஆவார். சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த குலெபா ஏற்கனவே திட்டமிட்டதை விட அதிக நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரண்டு மிகமுக்கிய விஷயங்களை மட்டுமே முன்வைத்ததாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் குலெபா தெரிவித்தார்.

    "நான் இரண்டு விஷயங்களை மட்டுமே முன்வைத்தேன். முதலில் உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்களை உக்ரைன் இல்லாமல் இயற்றக்கூடாது. இரண்டாவது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஏற்கப்பட்டால், நாங்கள் எத்தகைய விவாதங்கள் மற்றும் தீர்வுகளை காணவும் தயாராக இருக்கிறோம்," என்று குலெபா தெரிவித்தார்.

    ரஷியா நல்ல உணர்வோடு வரும் பட்சத்தில் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறது. எனினும், ரஷியா தரப்பில் அத்தகை தயார்நிலை தற்போதைக்கு காணப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

    • உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • போரை முடிவுக்கு கொண்டும் வருவதற்கான பேச்சுவார்த்தையில் சீனா முக்கியமான பங்கு வகிக்க முடியும்- உக்ரைன்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளாகியுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நட்பு நாடாக இருந்து வருகிறது. இதனால் சீனாவால் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீனாவுக்கு சென்றுள்ளார். ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்த பின் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி முதன்முறையாக சீனா சென்றுள்ளார்.

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீன வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். உக்ரைன- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரஷியா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    "நியாயமான மற்றும் நிலையான அமைதி நோக்கி செல்வது எங்களுக்கு அவசியம். சீனா இதில் முக்கியமான பங்கு வகிக்க முடியும்" என்றார்.

    ஒருமித்த கருத்தோடு, இணைந்து அரசியல் நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தினருக்கு சீனா உதவி செய்யும் என சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற அமைதி மாநாட்டில் சீனா கலந்து கொள்ளவில்லை.

    • ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்.
    • கடந்த ஜூலை 14ம் தேதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

    சீனாவை சேர்ந்த, 24 வயதான பான் சியோட்டிங் என்ற இளம்பெண் பிரபல யூடியூப் இன்ப்லூயன்சர் ஆவார்.

    இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூ டியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதன் மூலம், அவர் பிரபலமடைந்தார்.

    இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார்.

    ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் எச்சரித்த போதிலும் அவர் உணவு உண்ணும் சவாலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 14ம் தேதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

    சியோட்டிங்-ன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும், செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சியோடிங்கின் இந்த மரணம் சமூக ஊடகங்களில் கவலையைத் தூண்டியுள்ளது. இதுபோன்ற சவால்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • தினமும் வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து புறப்பட்டு 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
    • பணி முடிந்த பிறகு மீண்டும் 4 மணிநேரம் பயணம் செய்து தனது வீட்டை அடைவார்.

    கிழக்கு சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரை சேர்ந்தவர் லின்ஷூ . 31 வயதான இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. லின்னின் மனைவியின் சொந்த ஊர் வெய்பாங்.

    அங்கு வசித்து வரும் லின்ஷூ ஷான்டாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்டாவோ நகரில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். தனது வீட்டில் இருந்து அவர் வேலை பார்க்கும் அலுவலகம் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் அலுவலக பகுதியில் தங்கினால் மனைவியை பிரிய வேண்டும் என்பதால் அதற்கு அவர் உடன்படவில்லை.

    இதனால் தினமும் வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் லின்ஷூ 5.20 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுகிறார். பின்னர் ரெயிலை பிடிப்பதற்காக 30 நிமிடங்கள் மின்சார பைக்கில் செல்லும் இவர், ரெயில் மூலம் கிங்டாவோ நகருக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து 15 நிமிடங்கள் சுரங்க பாதை வழியாக நடந்து அலுவலகத்துக்கு செல்கிறார்.

    காலை 9 மணிக்கு வேலையை தொடங்கும் லின்ஷூ, பணி முடிந்த பிறகு மீண்டும் 4 மணிநேரம் பயணம் செய்து தனது வீட்டை அடைவார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மனைவியை பிரிய மனமின்றி லின்ஷூ தினமும் சுமார் 8 மணி நேரம் பயணித்து அலுவலகம் சென்று வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    • அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும்.
    • மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சீனாவில் 5 மாதங்களுக்கு முன்பு கோவா என்ற பெண்ணுக்கு மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

    இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து கோவா அதிர்ச்சியடைந்துள்ளார்.

    என்னுடைய தனியுரிமையை மருத்துவமனை நிர்வாகம் மீறியுள்ளதாக கூறியுள்ள கோவா, அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டது. இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை எனவும், மருத்துவமனையில் உள்ள 3 மாதங்களுக்கு மேலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே யார் இந்த வீடியோவை எடுத்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், இந்த அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த பதிலை கோவா ஏற்கவில்லை. "ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக வெளியில் உள்ளவர் எடுத்திருக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும். ஆகவே அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவை எடுத்தவர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் அவரது தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
    • ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

    சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் அமைந்துள்ள பாலம், நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.

    காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

    இதில், ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சீனாவின் தேசிய விரிவான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு 736 பேர், 76 வாகனங்கள், 18 படகுகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்களை மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது.

    விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், "மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    • சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
    • தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

    சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கதவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்தில், மொத்தம் 16 பேர்உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவின் அவசரகால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பணிக்குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

    விபத்து விசாரணையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிபுணர்களும் அனுப்பப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

    அடுத்த மாதத்தில் நான்ஜிங் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×