search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் மோசடி"

    களக்காடு அருகே நிலத்தை எழுதிவாங்கி விட்டு ரூ.20 லட்சம் மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிமணி (வயது 55). விவசாயி. கடந்த 2015-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக படலையர்குளத்தில் உள்ள துளசிமணிக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். 

    கோவில்பத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (49) என்பவர் அந்த இடத்தை ரூ.32 லட்சத்திற்கு விலைபேசி முதலில் ரூ.12 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.20 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதை நம்பி துளசிமணி, பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார்.

    ஆனால் ஆறுமுகம் ரூ.20 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துளசிமணி, களக்காடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
    நிலம் வாங்கித்தருவதாக கூறி வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தததாக அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் பாஸ்கர் (வயது 56). மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், அங்கு தொழில் செய்து வருகிறார்.

    இவர் மதுரை காளவாசலில் உள்ள அரசு வங்கியில் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரையில் நிலம் வாங்க முடிவு செய்து செய்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளர் நல்லபெருமாள் என்பவர் ராஜமாணிக்கம் பாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு மானகிரி பகுதியில் நிலம் விலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதை நம்பி அவர் முன் பணமாக ரூ.20 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து நிலம் வாங்குவதற்கும், பத்திரப்பதிவுக்கும் செலவுகள் ஏற்படும். எனவே கையெழுத்திட்ட பணம் நிரப்பாத காசோலையை அனுப்புமாறு நல்ல பெருமாள் கூறியுள்ளார். இதை நம்பி அவரும் தான் கையெழுத்திட்ட காசோலையை அனுப்பினார்.

    இந்த நிலையில் ராஜமாணிக்கம் பாஸ்கர் மதுரை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் நிலம் வாங்குவதற்காக தான் கொடுத்த காசோலை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்தை நல்ல பெருமாள் எடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி பராசக்தி, பாலாஜி வெங்கடேசன் ஆகியோர் இருந்துள்ளனர்.

    மேலும் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை வாங்கியதாகவும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். எனவே அரசு வங்கி மேலாளர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நல்லபெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    திருநின்றவூரில் போலி ஆவணம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது54). வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். இவர் சொந்தமாக நிலம் வாங்க குழந்தைவேலு என்பவரை அணுகியுள்ளார்.குழந்தை வேலு மூலம் திருநின்றவூர்,பிரகாஷ் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மோகன் என்பவரிடம் நிலம் வாங்க சென்றுள்ளனர். அப்போது மோகன் பிரகாஷ்நகர் 7 வது தெருவில் உள்ள ஒரு கிரவுண்ட் நிலத்தை ராஜேந்திரனுக்கு காட்டியுள்ளார்.

    இது கோயம்பத்தூரை சேர்ந்த லோகிதாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று 52 லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் விலைக்கு வாங்க ஒப்பு கொண்டு முன் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.அதன் பின்பு லோகிதாசையும் மோகன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இதனை நம்பி அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு ஆவடி பத்திர பதிவு அலுவலத்தில் ராஜேந்திரன் மனைவி பெயரில் 1200 சதுர அடியும், மற்றொரு பாதி ராஜேந்திரன் பெயரிலும் ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.வாங்கிய இடத்தில் வீடுகட்டுவதற்காக சுத்தம் செய்தபோது அங்கு வந்த ஒருவர் இடம் தன்னுடையது என்றும் தனது பெயர்தான் லோகிதாஸ் என்று கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணை மேற்கொண்டதில் வளசரவாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் லோகிதாஸ் போல் ஆள்மாறட்டம் செய்து நிலத்தை விற்க கோயம்பத்தூரில் இருப்பது போல் ரே‌ஷன் கார்டு,ஆதார் கார்டு,பான் கார்டு,வாக்காளர் அட்டை முதல் வங்கி கணக்கு வரை லோகிதாஸ் பெயரில் வாங்கியுள்ளார்.மேலும் போலி பத்திரத்தை ஏற்பாடு செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் லோகிதாசாக ஆள் மாறாட்டம் செய்த ரவி அவரது மனைவி தேவிபிரியா மற்றும் அவரது கூட்டாளி ஹரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன், சங்கர் என்கின்ற ராம சுப்ரமணியம் ஆகிய இருவரை தேடிவருகின்றனர். #tamilnews
    போரூர் காரம்பாக்கத்தைச் சேர்ந்தவரிடம் நிலம் விற்பதாக கூறி ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    போரூர் காரம்பாக்கம் அருணாசலம் கார்டன் பகுதியில் உள்ள மசூதியில் பணியாற்றி வருபவர் அப்துல் கரீம் (வயது 67). இவர் மசூதிக்கு சொந்தமான இடம் மிக குறைந்த விலையில் தம்மிடம் விற்பனைக்கு உள்ளதாக பலரிடம் கூறி வந்தார்.

    இதை நம்பி மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையை சேர்ந்த டெய்லர் ஜாகீர்அகமது கடந்த 9-ந்தேதி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அப்துல்கரீமிடம் கொடுத்தார். ஆனால் அப்துல்கரீம் இதுவரை ஜாகிர் அகமதுவுக்கு இடத்தையும், கிரையம் செய்து தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகிர்அகமது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அப்துல்கரீமை கைது செய்தார். #Tamilnews

    நாமக்கல் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான 1,204 சதுர அடி நிலத்தை கடந்த 2009-ம் ஆண்டு நடராஜனின் சித்தப்பா பொன்னுசாமி (வயது 70), கூட்டு பட்டாவை வைத்து, போலியாக பட்டா மற்றும் இதர ஆவணங்களை தயார் செய்து, நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தூசூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் பெயருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    அதே ஆண்டு தூசூர் பாலசுப்பிரமணியம், அய்யாவு என்பவருக்கு பத்திரத்தை மாற்றி பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு நடராஜன், அவருடைய நிலத்தை வங்கியில் அடகு வைக்க முயற்சித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசீலனை செய்தபோது, அந்த நிலம் பாலசுப்பிரமணியம் மற்றும் அய்யாவு என்பவர்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து நடராஜன் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரபதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய அவகாசம் கொடுத்து, இருவருக்கும் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் ரத்து செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இந்த மோசடி சம்பவம் குறித்து இணை சார்பதிவாளர் பத்மினி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி பொன்னுசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 
    ×