search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
    • மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    லண்டன்:

    பிரிட்டனில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் தொடங்க உள்ளன.

    இந்தநிலையில் அங்கு பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    எனவே கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் அப்பள்ளிகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மந்திரி கில்லியன் கீகன் கூறினார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 198 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 103 ரன்கள் எடுத்து தோற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக ஆடி 198 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் 60 பந்தில் 84 ரன்னும், ஹாரி புரூக் 36 பந்தில் 67 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், நியூசிலாந்து அணி 103 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 4 விக்கெட் வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

    • போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அந்நாட்டின் அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் விளையாடுகின்றனர்.

    • ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது.
    • குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

    ஆஸ்பத்திரியில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார். இதையடுத்து நர்சு லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரைப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அரசு தரப்பு வக்கீல் கூறும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

    ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு வக்கீல் கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    7 குழந்தைகளை கொன்ற நர்சு லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த ஆஸ்பத்திரியில் குழந்தை நல டாக்டராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார்.

    அதன்பின் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்சு லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறும் போது, 2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை எழுப்பினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் நர்சு லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

    லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து இருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்" என்றார்.

    லூசி லெட்பி, இங்கிலாந்து நாட்டின் மிக குரூரமான தொடர் சிசு கொலையாளி என்ற பெயரை பெற்றுள்ளார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.
    • ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.

    உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

    • ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்து வருகிறார்.
    • இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ல் தொடங்கியது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    லண்டன்:

    ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

    நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்.

    என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.

    பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம், ஆனால் அது எளிதான பணி அல்ல. எடுக்க கடினமான முடிவுகள் உள்ளன. நம் நம்பிக்கை எனக்கு தைரியத்தையும், வலிமையையும், நம் நாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்ய உறுதியையும் அளிக்கிறது.

    ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்.

    என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என தெரிவித்தார்.

    பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ராம் என கூறியது குறிப்பிடத்தக்க்கது.

    • அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
    • பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.

    இந்நிலையில், விரைவில் வரவுள்ள உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாட வருமாறு பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது

    இதைதொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
    • நாணயம் மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2-வது நாணயமாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந்தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்தது.

    மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக அதனை அதிகாரப்பூர்வமாக தயாரித்த தி ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கிளைகளில் இந்த சிறப்பு நாணயங்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக இந்த நாணயம் புழக்கத்தில் வந்தது. இந்த நாணயம் மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2-வது நாணயமாகும்.

    • அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார்.

    ஹேல்ஸ் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்காக விளையாடினார். மூன்று வருடங்களுக்கு பிறகு அலெக்ஸ் போட்டிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அலெக்ஸ் தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

    ஓய்வு குறித்து ஹேல்ஸ் கூறியதாவது:-

    அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இப்போது அந்த பயணத்தைப் பற்றி சிந்தித்து பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பெற்ற வாழ்க்கை மற்றும் இங்கிலாந்தின் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருந்த தருணங்கள் உண்மையில் திருப்தி அளிக்கிறது.

    ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் செய்த பல நினைவுகள் உள்ளன. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் அந்த இரண்டு ஒரு நாள் சர்வதேச உலக சாதனை ரன்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். மேலும் இங்கிலாந்தில் நடந்த அந்த இரண்டு ஆட்டங்களிலும் மூன்று புள்ளிகளை எட்ட முடிந்தது.

    டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட் டார். இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார்.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் வீட்டில் பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் எப்படி சென்றனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஷஸ் தொடரில் தாமதமாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணி 19 புள்ளிகளை இழந்துள்ளது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளை இழந்துள்ளது.

    லண்டன்:

    சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால், அத்தொடர் சமனில் முடிந்தது.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.

    இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 2 ஓவர்களையும், இரண்டாவது டெஸ்டில் 9 ஓவர்களையும், மூன்றாவது டெஸ்டில் 3 ஓவர்களையும், ஐந்தாவது டெஸ்டில் 5 ஓவர்களையும் இங்கிலாந்து குறைவாக வீசியது. இதற்காக ஒரு ஓவருக்கு ஒரு அபராதப் புள்ளி வீதம் அந்த அணிக்கு 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஆஷஸ் தொடரில் 2 வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 28 புள்ளிகளை இங்கிலாந்து பெற்றது. 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டதால் வெறும் 9 புள்ளிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு இறங்கியது.

    இதேபோல், 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. 10 ஓவர்கள் குறைவாக வீசியதால் அந்த அணிக்கு 10 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது.

    மேலும், தாமதமாக வீசிய ஒவ்வொரு ஓவருக்கும் ஆட்ட ஊதியத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது டெஸ்ட்டுக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டுகளுக்கு ஐசிசி முறையே 10, 45, 15 மற்றும் 25 சதவீதத் தொகை அபராதம் விதித்துள்ளது.

    • 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • ஆனால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களில் ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 41 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜோ ரூட் 91 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள்முடிவில் ஆஸ்திரேலியா 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 58 ரன்னும், உஸ்மான் கவாஜா 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா இறங்கியது.

    அணியின் எண்ணிக்கை 140 ஆக இருந்தபோது வார்னர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 72 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி 28 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×