search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசம்"

    • வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
    • பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அலகுகுத்தியும், காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 18 பேர் சண்முகாநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய 2 கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகுகுத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கடந்த 49 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகாநதிக்கு வந்து பின் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருவோம் என்றனர்.

    • தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம்.
    • மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா நேற்று நடந்தது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடைபெற்று வந்தது. நேற்று காலை தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம், மகா தீபாரதனையும், காவடி பூஜையும், நடைபெற்றது.

    பிற்பகல் 2 மணி அளவில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று பக்தர் ஒருவருக்கு மார்பு மீது மிளகாய் பொடி இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செடல் சுற்றுதல் தீமிதித்தல், தேர் வீதி உலா ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவதானம் பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது.
    • பக்தர்கள் குவிந்ததால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    பழனி:

    பழனியில் இன்று தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

    எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் 3 நாட்களுக்கு இலவச தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழனி நகரில் 3 நாட்களுக்கு இலவச பஸ் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல்-கோவை, பழனி-மதுரை இடையே சிறப்பு ரெயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி அரசு, தனியார் பஸ்கள் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும், ரெயில்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

    இன்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் பழனியில் திரண்டதால் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெயிலில் காத்துக்கிடந்தனர்.

    இதனால் கைக்குழந்தைகள் உள்பட பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து மருத்துவ முகாம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கூட்டத்தில் சிக்கியவர்களை ஒழுங்குபடுத்துவதிலும், தாமதம் ஏற்பட்டது.

    பக்தர்களை கயிறு கட்டி ஒவ்வொரு இடமாக நிறுத்தி தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

    பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் இங்கு கிடைக்கும் முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். அவர்களுக்காக ரூ.20, ரூ.35, ரூ.45 ஆகிய 3 விலைகளில் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பலருக்கு பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை. இதனால் மலைக்கோவில் தேவஸ்தானம், பிரசாத ஸ்டால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறதா? என பக்தர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.

    பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட எஸ்.பி.யுடன் ஆய்வு செய்த நிலையில் இன்று தென்மண்டல ஐ.ஜி. பிரேம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறும் நிலையே ஏற்பட்டது.

    பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாருக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு கியாஸ் சிலிண்டரில் தீ பற்றியதில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஓட்டல் கடைகளுக்கும் பரவியது.

    தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காவடி பூஜை, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எடப்பாடி அடுத்த வெண்குன்றம் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில், எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் சன்னதி, க.புதூர் கந்தசாமி ஆலயம், கவுண்டம்பட்டி குமர வடிவேலர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது. 

    • அனைவருக்கும் மகிழ்ச்சியான தைப்பூச வாழ்த்துகள்.
    • முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும்.

    புதுடெல்லி:

    தைப்பூச விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் மகிழ்ச்சியான தைப்பூச வாழ்த்துகள். முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம்,வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.

    இந்த நாள் நம் வாழ்வில் அமைதியையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தெரிவித்துள்ளார்.



    • உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாள்.
    • தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டு களிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலாப் பருவமும் ஒன்றாக வரும் நாளில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது.

    இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.

    முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

    இன்னும் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

    முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன. 

    • தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

    சென்னை:

    தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,

    தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கூறியுள்ளார். 



    • முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தனித்துயர்ந்த

    குன்றுகள் தோறும்

    வீற்றிருக்கும்

    தமிழ்நிலக் கடவுள்;

    உலகெங்கும் வாழும்

    தமிழர்களின்

    தனிப்பெரும் கடவுள்

    முருகப் பெருமானைப்

    போற்றுவோம்!

    அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பழனி

    அறுபடைவீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்

    தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.


    பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் ஜோதி தரிசனத்தை காண மக்கள் வந்து செல்லும் வகையில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.

    அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார். 



    ×