என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொறியியல் கலந்தாய்வு"
- பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.
- மாணவர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
- பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். பொறியியல் கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறும். பல்வேறு பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.
அரசு பள்ளி மாணவர்கள் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கலந்தாய்வு முடிந்த பிறகும் பொறியியல் இடங்கள் காலியாக இருந்தால் வரண்டா அட்மிஷன் நடத்தப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாக சேர்க்கப்படுவார்கள். பொறியியல் கலந்தாய்விற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே கலந்தாய்வு நடத்தப்பட உள்ள கல்லூரிகள் எண்ணிக்கை எத்தனை, அவற்றில் உள்ள இடங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் இடம் பெற்றுள்ளதா? ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் எதுவும் மூடப்பட்டதா? எந்தெந்த கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு இடங்கள் என்பது போன்ற முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணி நிறைவு பெற்று இன்று மாலை தொழில்நுட்ப கல்வி ஆணையரிடம் வழங்கப்படும்.
சீட் மேட்ரிஸ் விவரம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணைய தளத்தில் வெளியிடப்படும்.
- முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
- இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 430 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும்.
பொது பிரிவினருக்கான முதற்கட்ட கவுன்சிலிங் இந்த மாதம் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை நடைபெறும்.
2-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும்.
3-ம் கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும்.
இந்த ஆண்டு கூடுதலாக 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதிதாக 2 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதாவது இ.சி.இ. அட்வான்ஸ் டெக்னாலஜி, இ.சி.இ. அட்வான்ஸ் டிசைன் டெக்னாலஜி ஆகிய 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்கள் உள்ளன.
3 கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகும் காலி யிடங்கள் இருந்தால் மேலும் ஒரு கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு காலி இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
செப்டம்பர் 15-ந் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்கும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு வேறு கல்லூரிக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கட்டிய முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
- என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.
திருச்செந்தூர்:
என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவி பா.நேத்ராவுக்கு சொந்த ஊர் சிறுத்தொண்டநல்லூர் ஆகும். இவரது பெற்றோர் பாலன், வித்யாகாந்தி. மாணவி கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தற்போது, என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி பா.நேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய படிப்புக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பள்ளியின் முதன்மை முதல்வர், முதல்வர், ஆசிரியர்கள், என்னுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்ஜினீயரிங் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்க உள்ளேன். அதில் பல சாதனைகள் படைப்பது என்னுடைய நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணிகா என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்த மாணவி பிளஸ்-2 தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ஹரிணிகாவின் தந்தை மோகன் விவசாயம் செய்து வருகிறார். தாயார் திலகம். ஹரிணிகாவிற்கு மோனிஷ் என்ற அண்ணன் உள்ளார்.
இதுதொடர்பாக மாணவி ஹரிணிகா கூறியதாவது:-
என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மாநில அளவில் 2-வது இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மாநில அளவில் 2-ம் இடம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நான் நன்றாக படித்தேன். கணினி என்ஜினீயரிங் படிப்பை படித்து சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகி அந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி லால்குடி மேலவாளாடியை சேர்ந்த மாணவி ரோஷினி பானு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர் கல்லணைரோடு வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். பிளஸ்-2 தேர்வில் இவர் 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஷானவாஸ். இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாய் ரெஹானா பேகம்.
மாணவி ரோஷினிபானு கூறுகையில், "தரவரிசை பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் என்னை நன்றாக ஊக்குவித்தார்கள். தினந்தோறும் தேர்வு நடத்தினார்கள். தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து பள்ளி செல்லும் வரை படிப்பேன். பின்னர் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் இரவு 10 மணி வரை படித்து வந்தேன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.
- பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.
அதை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஆவணங்களின் அடிப்படையில் 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 அதிகம். இது 25.86 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழக முதலமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்திற்கான வெற்றி ஆகும்.
புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் பயன் அடைகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு நடத்தியதும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதை பொறுத்து கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.
தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.
அரசுப் பள்ளியில் படித்தவர்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா 2-வது இடத்தை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
மாணவர்கள் விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம்
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
- தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
- பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
* மாணவர்கள், தங்களது தரவரிசை பட்டியலை tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
* பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம்
* தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம்.
* பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காட்டின் கீழ் 28,425 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* மாதம் 1000 ரூபாய் பெறும்திட்டம் மூலம் 13,284 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
* ஜூலை 2-ந்தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது
- கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படாது
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யப்படும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். ஒரே கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண், பிறந்ததேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிலையில் பொறியியர் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ரேண்டம் எண்கள் வரிசையில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஒரே கட்ஆஃப் மதிப்பெண் வரும்போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படாது எனத் தெரிவித்துள்ளது.
ஜூலை 7-ந்தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதற்கு முன் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்
- தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
- பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.
தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.
உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.
பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரிகளில் திறந்து இருக்கும். சி.பி.எஸ்.இ., மாநில கல்வி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் ஜூலை 7-ந்தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.
பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கட்டணம் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஏழை மாணவர்கள் நலன் கருதி எல்லா கல்லூரிகளிலும் சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் இனி வசூலிக்கப்படும்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
- சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த 1.5 லட்சம் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப்.10) தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்படும்.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- இந்தே ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தகாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் நிலையில், புதிய கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அதன்படி, பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்காய்வு 4 கட்டங்களாக அக்டோபர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 10- 12ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு, செப்டம்பர் 25- 27 வரை இரண்டாம் கட்டமாகவும், அக்டோபர் 13- 15ம் தேதி வரை மூன்றாம் கட்டமாகவும், அக்டோபர் 29- 31ம் தேதி வரை 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தே ஆண்டே பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ந்தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
- நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ந்தேதிக்கு தள்ளிப் போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25-ந்தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சென்னை:
இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஆகஸ்டு 25-ந்தேதி தொடங்கி அக்டோபர் 21-ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் வருகிற 25-ந்தேதி தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏன் என்றால் நீட் தேர்வு எழுதி இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும் பட்சத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேராமல் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள்.
இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டு விடும். இப்படித்தான் கடந்த ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. இதை தவிர்ப்பதற்காகத்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த 7 நாட்களுக்குள் மாணவர்கள் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலியாக இருப்பதாக கருதப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ந்தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ந்தேதிக்கு தள்ளிப் போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25-ந்தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை 1 வாரம் தள்ளி வைக்கலாமா? என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்கு முன்பு ஏற்கனவே ஆகஸ்டு 20-ந்தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 25-ந்தேதிக்கு அதை தள்ளி வைத்தனர். இப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் இன்னும் 1 வாரம் வரை தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து தொழில் நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறுகையில், கவுன்சிலிங் தேதியை ஏற்கனவே ஒருமுறை மாற்றி தள்ளி வைத்து விட்டோம். மீண்டும் இப்போது அறிவித்துள்ள தேதியை தள்ளி வைக்கலாமா? அல்லது 25-ந்தேதி கவுன்சிலிங்கை தொடர்ந்து நடத்தலாமா? என்றும் ஆலோசித்து வருகிறோம். முதற்கட்ட இடஒதுக்கீடு கிடைக்கும் மாணவர்கள் செப்டம்பர் 7-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கலாமா? என்றும் ஆலோசித்து வருகிறோம்.
இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறுகையில், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம் கடைசியில் வெளியாகும் என தெரிகிறது.
எனவே முதல் ரவுண்ட் என்ஜினீயரிங் கவுன்சிலிங் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 14,524 மாணவர்களுக்கு நடத்தலாமா? என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதுபற்றி முடிவெடுத்து அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்