search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வங்கி"

    10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்த தனியார் வங்கியை கண்டித்து தஞ்சை பால் வியாபாரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் பால்பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதனை வீடு வீடாக சென்று சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் பால் வினியோகம் செய்து அந்த பணத்தை வங்கியில் செலுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பால் வியாபாரம் செய்த பணம் ரூ.1 லட்சத்தை கட்டுவதற்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். இதில் ரூ.99 ஆயிரத்திற்கு நோட்டுகளாகவும் மீதி ரூ.1000-க்கு 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்துள்ளார்.

    அப்போது அதனை வாங்கிய வங்கி காசாளர் ரூபாய் நோட்டுகளை மற்றும் பெற்றுக்கொண்டு ரூ.10 நாணயங்களை முத்துகிருஷ்ணனிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் ஏன் ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்குறீர்கள்? என கேட்டார். அதற்கு ரூ.10 நாணயம் செல்லாது என வங்கி காசாளர் பதில் அளித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி முத்துகிருஷ்ணன் வங்கிக்கு வெளியே வந்து வங்கி முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பால் வியாபாரிக்கு ஆதரவாக அங்கு அருகே உள்ள சில வியாபாரிகளும் குரல் கொடுத்தனர்.

    இதனால் வங்கி முன்பு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பால் வியாபாரியிடம் வங்கி காசாளர் ரூ.10 நாணயங்களை வாரத்திற்கு ஒரு முறைதான் வாங்குவோம் என கூறியுள்ளார். எங்களிடம் ரூ.10 நாணயங்களை எண்ணுவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.

    அதனை கேட்டு ஆத்திரம் அடைந்த முத்து கிருஷ்ணன், மற்ற வியாபாரிகளும் உங்களுடைய வேலையே பணத்தை எண்ணி வாங்குவதற்குதான். எந்திரத்தில் பணம் கட்ட தெரியாத எங்களை போன்ற வியாபாரிகள் சிலர் மட்டுமே வங்கிக்கு வந்து பணம் கட்டுகிறோம். இதனை கூட வாங்க உங்களால் முடியவில்லையா? என கடிந்து கொண்டனர்.

    மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் புகார் அனுப்புவோம் என்று வியாபாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.

    பால் வியாபாரி வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் தனியார் வங்கி பணம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதில் ரூ.1 கோடியே 4 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்கள் கூறும்போது, “அடையாறு ஆக்சிஸ் வங்கியில் இருந்து இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறினர்.

    மேலும் அதற்கான வங்கி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சமயத்தில் வங்கி பணம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் சிறப்பு அனுமதி கடிதம் இல்லாததால் வங்கி பணம் ரூ.1.04 கோடியை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ஆக்சிஸ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி சார்பில் சிறப்பு அனுமதி பெற்று சான்றிதழ் கொடுத்ததும் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. #LSpolls

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நள்ளிரவு தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. #BankFire

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்து, கரும்புகை குபு, குபு வென வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே வங்கியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், வங்கியின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் உட்புறம் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.

    இதனால் வங்கி மேலாளர் சமீர் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் தீ மளமளவென பரவி வங்கியில் இருந்த கணினி, ஏ.சி., மேசை, நாற்காலி, தளவாடச் சாமான்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்தது. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

    தீ விபத்தில் வங்கியில் இருந்த சுமார் 20 லட்சம் பணம் தப்பியது. மேலும் அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தெரியவில்லை. இது குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #BankFire

    ×