என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இலங்கை
- 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது.
- இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.
இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது. மொத்தம் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் கூடிய 7 குழுக்களை இலங்கை ராணுவம் அனுப்பி உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை 3 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. மழை நீடிக்கும் என்பதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.
- பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் பதவி நீட்டிப்பு உதவியாக இருக்கும் என கருகிறது.
இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்துள்ளது. இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. இலங்கையின் அதிபராக விக்ரமசிங்கே இருந்து வருகிறார். பொருளாதார மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வருடம் செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் அதன் அலுவலக செயல்பாட்டையும் இரண்டு வருத்திற்கு நீட்டிக்க வேண்டும். இது மிகவும் தேவையான பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் என பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இது அரசியலமைப்புக்கு எதிரானது என உடனடியாக விமர்சனம் செய்துள்ளன.
தேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதை சமாளித்து வெற்றி பெற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொடுத்தன.
சர்வதேச நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம், இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். நிர்வாக சீர்திருத்தங்கள் ஆட்சியை நெறிப்படுத்தியுள்ளன, மேலும் கல்வி முறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பளிதா ரங்கே பண்டாரா தெரிவித்துள்ளார்.
அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது பொது வாக்கெடுப்பு வழிவகுக்கும் என அக்கட்சி நம்புகிறது.
எதற்காக இரண்டு வருடம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முழு விவரத்தையும் பண்டாரா குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை அரசு ஐஎம்எஃப், உலக வங்கி, நன்கொடையாளர்களடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவற்றை வெற்றிகரமாக செய்த முடிக்க அதிபர் பதவியை இரண்டு வருடங்கள் நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க அங்கீகாரம்.
- இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது.
விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்திற்கு இடையிலான சண்டை 2009-ம் ஆணடு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் மாயமானர்கள்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இலங்கை அரசு குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.
இந்த நிலையில் மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் "மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்பேற்றல், இலங்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நாங்கள் எப்போதும் வாதிடுவோம். 2023-ல், ஆயுதப்போரின் போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், நான்கு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம்.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது. கனடா மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்தை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும்" என்றார்.
இதற்கு இலங்கை அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இனப்படுகொலை நடைபெற்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
இனப்படுகொலை என்ற மூர்க்கத்தனமான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முந்தைய அனைத்து தகவல் தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு வலியுறுத்தி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாத மோதலின் முடிவுடன் தொடர்புடையது. விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா உட்பட உலகளவில் 33 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டதாகும்.
இவ்வாறு இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
- இலங்கையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 1½ லட்சம் ஈழத்தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளை கடந்த பிறகும் மறக்க முடியாத இன அழிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மே 17-ந்தேதி தான் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. அதனை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் நினைவு தினமாக அனுசரித்து வருகிறார்கள்.
இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் தனிப்பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் பல்வேறு நாடுகளில் திரைமறைவில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15-ம் ஆண்டு முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை கடைபிடிக்கப்பட உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இதையொட்டி இலங்கையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, இதற்கு முன்பு நடைபெற்றுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர் பெறவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு விடுதலைப்புலிகளள நினைவு கூறும் வகையில் யாராவது நிகழ்ச்சிகளை நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இலங்கையில் தமிழ் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிறைவேந்தல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
- ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
- ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு:
நமது அண்டை நாடான இலங்கை கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன.
இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். பல மாதங்களுக்கு நீடித்த இந்த போராட்டம் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
ஒரு கட்டத்தில் மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது.
இந்த நிலையில் இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து தற்போது அவரது மந்திரி சபையில் நீதி மந்திரியாக இருக்கும் விஜேயதாச ராஜபக்சே போட்டியிடுவார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம்.
- தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
கொழும்பு:
கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலங்கை சென்றார். அங்கு அவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் 'வீரகேசரி' பத்திரிகைக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: 2022-ம் ஆண்டு இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் நீங்கள் நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா?
பதில்: இந்த விஷயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ, கல்வியையோ தாண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆதரவும், பொறுப்பும்தான் இதற்கு காரணமாகும். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் நான் அங்கம் வகித்தேன். அப்போது கிடைத்த அனுபவம்தான் எனக்கு கை கொடுத்தது. அதேபோல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. அதனால் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் 2 ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது.
கேள்வி: நீங்கள் சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகிறீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?
பதில்: எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்தபோதே அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த கட்சியும் பின்வாங்கியதில்லை.
கேள்வி: பெங்களூரு, ஐதராபாத் போல் தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் எப்போது முதன்மை இடம் பெறும்?
பதில்: கருணாநிதி ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை. அதில் தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.
கேள்வி: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். இது சாத்தியமா?
பதில்: இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு. அதை அடைவதற்காக நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியுமா?
பதில்: இது விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மூலமே முன்னெடுக்கப்பட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கலாசார தொடர்புகளின் அடிப்படையில் இதனை முன்னெடுக்கலாம்.
கேள்வி: கச்சத்தீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசின் விஷயம் என்றாலும், மாநில அரசின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது இதை அரசியலுக்காக பேசுகிறார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது.
கேள்வி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமா?
பதில்: சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. உலகளவில் இதை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன? செலவு என்ன என்பது முக்கியமாகும். பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையில் சாத்தியமானதுதான்.
இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
- இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
- பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
கொழும்பு:
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதனை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு கடனுதவிகளை வழங்கியதுடன், இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யும் எனவும் உறுதியளித்தது.
அந்த வகையில் இந்தியாவின் பிரபல ஐடிசி குழுமம் இலங்கை தலைநகர் கொழும்புவில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான சொகுசு ஓட்டலை அமைத்துள்ளது. இந்த ஓட்டலை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-
இந்தியா இப்போது வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம். அதிக ஒத்துழைப்பால் இரு நாடுகளும் ஆதாயம் அடையும்.
இந்த ஓட்டல் இலங்கைக்கு குறிப்பாக இந்தியாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நமது பொருளாதாரத்தை எப்படி ஒருங்கிணைத்து நாம் நெருங்கி வருகிறோம் என்பது குறித்து கடந்த ஆண்டு நானும், பிரதமர் மோடியும் கையெழுத்திட்ட தொலைநோக்கு அறிக்கையின் ஒரு பகுதியாக இவை உள்ளன.
பல வருடங்களாக இலங்கை, விடுமுறையை கழிப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எதிர்காலத்தில் பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத்தில் உள்ள ஒருவர் இந்தியாவின் வடபகுதிக்கு செல்வதை விட விமானத்தில் ஏறி இங்கு (இலங்கை) வருவது எளிதாக இருக்கும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.
- மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
- சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.
ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.
கொழும்பு:
இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.
இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.
கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.
- கடந்த மாதம் 21ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர்.
- மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஒரு படகோட்டிக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது
- கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை
காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது.
1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றும் கச்சத்தீவை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்றும் தெரிவித்தார்.
ஒருவேளை கச்சத்தீவு தொடர்பாக இந்தியா கோரிக்கை விடுத்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என்றும் இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
- நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.
- இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கொழும்பு:
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, 6 நாட்கள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு கடந்த 25-ந்தேதி சென்றார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இலங்கையின், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தினேஷ் குணவர்த்தனேவின் சீன பயணம் நேற்று நிறைவு பெற்றது.
இந்த நிலையில் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு, அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்வதில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தவும், பிற கடனாளிகளுடன் நட்புறவான தொடர்பை பேணவும், சர்வதேச நாணய நிதியத்தில் சாதகமான பங்கை வகிக்கவும், நிதி நிவாரணத்தில் இலங்கைக்கு உதவவும், அதன் நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதற்கும், இதை பெல்ட் அண்ட் ரோடு' கட்டுமானத்தின் முதன்மைத் திட்டங்களாக மாற்றுவதற்கும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன என்று தெரிவித்தது.
மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்து உள்ளது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்