search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இரண்டாம் உலக போரில் முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிலெட்ச்லி பார்க்
    • ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்து உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது

    தொழில்நுட்ப துறையில் "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்தும், அதனால் ஏற்பட கூடிய நன்மைகள், தீமைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க வல்லரசு நாடுகளின் தலைவர்கள் முன் வந்தனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக இது குறித்து ஆலோசிக்க தலைநகர் லண்டனுக்கு வெளியே, பிலெட்ச்லி பார்க் (Bletchley Park) எனும் இடத்தில் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரு நாள் சந்திப்பு நடந்தது. இரண்டாம் உலக போரை முடிவுக்கு கொண்டு வர பிலெட்ச்லி பார்க்கில்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பில், ஏஐ-யின் தாக்கத்தை குறித்து நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், ஏஐ தோற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆபத்துகளை உடனுக்குடன் கண்டறியவும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு நீக்கும் கொள்கைகளை வகுக்கவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டு அனைத்து நாடுகளும்  "பிலெட்ச்லி பிரகடனம்" (ப்ளேச்சலே Declaration) எனும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    இந்த சந்திப்பில் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான துணை மந்திரி வூ ஜாவோஹுய் (Wu Zhaohui), சர்வதேச கட்டமைப்பு ஒன்றை உருவாக்க சீனாவும் ஒத்துழைக்க தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

    "பல நாட்டு தலைவர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒற்றுமையுடன் கலந்து கொண்டுள்ளது ஒரு சாதனை. அடுத்த 6 மாதங்களில் தென் கொரியாவில் ஒரு மாநாடும், அதற்கடுத்த 6 மாதங்களில் பிரான்ஸில் ஒரு மாநாடும் நடக்க உள்ளது" என இந்த சந்திப்பு குறித்து இங்கிலாந்து தொழில்நுட்ப துறை அமைச்சர் மிசெல் டொனெலான் (Michelle Donelan) தெரிவித்தார்.

    இந்தியாவின் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இதில் கலந்து கொண்டார்.

    2023க்கான அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக "ஏஐ" உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் காலின்ஸ் அகராதி வெளியிடும் பதிப்பகம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்தில் 1817ல் தொடங்கப்பட்டது புகழ் பெற்ற காலின்ஸ் பதிப்பகம்
    • 2023க்கான வார்த்தை என்னவென்று அறிந்து கொள்ள பலரும் ஆர்வமுடன் இருந்தார்கள்

    இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ளது பிரபல ஆங்கிலோ-அமெரிக்க புத்தக பதிப்பகமான ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் (HarperCollins Publishers).

    1817ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் புகழ் பெற்ற காலின்ஸ் அகராதி (Collins Dictionary) எனும் உலக மக்களிடையே மிகவும் பிரபலமான அகராதியை பல மொழிகளில் பதிப்பித்து வருகிறது.

    பொது மக்களிடையேயும், பொது மேடைகளிலும், இணைய தளங்களிலும் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தை எது என வருடாவருடம் காலின்ஸ் பதிப்பகத்தார், "காலின்ஸின் வருடத்திற்கான வார்த்தை" (Collins Word of the year) என கண்டறிந்து வெளியிடுவதும், மாணவர்கள், புத்தக பிரியர்கள் உட்பட பலரும் உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் அந்த வார்த்தை எது என ஆவலுடன் எதிர்பார்ப்பதும் வழக்கம்.

    "2023 வருடத்திற்கான வார்த்தை" என காலின்ஸ் அகராதி வெளியிட்டுள்ள வார்த்தை, "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான "ஏ.ஐ" (AI).

    இது குறித்து காலின்ஸ் அகராதி பதிப்பக நிர்வாக இயக்குனர் அலெக்ஸ் பீக்ராஃப்ட் (Alex Beecroft) தெரிவித்துள்ளதாவது:

    எங்கள் நிபுணர்கள் வானொலி, தொலைக்காட்சி, இணையம், பொதுவெளி உரையாடல்கள் உள்ளிட்ட தளங்களில் இருந்து 20 பில்லியனுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்க கருவூலங்களை ஆராய்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வளர்ந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வருடம் ஏஐ தான் உலகின் பேசுபொருளாக இருந்தது. நம்மை அறியாமலேயே நமது அன்றாட வாழ்க்கைக்கான சாதனங்களிலும் அது மறைந்துள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்களிலும் ஏஐ நன்றாக இணைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகெங்கும் ஏஐ-யின் தாக்கம் பல்வேறு தொழில்களில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக பல முன்னணி நாட்டின் தலைவர்கள் கவலை தெரிவித்து, இதன் பயன்பாடு குறித்து சட்டதிட்டங்களை விரைவில் ஒருங்கிணைந்து வகுக்க வேண்டும் என கூறி வந்தனர்.

    ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடு தேவை என்றும், இல்லையென்றால் அது மனித குலத்திற்கு ஆபத்தாக முடியும் என ஒரு சாராரும், செயற்கை நுண்ணறிவினால் நன்மையே என மற்றொரு சாராரும் காரசாரமாக சமூக வலைதளங்களிலும், பொது மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் விவாதித்து வருகின்றனர்.

    திரையுலகம் உள்ளிட்ட பல துறைகளில் உள்ளவர்களின் மகன்கள் அல்லது மகள்கள், அதே துறையில் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றால் அவர்களை "நெபோ பேபி" (nepo baby) என அழைக்கின்றனர். இந்த வார்த்தை "2023க்கான வார்த்தை" பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக காலின்ஸ் பதிப்பகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொலை செய்யப்பட்ட மேஹக் சர்மா சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.
    • மேஹக் சர்மா மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள குரோய்டனில் இந்தியாவை சேர்ந்த மேஹக் சர்மா என்ற பெண் வசித்து வந்தார். இந்த நிலையில் மேஹக் சர்மா உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷைலி ஷர்மர் (வயது23) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் குரோய்டனின் ஆல்ட்ரீவே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலை செய்யப்பட்ட மேஹக் சர்மா சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர், அவருக்கு தெரிந்தவரா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. மேஹக் சர்மா மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார்
    • ஹமாஸ்க்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு துணை நிற்பதை உணர்த்தும் வகையில் பைடன் பயணம் அமைந்திருந்தது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் மிகப்பெரியதாக உள்ளது. ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றார். தாக்குதல் நடத்தியது வேறு அமைப்பு எனக் கூறினார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்தித்து பேசுகிறார்.

    காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோ பைடன்- அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

    • அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • யூதர்கள் மீது விரும்பத்தகாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன

    பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் ராணுவ படை (IDF), பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் தேடி தேடி ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வருகிறது. வான்வழி குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடர இருக்கிறது.

    உலக நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஆனால், அந்நாடுகளில் உள்ள சில அமைப்புகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் மீது விரும்பத்தகாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

    "இஸ்ரேலின் கடந்த வார தாக்குதலை அடுத்து, இங்கிலாந்தில் உள்ள யூதர்களுக்கு எதிராக 105 சம்பவங்கள் நடந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 30லிருந்து அக்டோபர் 13 வரை நடந்த 75 சம்பவங்களை விட மிக அதிகம்" என்று லண்டன் பெருநகர காவல் துணை ஆணையர் லாரன்ஸ் டேலர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவலை தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியதாவது:

    கடந்த சில நாட்களாக யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் இங்கு அதிகரிப்பது சகித்து கொள்ள கூடியது அல்ல. யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்க அதிக நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பினரும் அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய காவல்துறைக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவையனைத்தும் செய்து தரப்படும். அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்டம் முழு பலத்துடன் பாயும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

    மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்.
    • 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைலு. 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார். முகத்தில் முகமூடி அணிந்த நிலையில் ஊடுருவிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள் மடக்கி பிடித்தனர்

    விசாரணையில் ஜஸ்வந்த் சிங் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் வந்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

    இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு கூறினார். 

    • காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் சிங். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு முன்பு 2 கார்களை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கார்களை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. மேலும் கார்களின் முன்புறத்தில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகப்பு நிற பெயிண்டும் அடிக்கப்பட்டு இருந்தது. இந்த செயலின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியா பதிவிட்டு வந்ததால் கடந்த 6 மாதங்களாக எனக்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் வந்தது. 8 மாதங்களில் 4 முறை நான் தாக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவி மற்றும் மகளுக்கு பாலியல் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர் பாக உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

    • இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.
    • புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின் புகைப்படம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
    • அரியவகை புறாவை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

    முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவை இனத்தை சேர்ந்த புறாக்கள் கதிர் வடிவம் கொண்டவை. உலகம் எங்கும் புறாக்கள் அதிகமாக காணப்படுகின்றன. பல்வேறு அளவுகளில் அவை காணப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின் புகைப்படம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துடிப்பான இறகுகளுடன் கூடிய இந்த புறாவை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    உடனே அவர்கள் புறாவுக்கு உணவுகளை அந்த புறா அமர்ந்திருந்த கூரை மீது வீசினர். அவற்றை ஏற்றுக்கொண்ட புறாவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது. மேலும் இந்த அரியவகை புறாவை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

    புறாவின் இந்த தோற்றம் நகர மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தனித்துவமாக இந்த நிறம் உருவானதா? அல்லது யாரேனும் புறா மீது சாயத்தை பூசினார்களா? அல்லது புறா அதன் நிறத்தை மாற்றியமைக்கும் பொருள் மீது விழுந்ததா? என பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

    விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1540) உயர்த்தப்பட்டுள்ளது.

    மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் (ரூ.13 ஆயிரம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும் (ரூ.50 ஆயிரம்), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (ரூ.12 ஆயிரம்) கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிகளவில் விசாவுக்கு விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    • 4வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

    லண்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் 3 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளும் நியூசிலாந்து 1 வெற்றியும் பெற்றிருந்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 311 ரன்கள் சேர்த்தது. டேவிட் மலான் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். அவர் 127 ரன்களில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 36 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும், லிவிங்ஸ்டோன் 28 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவிச்சந்திரா 4 விக்கெட்டும், டேரில் மிட்செல், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 312 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ரச்சின் ரவிச்சந்திரா சற்று நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்னிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 38.2 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது டேவிட் மலானுக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது நினைவிருக்கலாம்.

    ×