search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடையில் கொள்ளை"

    இரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    இரணியலை அடுத்த கீழ மணியன்குழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று மதியம் மீண்டும் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேல் ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த அவர் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடையினுள் சென்று பார்த்த போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 பீர் பாட்டில்கள், 12 ரம் பாட்டில்கள் உள்பட 43 மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமிரா, மாணிட்டர், சில்லறை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் மது பாட்டில்கள் இருந்த இடங்களில் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை கொள்ளையர்கள் திருடிச் சென்றதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் வேறு எங்கும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி 4 பேர் கொண்ட கும்பல் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை அருகே தோப்புவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் ஆ.குடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 35) சூபர்வைசராகவும், அவரது சகோதரர் செந்தில்குமார் மற்றும் நவக்குடியை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு விற்பனை பணம் ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 300-ஐ எடுத்துக்கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர். இதில் கண்ணன், செந்தில்குமார் ஒரு மோட்டார்சைக்கிளிலும், காளிதாஸ் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.

    அப்போது அந்த கடை அருகே 4 பேர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையில் இருப்பது போன்று தள்ளாடியபடி வந்தார். திடீரென கீழே தவறி விழுந்தார். அவரை தூக்குவதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே சென்றனர்.

    அப்போது போதை ஆசாமியுடன் வந்த 3 பேரும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். அவர்களை தடுத்த போது கண்ணனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். இதிலிருந்து தப்பிய கண்ணன் கடைக்குள் செல்ல தலைதெறிக்க ஓடினார். அப்போது கும்பலை சேர்ந்த ஒருவன் கண்ணனின் காலில் அரிவாளால் வெட்டினான். இதில் தவறி விழுந்த அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    இதில் அந்த பையில் இருந்த சில பணக்கட்டுகள் கீழே விழுந்தன. மீதமிருந்த ரூ.16 லட்சம்து 60 ஆயிரத்து 150 பணத்துடன் 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கொள்ளையர்கள் தவற விட்டதில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 150 பணம் தப்பியது. படுகாயம் அடைந்த கண்ணனை மற்ற ஊழியர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து மணல்மேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் சூப்பர் வைசர் கோபால்சாமி மற்றும் விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோர் டாஸ்மாக் கடை யை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இன்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் வந்து பார்வையிட்டபோது டாஸ் மாக்கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் சுமார் 6,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள ராஜக்காபட்டி, கல்லுப்பட்டி, குத்துக்கொம்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இருந்தபோதும் அவர்களை சமாதானம் செய்து அதிகாரிகள் அனுப்பியதோடு டாஸ்மாக் கடையையும் திறந்தனர். இந்த கடையில் விற்பனை மேலாளராக முருகன் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டி சென்று விட்டனர்.

    கடைக்கு வாட்ச்மேனாக முருகன் என்பவர் இருந்தார். நள்ளிரவில் சரக்கு வேனில் வந்த ஒரு கும்பல் வாட்ச்மேன் முருகனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் கடையின் முன்புற கேட்டையும், உள்ளே இருந்த 2 பூட்டுகளையும் உடைத்தனர்.

    பின்னர் கடைக்குள் புகுந்து பணம் ரூ.1½ லட்சம், 25 மதுபான பெட்டிகள் ஆகியவற்றை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர். டாஸ்மாக் கடை அருகே எந்த வீடுகளும் இல்லாததால் படுகாயமடைந்த முருகன் அருகில் இருந்த தோட்டத்துக்கு சென்று இடத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பின் பொதுமக்களும் அங்கு ஒன்று கூடினர். இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற டி.எஸ்.பி. கோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராம நாராயணன், சப்-இன் ஸ்பெக்டர் அபுதல்ஹா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த வாட்ச்மேன் முருகன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பில்லமாநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 4 பேர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×