search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பிரச்சனை"

    சங்கரன்கோவிலில் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7-ம் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள வாட்டர் டேங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இது குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, சங்கரன்கோவிலில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் ஒழுங்காக செய்யப்படுகிறது. மற்ற பகுதி மக்களை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்களுக்கு தண்ணீர் இல்லாத சமயத்தில் வாட்டர் டேங்கில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அடிக்கடி டேங்கர் வாகனம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களுடன் பேசிய இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் நகருக்கு இன்னும் 4 புயல் வந்தால் குடிநீர் பிரச்சனை தீரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். திண்டுக்கல்லில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வினியோகம் தடைப்பட்ட பகுதிகளில் படிப்படியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்கு வரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். தற்போது ஏற்பட்ட புயல் மழையால் பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    எனவே இது போல் மேலும் 4 புயல் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பட்டால் திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சனை தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    விருத்தாசலம் பூதாமூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பூதாமூரில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வீதிகள் உள்ளன. இதில் ஆர்.கே.ஆர் நகர் பகுதியில் சிதம்பரம் விருத்தாசலம் மெயின் ரோட்டில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்களின் வசதிக்காக விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், தங்கம் நகர், பெருமாள் கோவில் பகுதியில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் நேரடி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பின் மூலம் காலை மற்றும் மாலை வேலைகளில் பொது மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    நேரடி இணைப்பு என்பதால் அழுத்தம் தாங்காமல் குடிநீர் வரக்கூடிய குழாய் ஆங்காங்கே சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது.

    ஆர்.கே.நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் பூதாமூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 8 மணியிலிருந்து 8.30 மணி வரை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மேல்மாம்பட்டு கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கு கடந்த 3 மாதமாக மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். இதன் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே போல பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் சேர்ந்த பொதுமக்கள் காலிகுடத்துடன் கடலூர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது:-

    பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் குழாய் உடைந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் குடிநீர் பிரச்சினையை தீர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
    திண்டுக்கல் மாநகரில் மீண்டும் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி யில் 48 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.இவர்களுக்காக ஆத்தூர் காமராஜர் அணை மூலமும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    தற்போது பருவ மழை பொய்த்துப்போனதால் காமராஜர் அணையின் நீர் மட்டம் 2 அடிக்கும் கீழ் உள்ளது. இதனால் மாநகர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் போதுமானதாக இல்லை.

    எனவே நகர் பகுதியில் தினசரி எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் மக்கள் அலைந்து திரியும் நிலை உருவாகியுள்ளது. கோடை காலத்தைப போல் இப்போது குடிநீர் பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளதால் திண்டுக்கல் நகர மக்கள் விரக்தியில் உள்ளனர்.

    மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்தாலும் மக்கள் திருப்தியடைந்த பாடில்லை. எனவே பருவ மழை கைகொடுத்தால்தான் காமராஜர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும். இல்லையென்றால் இன்னும் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் தலைவிரித்தாடும் என்பதில் அய்யமில்லை.

    ×