search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் அஞ்சலி"

    மணிகண்டத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
    மணிகண்டம்:

    மணிகண்டத்தை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 50). விவசாயியான இவர் சிறுவயதில் இருந்தே மாடுபிடி வீரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதற்கு செவளக்காளை என்று பெயரிட்டு அன்பாக வளர்த்து வந்தார். அந்த காளை, புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, தென்னலூர், சூரியூர் உள்பட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்பட பரிசுளை பெற்று உள்ளது. கடைசியாக நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் களம் இறங்கி அடக்க முடியாத காளையாக பரிசு பெற்றது. இந்த காளையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் ரூ. 15 லட்சத்திற்கு கேட்டார். ஆனால் காளையின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் செவளக் காளைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தும் நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. இதைபார்த்த காளையின் உரிமையாளர் பழனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் காளையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்து அந்த காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த காளை தாரை, தப்பட்டை, வாண வேடிக்கைகள் முழங்க, பழனியாண்டி வீட்டின் அருகே பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழிதோண்டி அதில் காளையை அடக்கம் செய்தனர்.
    கந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் அம்பேத்கர்நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு குரங்கு அங்குள்ள மரத்தில் அங்கும், இங்குமாக தாவி விளையாடி கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்ற மின்சார கம்பி மீது குரங்கு தாவியது.

    அந்த நேரம் குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அந்த குரங்கு பரிதாபமாக செத்தது. மேலும் அதன் உடல் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்தது. இறந்த குரங்கை பார்த்து அங்கிருந்த மற்ற குரங்குகள் கத்தியது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    அதன்பின்னர் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த குரங்கு உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த குரங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி குரங்கின் உடலுக்கு மஞ்சள், குங்குமம் தடவி, மாலை அணிவித்து, கற்பூரம் காண்பித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாடையில் குரங்கு உடலை வைத்து தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்தனர். 
    இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பா.ஜனதா நிர்வாகிகள் அஸ்தியை கொண்டுவந்துள்ளனர். இந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவைக்கு அஸ்தியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் விமானம் மூலம் புதுவைக்கு நேற்று கொண்டுவந்தார்.

    விமான நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அஸ்தியை உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய கொம்யூன் பகுதிகளுக்கு கொண்டுசென்றனர். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. நெல்லித் தோப்பு லெனின்வீதி காமராஜர் சிலை அருகிலும், உருளையன்பேட்டை கட்சி அலுவலகம், முத்தியால் பேட்டை மணிக்கூண்டு, நேருவீதி, காந்திவீதி சந்திப்பு, புஸ்சி வீதி மணிக்கூண்டு, உழவர் சந்தை, முதலியார்பேட்டை வானொலி திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி ரதம் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதம் செல்கிறது. நாளை பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து அஸ்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரை சாலை காந்தி திடலின் பின்புறம் கடலில் கரைக்கப்படுகிறது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய அஸ்தி தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #Vajpayee #BJP
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. இந்த அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க பா.ஜனதா முடிவு செய்தது. அதன்படி அஸ்தியின் ஒரு பகுதியை ஹரித்வார் கங்கை நதியில் வாஜ்பாய் குடும்பத்தினர் கரைத்தனர்.

    டெல்லியில் அவரது அஸ்தி கலசங்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மாநில தலைவர்களிடம் ஒப்படைத்தார். இதில் 7 கலசங்களை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் வாஜ்பாய் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாஜ்பாய் அஸ்தியை தமிழக தலைவர்கள் சென்னை எடுத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், இளைஞரணி செயலாளர் ஜி.கே.எஸ்., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர். ரதத்தின் முன்பும், பின்பும் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அணிவகுத்து வந்தனர்.

    வாஜ்பாய் அஸ்தி நேற்று இரவு 7.20 மணிக்கு கமலாலயம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாரதமாதா சிலையின் கீழே வைக்கப்பட்டது. வாஜ்பாய் அஸ்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், நடிகர் விஜயகுமார், துறைமுகம் பொறுப்புக்கழக உறுப்பினர் பிரகாஷ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.



    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “வாஜ்பாய் வழியில் இந்த தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த அஸ்தியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அஸ்தி கமலாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதில் கட்சி எல்லை, மொழி எல்லை, கொள்கை எல்லை ஆகியவற்றை கடந்து வந்து அஞ்சலி செலுத்தலாம்” என்றார்.

    மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்த அஸ்தி யாத்திரை செல்லும். எந்த மக்களுக்காக வாஜ்பாய் வாழ்ந்தாரோ, அதே மக்களின் தரிசனத்துக்காக அவரது அஸ்தி கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.

    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று (வியாழக்கிழமை) முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு (பவானி) ஆகிய 6 இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. 7 கலசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கூடுதலாக தஞ்சை காவிரி ஆற்றிலும் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு 3-வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்றும் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று 3-வது நாளாக கருணாநிதி நினைவிடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தளச் செங்கல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் அதன் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

    அண்ணா சமாதி வழியாக உள்ளே நுழைந்து இடது புறமாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வலது புறமாக வெளியில் வரும் வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். இந்த வழியாக மட்டுமே பொதுமக்களும், கட்சியினரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில் சிறிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.


    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். 7 மணி அளவில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தி.மு.க.வினரும், பொது மக்களும் சாரை சாரையாக திரண்டு வந்து சமாதியில் விழுந்து வணங்கினர். பூக்கள் மற்றும் பழங்களால் கருணாநிதி நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பூ அலங்காரத்தில் செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

    கருணாநிதி சிரித்தபடி இருக்கும் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான முரசொலி நாளிதழும் சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான பெண்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர். ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் பலர் கதறி அழுதனர்.


    பச்சையம்மாள் என்ற பெண் சமாதியை விட்டு செல்லும் வரையில் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். எங்களை விட்டு போய் விட்டீர்களே அப்பா. தாங்க முடியவில்லையே அப்பா. அப்படியே படுத்திருந்தால் கூட தலைவர் இருக்கிறார் என்று இருந்திருப்போமே அப்பா என்று அவர் கண்ணீர் விட்டு கதறினார். உடன் வந்திருந்த தி.மு.க.வினர் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.

    கருணாநிதி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தொண்டர்கள் சிலர் சமாதியின் அருகில் மண்டியிட்டு வணங்கி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். பொது மக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்தோடு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

    பொது மக்கள் அதிக அளவில் கூடுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலையில் உதவி கமி‌ஷனர்கள் முத்து வேல்பாண்டி, ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஷிப்டு முறையில் கருணாநிதி நினைவிடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு ஷிப்டிலும் 2 உதவி கமி‌ஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 80 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் கருணாநிதி நினைவிடத்தில் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு 2 நாட்களும் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #DMKLeader #Karunanidhi #RIPKarunanidhi
    கருணாநிதி மரணமடைந்ததை தொடர்ந்து காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்தில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். #Karunanidhideath #dmk
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் காட்டூரில், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடம் உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்ததையொட்டி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான இடங்களான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள காட்டூர் மற்றும் குளிக்கரை பகுதி சோகத்தில் மூழ்கியது.

    தாயார் மீது நீங்காத அன்பு கொண்ட கருணாநிதி, திருவாரூருக்கு வரும்போது காட்டூரில் உள்ள தனது தாயார் நினைவிடத்துக்கு தவறாமல் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். கருணாநிதி மறைவையொட்டி காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடம் அருகில் திரண்ட மக்கள் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக கருணாநிதி படத்தை திரளான பொதுமக்கள் காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் நினைவிடம் அருகே கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதேபால குளிக்கரையிலும் தி.மு.க.வினர் கருணாநிதி படத்தை ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி மறைவையொட்டி கொரடாச்சேரி ஒன்றியம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  #Karunanidhideath #dmk
    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சமாதியின் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடியும் கட்டப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

    கட்சித் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதியின் சமாதி அருகே பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் பெண் ஊழியர்கள் 2 பேர் உள்ளனர். தொண்டர்கள் கொடுக்கும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை அவர்கள் வாங்கிச் சென்று சமாதியில் வைக்கிறார்கள்.


    சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியிலும் அவரை பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலிலும் பார்க்க முடியவில்லை. அஞ்சலியாவது செலுத்தலாம் என இங்கு வந்துள்ளோம் என்று அவர்கள் கூறி விட்டு சென்றனர்.

    கருணாநிதி சமாதியில் தி.மு.க. தொண்டர் ஒருவர் மொட்டை போட்டுக்கொண்டார். அவரது பெயர் வினோத் கண்ணா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மொட்டை போட்ட பிறகு கருப்பு சட்டை அணிந்தபடி அவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-


    நான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர். எனக்கு கருணாநிதி மீது பற்று அதிகம். அவர் மறைவால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தேன். காவேரி ஆஸ்பத்திரியில் காத்திருந்த நான் நேற்று காலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்தேன். ஒரு தொண்டனாக நான் அவருக்கு எதுவும் செய்யவில்லை. எனவே மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தி மனதை தேற்றிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருணாநிதி சமாதிக்காக நேற்று பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டிருந்தது. இன்று அவை பொக்லைன் மூலம் சமதளமாக்கி சீரமைக்கப்பட்டன. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    ×