search icon
என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார்.
    • கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

    சியோல்:

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்தின.

    இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

    இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தகம், வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரிய தீபகற்பத்தில் கடந்த 1910 முதல் 1945-ம் ஆண்டு வரை நடந்த ஜப்பானிய காலனிய ஆதிக்கத்துக்கு பிரதமர் புமியோ கிஷிடா மன்னிப்பு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பையும் இது ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக பிரதமர் புமியோ கிஷிடாவும், அவரது மனைவி யூகோ கிஷிடாவும் போரின்போது உயிரிழந்த தென்கொரிய ராணுவ வீரர்களுக்கு தங்களது நாட்டின் வழக்கப்படி தூபம் காட்டி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கினார்.
    • சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தை பிடித்தார்.

    தென் கொரியா நாட்டில் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இதில் ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கி பிந்தியாராணி தேவி அசத்தினார்.

    மேலும் இந்த போட்டியில் சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தையும், வியட்நாமைச் சேர்ந்த க்யூநுஹு (88 மற்றும் 104 கிலோ எடை) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

    • கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன.
    • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது.

    சியோல்:

    வடகொரியா-தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இதில் மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில் சர்வதேச கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடு கள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.

    வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன. இதில் ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது.

    இது தொடர்பாக தென் கொரிய கடற்படை கூறும்போது, வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டு ராணுவ பயிற்சி ஒரு வாய்ப்பாகும்.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடற்படையின் திறன்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த முத்தரப்பு ஒத்துழைப்பானது எங்களின் மதிப்புகளை பிரதிபலிப்பதுடன் மண்டல நிலைத்தன்மைக்கு சவாலாக இருப்பவர்களுக்கு எதிரான தீர்மானத்துடன் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    • தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
    • தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சியோல்:

    தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தன. 6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மீட்பு படையினர் அங்கிருந்து சுமார் 300 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்த தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

    • கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட EV9 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் லெவல் 3 ADAS அம்சங்களை கொண்டுள்ளது.
    • புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 541 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது இரண்டாவது பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனம், கியா EV9 மாடலை அறிமுகம் செய்தது. இது மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட ஃபுல் சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் வாகனமும் E-GMP பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் இது கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும்.

    கியா EV9 மாடலில் யுனைடெட் டிசைன் மற்றும் கியாவின் பாரம்பரியம் மிக்க டைகர் நோஸ் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பாடி நிறத்தின் பின் டிஜிட்டல் லைட் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி நீண்ட வீல்பேஸ், குறைந்த ஓவர்ஹேங்குகளை கொண்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. காரில் கூர்மையான லைன்கள் மற்றும் ஃபெண்டர் ஃபிளேர்கள் வெளிப்புற ஹைலைட்களில் ஒன்றாக உள்ளன.

     

    உள்புறம் கட்டாயம் இருக்க வேண்டிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அம்சம் பெறும் முதல் கியா கார் என்ற பெருமையை கியா EV9 பெற்றுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேவில் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில் சீரான தரை மற்றும் சுழலும் வகையான இருக்கைகள் உள்ளன.

    இதனால் பின்புற இருக்கையில் அமர்வோர் ஒவ்வொருத்தர் முகத்தை பார்த்த நிலையில் அமர்ந்து கொள்ள முடியும். இதுதவிர 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்டீரிங் வீல் டேபிள், ரிலாக்சேஷன் இருக்கைகள், டிராயர் போன்று திறக்கக்கூடிய கன்சோல் உள்ளன. இத்துடன் லெவல் 3 ADAS தொழில்நுட்பம் கொண்ட முதல் கியா கார் EV9 ஆகும்.

     

    இதில் உள்ள 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர் வரை செல்லும். இத்துடன் 800 வோல்ட் சார்ஜர் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 239 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் ஆல் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் மாடல் அதிகபட்சம் 283 கிலோவாட் மற்றும் 600 நியூட்டர் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எஸ்யுவியில் மேம்பட்ட டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ டெரைன் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் கியா EV9 முன்பதிவு கொரியாவில் துவங்கவுள்ளது. பின் 2023 இறுதியில் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சில ஆசிய சந்தைகளில் கியா EV9 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் கியா EV9 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் பல வீடுகள் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் இருந்த பொருட்களும் தீயில் கருகியது.

    சியோல்:

    தென்கொரியா நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க பலர் மரத்தினாலான வீடுகளில் வசித்து வருகின்றனர். உடலுக்கும் இது ஆரோக்கியம் என்பதால் பெரும்பாலானோர் இந்த வீடுகளை கட்டுகின்றனர்.

    அந்த நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள சாண்டி நகரில் குடிசை பகுதி உள்ளது. இங்கு 660 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை இந்த குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இது பற்றி அறிந்ததும் 290-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த மீட்பு பணியில் 10 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. அவர்கள் தீ விபத்தில் சிக்கி தவித்த 500 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல வீடுகள் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
    • தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.

    வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டனவா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    • கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சியோல்:

    சீனாவை போலவே தென்கொரியாவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது. அங்கு திடீர் திடீரென கொரோனா தொற்று எழுச்சி பெறுகிறது.

    அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 46 பேர் தொற்றுக்கு பலியாகினர்.

    • பீரங்கிகள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதாக தென்கொரியா புகார்.
    • அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல்.

    சியோல்:

    அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரியா எல்லைகளை குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரியா ராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தென் கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது.
    • வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகனை சோதனையை தடுக்க வேண்டும்.

    தென் கொரியாவின் வான் பகுதிக்குள் சீன, ரஷிய போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஷியாவின் ஏவுகனை தாங்கிய ஜெட்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தன. உடனே தென் கொரியாவின் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பறந்தன.

    அந்த விமானங்கள் வருவதற்குள் சீனா, ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

    மேலும் வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகனை சோதனையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் தென் கொரியா எல்லைக்குள் போர் விமானங்கள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலப்பு சீனியர் பிரிவில் இந்திய இணை, கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது
    • ஒட்டு மொத்தமாக இந்தியா 25 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு சீனியர் பிரிவில் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர் சித்து ஜோடி கஜகஸ்தானின் இரினா யூனுஸ்மெடோவா மற்றும் வலேரி ரகிம்ஜான் ஜோடியை 17-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. 


    அதே போல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா இணை, உஸ்பெகிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமலோவ் ஜோடியை 17-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 28 தங்கப் பதக்கங்களில் 25 ஐ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய வெற்றியின்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    தென்கொரியாவின் டேகு நகரில் 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் பிஸ்டல் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மனு பாகெர், ஏஷா சிங், ஷிகா நர்வால் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் மின்சியோ, கிம் ஜூகி, யாங்ஜின் ஆகியோர் கொண்ட அணியை 16-12 என வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருநாள் போட்டி மீதமுள்ளது.

    இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிதம் சங்வான், பாலக் மற்றும் யுவிகா தோமர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் ஜங்மி, கிம் போமி மற்றும் யூ ஹின்யாங் ஆகியோர் கொண்ட அணியிடம் 12 -16 என தோல்வியடைந்தது. 

    ×