search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க."

    • மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
    • முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா, சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தது. முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதனை கைவிட வேண்டும்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதித்து வருகிறார். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பாதி உரையை படிக்காமல் சென்றார். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என கூறுகிறார்.

    பேரவையின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு என்பது கவர்னருக்கு தெரியும். இருந்தாலும் ஏதாவது குறைகூறி சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்.

    பா.ஜ.க. தலைவர்கள் தேசியத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். தேசியத்திற்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்கு விரோதமாகவும் செயல்படும் பா.ஜ.க. கட்சி, அதை மூடி மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஸ்ரீ நாராயண குரு சங்கத்தில் யாத்திரை மாநாடு நடைபெற்றது.
    • சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையிலான சமூக அமைப்பே தவிர வேறொன்றும் இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா நகராட்சியில் உள்ள சிவகிரியில் ஸ்ரீ நாரா யண குரு மடம் உள்ளது. இங்கு ஸ்ரீ நாராயண சங்கத்தின் தலைமையகம் இருக்கிறது. இந்த சங்கத்தில் யாத்திரை மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கிவைத்தார். அந்த விழாவில் அவர் பேசிய தாவது:-

    சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையிலான சமூக அமைப்பே தவிர வேறொன்றும் இல்லை. நாராயண குரு சனாதன தர்மத்தின் பேச்சாளராகவோ அல்லது பயிற்சி செய்பவராகவோ இல்லை. ஆனால் அதை புனரமைத்து புதிய யுகத்திற்கு ஏற்ற தர்மத்தை பிடகடனப்படுத்திய ஒரு துறவி.

    நாராயண குரு பரிந்துரைத்த புதிய யுகமான மனித நேய தர்மம் காலத்துடன் நிற்கிறது. சனாதன தர்மத்தின் கட்டமைப்பில் குருவை நிலைநிறுத்த முயற்சிப்பது துறவியை அவம திக்கும் செயலாகும். வர்ணாஸ்ரம தர்மம் என்பது சனாதன தர்மமத்திற்கு ஒத்ததாகவோ அல்லது ஒருங்கிணைந்த பகுதியாகவோ உள்ளது.

    நாராயண குருவின் துறவு வாழ்க்கை முழு சாதுர்வர்ண அமைப்பையும் கேள்விக்குறியாக்கியது மற்றும் மீறியது. சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவை வெறும் மதத் தலைவராகவோ அல்லது ஒரு மத துறவியாகவோ குறைத்து மதிப்பிடும் முயற்சிகள் உணரப்பட வேண்டும்.

    குருவுக்கு மதமும் இல்லை, ஜாதியும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் ஒரு குருவை சாதி அல்லது மதத்தின் எல்லைக்குள் கொண்டுவர முயன்றால், அவரை அதற்கு மேல் அவமதிக்க முடியாது.

    இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி நடக்க விடக்கூாது. இதுபோன்ற தவறான விளக்கங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று உறுதியாக கூறமுடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் கருத்துக்கு பா.ஜ.க. தரப்பில் கடுமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது கருத்துக்களின் மூலம் சிவகிரியில் உள்ள சனாதன தர்மத்தையும், ஸ்ரீ நாராயணகுருவின் ஆதரவாளர்களையும் அவமதித்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

    "சிவகிரி மாநாட்டில் பினராயி விஜயன் பேசியது சனாதன தர்மத்தை வெறுக்க வேண்டும் என்பது தான். அவரது கருத்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதன் தொடர்ச்சியே" என்று பா.ஜ.க. மூத்த தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "பினராயி விஜயனின் ஆட்சியில் கேரளாவில் இந்து சமூகம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது. நாராயண குருவை சனாதன தர்மத்தின் எதிரியாக சித்தரிக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசாரத்தை கேரள மக்கள் நிராகரிப்பார்கள்" என்றும் கூறினார்.

    • கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தீபங்கர்சென் எம்.எல்.ஏ.. தனது குடும்பத்தினருடன் தங்கினார்.
    • குடும்பத்தினருடன் ஆட்டோவில் வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு, பெலோனியா தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தீபங்கர்சென். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தீபங்கர் சென் எம்.எல்.ஏ., தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக புதுச்சேரி ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அவர் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், புதுச்சேரி அஜிஸ் நகரில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தீபங்கர்சென் எம்.எல்.ஏ.. தனது குடும்பத்தினருடன் தங்கினார்.

    கட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை குடும்பத்தினருடன் ஆட்டோவில் புறப்பட்ட தீபங்கர் சென் எம்.எல்.ஏ., புதுச்சேரி சட்டசபை வந்தார். ஆட்டோவில் குடும்பத்தினரை காத்திருக்க வைத்துவிட்டு, தனியாக சட்டசபைக்குள் சென்ற தீபங்கர் சென் எம்.எல்.ஏ.,வை சபை காவலர்கள் நிறுத்தி விசாரித்தனர்.

    தான் எம்.எல்.ஏ., என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்த பின்பு சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். சட்டசபைக்கு வந்த தீபங்கர் சென் எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    சில நிமிடம் அமைச்சருடன் பேசிய பின்பு, சட்டசபையில் இருந்து மீண்டும் குடும்பத்தினருடன் ஆட்டோவில் புறப்பட்டு, புதுச்சேரியில் பல இடங்களை பார்வையிட்டுவிட்டு புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில் சென்றார்.

    இதுகுறித்து தீபங்கர் சென் எம்.எல்.ஏ., கூறுகையில், 2 நாட்களுக்கு முன் தமிழகம் வந்தேன். தற்போது புதுச்சேரியை சுற்றிப் பார்க்க வந்துள்ளேன். குடும்பத்தினருடன் ஆட்டோவில் வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி அழகாக உள்ளது. இங்கு உள்ள இலவச திட்டங்கள் போல் திரிபுராவில் ஏதும் கிடையாது. குடும்பத்தினருடன் ஆட்டோவில் பயணிப்பது பெரிய விஷயம் இல்லை' என்றார்.

    • பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. மனைவி மீது தாக்குதலை கண்டித்து மறியல்.
    • தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர் பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவியை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தாக்கினர்.

    அதை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. அசோக்பாபு தலைமையில் அக்கட்சியினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு முதலியார் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.


    இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையறிந்து ஆத்திரமடைந்த முதலியார் பேட்டை, தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத்தின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நள்ளிரவு 12 மணியளவில், முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என ஆக்ரோஷத்தோடு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசாரை தள்ளி தாக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • தேர்தல் பற்றி அமித்ஷா ஆய்வு நடத்துவார் என்று கூறப்படுகிறது.
    • திருவண்ணாமலையில் பா.ஜ.க. அலுவலக கட்டிடத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) சென்னை வர உள்ளதாகவும், தமிழகத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் அமித் ஷா-வின் பயண தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 10-ந்தேதி தமிழகம் வருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தற்போது தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த அமைப்பு தேர்தல் பற்றி அமித் ஷா ஆய்வு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வை அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் வகையில் எத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அமித் ஷா அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மத்திய மந்திரி அமித் ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

    கூட்டணி, பிரசாரம், கொள்கை பிரகடனம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. உயர்நிலை குழு தலைவர்களுடன் ஆலோசனை முடிந்த பிறகு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் மத்திய மந்திரி அமித் ஷா தனியாக பேசுவார் என்று தெரிகிறது.

    • தி.மு.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்.
    • பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் ஏற்க தயார்

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பாரா இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புகள் உள்ளது.

    ஏனென்றால் அ.தி.மு.க.-வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எங்களுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் உள்ளனர்.

    மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லாதது மிகப்பெரிய அரசியல் தவறு என்பதை கட்சியினர் உணர்ந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியிடம் சரியாக எடுத்துக்கூறவில்லை. வரும் காலங்களில் அம்மாவின் கட்சியான அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால் உறுதியாக அவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் சேருவது தான் சிறந்தது. அவர்கள் வேறு யாருடன் கூட்டணி அமைத்தாலும் அது மெகா கூட்டணியாக அமையாது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழும் வாய்ப்புள்ளது.

    மத்திய அரசு அ.தி.மு.க. அரசை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது.

    எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டால் 2026 க்கு பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்கிற கேள்வி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது 4 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் பயத்தால் தி.மு.க.வுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார். அவர் தி.மு.க. வுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றியாக உள்ளது.

    அ.திமு.க.வில் என்னுடைய சிலிப்பர் செல் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.
    • எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.

    எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது நான் அதை சுதந்திரமாக எடுத்த முடிவுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தான்.

    ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க. அரசு கொண்டுவர பார்க்கிறார்கள்

    இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.

    • மோடி, அதானிக்கு உள்ள தொடர்பை கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.
    • பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே. பி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிளப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதானி ஊழல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ், தி.மு.க. இடதுசாரி எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர். கோஷங்களையும் எழுப்பினார்கள்.

    மோடி, அதானிக்கு உள்ள தொடர்பை கூறி கோஷங்களை எழுப்பினார்கள். ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோஷ மிட்டனர்.

    பாராளுமன்ற மேல் சபையில் இன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக அமளி நிலவியது.

    மேல்சபை கூடியதும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஜார்ஜ் சோரஸ்-காங்கிரஸ் தலைமைக்கு இடையே உள்ள பிரச்சனையை கிளப்பினார்கள். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் மேல்சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை விமர்சித்தனர்.

    இது தொடர்பாக கடும் அமளி நிலவியது. அமளிக்கு நிலையில் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.
    • நாட்டை விற்க வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டோம்.

    புதுடெல்லி:

    அதானி விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தனர்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, 'தேசியக் கொடியை விநியோகித்தோம். நாட்டை விற்க வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டோம். ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்.' என்றார்.

    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியீடு.
    • காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிப்பு.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடை பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் அணி) ஆகிய கட்சிகள் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ்சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆகிய எதிர்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. நாளை (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதற்கிடையே வாக்குப் பதிவு முடிவடைந்த சில மணி நேரங்களில் அங்கு ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 145 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது.


    இந்நிலையில் மேலும் 2 கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பின் படி பா.ஜ.க கூட்டணி 178-200 இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி 82-102 இடங்களை வெல்லும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

    இதேபோல டூடேஸ் சாணக்கியா கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கே 175 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
    • கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    கோவை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.கவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகளையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.

    தமிழகம் வந்த சில நாட்களிலேயே அண்ணாமலை கோவைக்கு வருகை தர உள்ளார்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.

    இதற்காக 1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து அவர் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    லண்டன் சென்று விட்டு 3 மாதம் கழித்து முதல்முறையாக அண்ணாமலை கோவைக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கோவை மாவட்ட பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளனர்.

    கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னதாக வருகிற 30-ந் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.

    அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.

    • பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
    • 50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், எனது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேரை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி வழங்க பா.ஜ.க. முன்வந்தது.

    ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பணம் பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து வந்தது ? என பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.


    இந்த நிலையில் இதை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை திட்டத்தை கொண்டு வந்து 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். இதில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்வாக்கின் கீழ் சென்றதால் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிர்வாகத்திற்கு வழிவகுத்தது.

    தற்போது காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.

    50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர். இதுபற்றி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் என்னிடம் கூறினர். அதை தான் சித்தராமையா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் பிறகு பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்த குற்றச்சாட்டை கர்நாடக பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. கட்சி தலைவர் விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. நாங்கள் அவ்வாறு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    இது பொய் குற்றச்சாட்டு என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். பொய் செய்திகளை பரப்புவது காங்கிரசின் தொழிலாக மாறிவிட்டது. மூடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், சித்தராமையா இப்படி பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

    ரூ.50 கோடி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதன் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×