search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீதாராம் யெச்சூரி"

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #SitaramYechury #TMC #BJP
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. எந்த மாநிலத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதை நிர்வாகத்துக்கு எதிரானதாகவோ, மாநில ஆட்சி அதிகாரத்துக்கு எதிரானதாகவோ கருதமுடியாது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. தாமாகவே விசாரணை நடவடிக்கையை தொடங்கினால் தான் ஆட்சேபனைக்குரியது.

    பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான். இரு கட்சிகளையும் சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். பா.ஜனதா ஏன் விசாரணைக்காக 5 வருடங்கள் காத்திருந்தது?

    இவ்வாறு அவர் கூறினார். #SitaramYechury #TMC #BJP 
    மோடி அரசையும், அதிமுக அரசையும் அப்புறப்படுத்த ஆதரவு தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury

    நெல்லை:

    பாளை ரெட்டியார்பட்டி ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில் லெனின் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லெனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.

    விடுதலை போராட்ட வீரரும், ரஷ்ய புரட்சியை புகழ்ந்து பாடியவருமான மகாகவி பாரதியார் வாழ்ந்த இந்த மண்ணில் புரட்சியாளர் லெனின் சிலை திறக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியான உடன், ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினர் சேர்ந்து அங்கிருந்த லெனின் சிலையை சாய்த்தனர். அப்போது நாங்கள், லெனின் சிலையை தகர்க்கலாம், அவரது சித்தாந்தத்தையும், புரட்சியையும் மக்களிடம் இருந்து அழிக்க முடியாது என்று கூறினோம்.

    100 ஆண்டுகள் பழமையான புரட்சியையும், புரட்சியாளரையும் ஏன் தாங்கி பிடிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். இன்றைய சூழலிலும் சமூகத்தில் சுரண்டல் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பதற்கு லெனின் கொள்கைகள் உதவும். மோடி தலைமையிலான மத்திய அரசால் இந்திய மக்களின் நிலைமை மோசமாகி வருகிறது. வளமிக்க நாட்டில் மக்களின் வாழ்வாதாரம் சிதையும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் உள்ள 19 பெரிய செல்வந்தர்களின் சொத்துகள், நாட்டில் உள்ள 50 சதவீத மக்களின் செல்வத்துக்கு இணையாக உள்ளது. முதலாளிகள் கொள்ளை லாபம் அடையவும், பெரும் பணம் திரட்டவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

    இதை தடுக்க தொழிலாளிகள், விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். ஏற்கனவே டெல்லி, மும்பையில் நடத்திய பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தனிமனிதரான, தனக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரண்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறிஉள்ளார். அது தவறானது ஆகும். ஏனென்றால் மத்திய அரசை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற எதிர்கட்சி தலைவர்களை, மக்களே ஒன்றிணைய வைத்துள்ளனர்.

    நாட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஆட்சி மாற்றம் அவசியம் ஆகும். மக்கள் நலன் சார்ந்த மாற்று கொள்கைகள் உருவாக வேண்டும். மக்களுக்கு சாதகமான புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். மதசார்பற்ற, ஜனநாயக அமைப்பை உடைக்க பாரதிய ஜனதா உள்ளிட்ட சில சக்திகள் முயற்சி செய்கின்றன.

    தமிழகத்தில் தனது கூட்டாளிகளை உருவாக்கி, அவர்கள் மூலம் பாரதிய ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது. அதற்கு இடம் கொடுக்க கூடாது. தமிழகத்தில் வேற்றுமையில் ஒற்றுமையையும், சமூக நீதியையும் உருவாக்கியதில் திராவிடத்தின் பங்கு மிகப்பெரியது. அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

    இந்தியாவில் இருந்து மோடி அரசையும், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. அரசையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #SitaramYechury

    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SitaramYechury

    கொல்கத்தா:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக கூறியுள்ளார். #SitaramYechury

    சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
    சென்னை:

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.



    அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
    மத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடன தினத்தை அனுசரித்து, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவசர நிலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தபோது அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துரோகம் இழைத்தது. ஆனால் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் அவசர நிலையை எதிர்த்து தீவிரமாக போராடியதாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை தாங்களையே சாரும் என்றும் பெருமை கொள்கிறார்கள்.

    உண்மையிலேயே ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை நாட்டு மக்களையே சாரும். நிர்வாக ரீதியாக அவசர நிலையை மக்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது. அவசர நிலையின் போது நீதித்துறைக்கு எதிராக இந்திராகாந்தி என்ன செய்தாரோ அதையே தற்போதைய பா.ஜ.க. அரசும் செய்கிறது. மத்திய அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது. அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

    அவசர நிலை அறிவித்தபோது அதற்கெதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்து போராடியது போல, தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திலும் எங்களது கட்சி முன்னணியில் இருக்கும். அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து தீவிரமாக போராடுவோம். விவசாயிகளின் நிலங்களையும், பொதுமக்களின் வீடுகளையும் அழித்து சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தேவையற்றது.

    தி.மு.க. உடன் கூட்டணி அமைப்பது குறித்து மத்திய, மாநிலக்குழு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். மாநிலத்தில் இருந்து அ.தி.மு.க.வும், மத்தியில் இருந்து பா.ஜ.க.வும் அகற்றப்படவேண்டும். அதற்கான குறிக்கோளை எட்டும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் செயல்பட்டால் கண்டனத்துக்குரியது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயகம் இல்லாத சவுதி அரேபியா, ஏமன், சிரியா, ஈரான் போன்ற நாடுகள் கூட இந்தப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews
    இந்தியா மேம்படவும், மக்கள் வளம் பெறவும் மத்தியில் பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

    திருச்சி:

    தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

    இந்த பயணம் திருச்சியில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல, நல்ல கொள்கைதான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா? அல்லது எந்த தலைவர் வருவார் என யோசிக்காமல் எந்த கொள்கையை அரியணை ஏற்ற வேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி முறையை அமல்படுத்தியதால் சிறு, குறு தொழில்கள் பாழ்பட்டு விட்டது. கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. இதை மாற்ற மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, மாற்றுக்கொள்கையுடையவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    தமிழகத்தில் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பதில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் தமிழகத்தில் உள்ள ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என சொல்ல முடியும். தமிழக அரசை ‘ரிமோட்’ மூலம் மோடி இயக்குகிறார்.

     


    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றிருக்கிறார்கள். காவலர்கள் கையாண்ட துப்பாக்கி சைலன்சர் வகை துப்பாக்கி ஆகும். அதாவது சுட்டால் சத்தம் வராது. போராட்ட பதற்றத்தில் இருந்து கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது, உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது.

    துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கைகூட விடப்படவில்லை. ஒரு வேளை இதில் மத்திய ஆட்சியாளருக்கு தொடர்பு இருக்குமேயானால், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மூலம் ஆழமாக விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும்.

    வங்கிகளின் வாராக்கடன் தொகையான ரூ.11.5 லட்சம் கோடியானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியது தான். அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றாலே நாட்டில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும். இந்தியாவில் வலுவான போராட்டம் மூலமாக தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

    இந்தியா மேம்படவும், மக்கள் வளம்பெறவும் பாரதிய ஜனதா அரசும், மாநில பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும். சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வருகிற ஜூலை 2-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மறுநாள் ஜூலை 3-ந்தேதி சேலத்தில் பெண்கள் சிறப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.

    கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SitaramYechury #BJP

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார். #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident
    தூத்துக்குடி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று தூத்துக்குடி வந்தார். அவர், அங்கு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கி சூடு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களை சுட்டோம் என்று போலீசார் கூறுவதை நம்ப முடியவில்லை.



    அதுபோன்று வன்முறை நடந்து இருந்தால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை படிப்படியாக பின்பற்றி இருப்பார்கள். ஆனால் இங்கு நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி குண்டு பெரும்பாலும் வயிற்றிலும், அதற்கு மேலேயும் பட்டு உள்ளது. இது கலவரத்தை கட்டுப்படுத்தும் முறை அல்ல. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் போது, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அங்கு இல்லாதது வினோதமானது. இதனால் கீழ்நிலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு உள்ளார்கள். இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அல்லது ஐகோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    தூத்துக்குடியில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக போலீசை குறைக்க வேண்டும். பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயம், நிலத்தடி நீர், மக்களுக்கான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டரீதியாக நிலைத்து நிற்காது. அதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident 
    ×