என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ கலந்தாய்வு"
- முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது.
- முதுநிலை நீட் தேர்வை 2.28 லட்சம் மருத்துவர்கள் எழுதினர்.
நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கை 'முதுநிலை நீட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்ததேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது. நாடுமுழுக்க 170 நகரங்களில் 500 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை, நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரம் மருத்துவர்கள் எழுதினர்.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதை அடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- தமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளன.
- மருத்துவ கலந்தாய்வுக்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த மாத இறுதியில் துவங்கி இம்மாதம் 8 ஆம் தேதி மாலை 5 மணி என்று வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நாளை காலை துவங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பொதுப்பிரிவினர் நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார்.
- பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
- புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.
பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.
இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.
இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.
எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது.
- கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 24-ந் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை கிண்டியில் இன்று நேரடியாக நடந்தது.
முதலில் விளையாட்டு வீரர்கள் 7 இடங்கள் முன்னாள் ராணுவத்தினர் 11 இடங்கள், மாற்றுத் திறனாளிகள் 223 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடந்தது. 606 மருத்துவ இடங்களுக்கு 2,993 பேர் அழைக்கப்பட்டனர். கட்-ஆப் மார்க் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்டான்லி, கே.எம்.சி., கோவை, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர். முதல் இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலையில் கல்லூரியில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.
- ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
- 7-ந் தேதி முதல் 13-ந் தேதிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.
சென்னை:
நாடு முழுவதும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழு ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வுக்கும், மாநில கலந்தாய்வுக்கும் விண்ணப்பித்தவர்களில் கடந்த ஆண்டு இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராதவர்கள் உள்ளனரா? என எம்.சி.சி. தரப்பில் இருந்து தேசிய தேர்வு வாரியத்திடம் தகவல் கோரப்பட்டது.
அதில் 47 பேர் அவ்வாறு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நடப்பாண்டில் கலந்தாய்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக இடங்களுக்கு விண்ணப்பித்த 2 பேர் குறித்த விவரங்கள் மாநில மருத்துவ கல்விக் குழுக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
எம்.டி. எம்.எஸ், எம்.டி.எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் இன்று (27-ந் தேதி) தொடங்குகிறது.
இன்று முதல் ஆகஸ்டு 1-ந் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ந் தேதி இரவு 8 மணிவரை கட்டணம் செலுத்தலாம். நாளை (28-ந் தேதி) முதல் ஆகஸ்ட் 2-ந் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.
ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆகஸ்ட் 5-ந் தேதி இட ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். 6-ந் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
7-ந் தேதி முதல் 13-ந் தேதிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 14 முதல் 16-ந் தேதி வரை மாணவர்களின் விவரங்களை கல்வி நிறுவனங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ந் தேதியும் இறுதியாக காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 28-ந் தேதியும் தொடங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீட் தேர்வு கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
10 ஆயிரம் மருத்துவ இடங்கள் இதன்மூலம் நிரப்பப்படுகின்றன. நீட் தேர்வு கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ-மாணவிகள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று முதல் பதிவு செய்தல், கட்டணம் செலுத்துவது, இடங்களை தேர்வு செய்வது ஆகிய நடைமுறைகள் தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி இடங்கள் ஒதுக்கப்படும். இறுதி முடிவு 3-ந்தேதி அறிவிக்கப்படும். அதற்கான ஒதுக்கீட்டு ஆணை அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
இதற்கிடையில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.
- முன்பணத் தொகை வழக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை உள்ளது.
- கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்பணத் தொகை வழக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை உள்ளது.
இந்நிலையில், தற்போது கூடுதலாக நீட் தேர்வெழுத ஓராண்டு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங்களுடன் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 15 தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரியும் இயங்கி வருகிறது.
இதில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் கட் ஆப் மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங்களுடன் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. மேலும் 2 புதிய தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கிறது.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5350 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. இந்த இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதால் இந்த ஆண்டும் 500-க்கு மேலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நடைமுறை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் மதிப்பெண் வாரியாக ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். ஜூலை மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
சென்னை :
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் முத்துச்செல்வன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக தொடங்கி வைக்கப்பட்டது. 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டில் 60 மனநல ஆலோசகர்களை கொண்டு இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்த ஆண்டில் (2023) நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 தொடங்கப்பட்டு கூடுதலாக 20 மனநல ஆலோசகர்கள் மற்றும் 2 மனநல மருத்துவர்களை கொண்டு வலுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் '104' மருத்துவ உதவி தகவல் மையம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நோக்கத்தின்படி, இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய 1,44,516 பேருக்கு மே 18-ந்தேதி ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 54,374 மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதில் 177 பேர் அதிக மனநல அழுத்தத்தில் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது.
அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதுமட்டுமன்றி நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.
மத்திய அரசு 15 சதவீதத்துக்கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீத மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும்.
மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளர் ஆகியோரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியை தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் காலதாமதம் இன்றி உடனடியாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.
மேலும், இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 550 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் 2 ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்து இருந்ததால் அதன் மூலம் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் சேராமல் போன இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
- 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் இடங்களை தெரிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஒரு சிலர் 2 ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்து இருந்ததால் அதன் மூலம் ஏற்பட்ட காலி இடங்கள் மற்றும் சேராமல் போன இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது. 19-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் இடங்களை தெரிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 24-ந்தேதி கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு கடிதம் வழங்கப்படும். இதுவரையில் 89-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
- ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான கல்லூரிகளில் சேரலாம்.
- நவம்பர் 7-ந்தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கும்.
சென்னை :
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நேரடி முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இடையில் தீபாவளி பண்டிகை வந்ததால், வங்கி செயல்பாடுகளுக்கு அவகாசம் கேட்டு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதை ஏற்று நேற்று வரை மருத்துவ படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, 14 ஆயிரத்து 21 மாணவ-மாணவிகள் இந்த பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வில், விருப்ப இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். தரவரிசை பட்டியல் மற்றும் விருப்ப இடங்களை தேர்வு செய்ததன் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி முடிவை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ மாணவர் சேர்க்கை குழு ஆன்லைனில் வெளியிட இருக்கிறது. அதில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் அவர்களுக்கான கல்லூரிகளில் சேரலாம். இடங்கள் கிடைக்காத மாணவர்கள், அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி ஆன்லைனில் தொடங்கும் 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கு பெறலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
- அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்’ தேர்வு எழுதி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
- விவசாய கூலித் தொழிலாளின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.
சென்னை:
பிள்ளைக்கு டாக்டர் சீட் வாங்க போறோம்... என்று ஊரில் இருந்து கிளம்புபவர்கள். கார் அல்லது ரெயிலில் பயணித்து சென்னையில் நல்ல ஓட்டலாக பார்த்து ரூம் போட்டு குளித்து மாற்று உடை உடுத்திக் கொண்டு பிரஷ்ஷாகி அட்மிஷன் வாங்க புறப்படுவார்கள்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் கார்களால் நிரம்பி இருக்கும். இடமில்லாமல் ரோட்டிலும் கார்கள் அணிவகுத்து நிற்கும்.
கோட்-சூட் அணிந்தும், விலை உயர்ந்த புடவையிலும் பெற்றோருடன் பிள்ளைகள் வந்து குவிந்து இருப்பார்கள். அவர்களின் மிடுக்கான தோற்றமே டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர், வசதி படைத்த குடும்பத்தினர் என்பதை வெளிப்படுத்தும். இதைத்தான் கீழ்ப்பாக்கம் வளாகம் பார்த்து இருக்கிறது.
ஆனால் இன்று புதுமையானவர்களை-உண்மையான உழைப்பாளிகளை அந்த வளாகம் விசித்திரமாக பார்த்தது.
ஊரில் நாள் முழுவதும் சகதி நிறைந்த கந்தல் ஆடையுடன் விவசாய நிலத்தில் பாடுபடும் விவசாயிகள், கல், மண் சுமக்கும் தொழிலாளர்கள், இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு தறிக் குழிக்குள் நின்று துணி நெய்யும் நெசவாளிகள், இவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வு எழுதி அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
கிராமங்களில் இருந்து தாய்-தந்தையுடன் பஸ்சில் கோயம்பேடு வந்து இறங்கி அங்கிருந்து டவுன் பஸ்சை பிடித்து வந்திருந்தார்கள். கைகளில் சிறிய பை. கசங்கிய வேட்டி-சட்டையில் தந்தை, கசங்கிப்போன பழைய சேலையில் தாய், சாதாரண பேன்ட் சட்டையில் மகன், பொதுக்குழாயில் பல் துலக்கி முகத்தை கழுவி விட்டு கையேந்தி பவனில் ஒன்றிரண்டு இட்லியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு மர நிழல்களில் அமர்ந்திருந்தார்கள்.
சென்னையின் கம்பீரம் அவர்களின் கண்களை கவர்ந்தது. நாகரீகம் அவர்களை ஆச்சரிய மூட்டியது.
பார் பார் பட்டணம் பார் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி இந்த மாதிரி பட்டணத்தில் தான் நம் பிள்ளையும் படிக்கப்போகிறான் என்ற சந்தோசம் அவர்களின் முகங்களில் தெரிந்தது.
கவுன்சிலிங் முறை வந்து மகனை உள்ளே அழைத்ததும் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் உடன் சென்றார்கள்.
அங்கு மாணவனை அமர வைத்து கம்ப்யூட்டர் திரையில் கல்லூரிகளின் விபரத்தை காட்டினார்கள். ஆனால் எதுவும் தெரியாமல் பார்த்து கொண்டிருந்த தந்தையிடம் மருத்துவ துறை பணியாளர்கள் அய்யா, உங்கள் பகுதியில் இன்னென்ன கல்லூரிகளில் இடம் உள்ளது. எந்த கல்லூரி வேண்டும் என்று கேட்டனர்.
அதைகேட்ட பெற்றோர் தங்கள் மகனிடம் 'அய்யா உனக்கு எந்த காலேஜ் புடிக்குதோ அதை எடுய்யா' என்றனர்.
அத்துடன் அந்த ஊழியர்களிடம் "நல்ல காலேஜா பார்த்து குடுங்கய்யா" என்றும் கேட்டுக் கொண்டனர். இதுதான் ஒரு கிராமத்து தொழிலாளி வீட்டு டாக்டர் கனவு பலித்த காட்சி.
அரியலூரை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் பழனியாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.
மகனுக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்து விட்டது என்றதும் அந்த ஏழைத்தாய் இரு கைகளையும் கூப்பிய படியே 'சாமி, என் புள்ளக்கி நல்ல வழி காட்டிவிட்டாய்' என்று கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
என் மகனும் டாக்டருக்கு படிப்பான் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. ஒதுக்கீட்டில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னான். அப்படியே நடந்து விட்டது என்றார்.
மேலும் கார்த்திகேயனின் கன்னங்களை தடவியபடியே 'நல்லா படிக்கணும்யா. நீ டாக்டர் ஆகி என்னைப் போல் 60 வயதை கடந்த ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கணும்யா' என்றார்.
அந்த ஏழைத்தாயின் விருப்பத்தை கேட்டதும் அங்கு நின்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அந்தியூரை சேர்ந்த நெசவுத்தொழிலாளியின் மகளான சங்கீதா கூறும்போது, "என் அம்மா-அப்பாவுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனாலும் நீட் தேர்வில் சாதிக்க முடியுமா என்று பயமாக இருந்தது. இப்போது அரசின் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததால் எங்கள் குடும்பமே கர்வம் கொள்கிறது" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்