search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய அதிகாரி"

    வயல்களில் மின் வேலிகளை அமைப்பது கூடாது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக மின்சார வாரியத்தின் அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின்பாதையில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி மின் வாரியத்தில் இல்லாத நபர்கள் பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது அதன் இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின் வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    தேன்கனிக்கோட்டை அருகே மின்வாரிய அதிகாரியை தாக்கியது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவர் அஞ்செட்டி மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    கோட்டையூர் அடுத்துள்ள மட்டியூர் தொட்டி கிராமத்தில் டிரான்ஸ்பாரம் பழுது ஏற்பட்டது. இதனை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரி மாயவன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் அங்கு சென்றனர். புதிய டிரான்ஸ்பாரம் மாற்றுவதால் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் புதிய டிரான்ஸ்பாரம் பொருத்தும் பணி நடந்தது. அப்போது மின்வாரிய அதிகாரி மாயவனுக்கு போன் வந்தது.

    அஞ்செட்டி அடுத்துள்ள பாண்டுரெங்கம்தொட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் எங்கள் பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் உடனே நீங்கள் மின்சாரத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினார். மின்வாரிய அதிகாரி மாயவன் தற்போது மட்டியூர் தொட்டி பகுதியில் புதிய டிரான்ஸ்பாரம் மாற்றப்பட்டு வருகிறது.

    அதனால் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகாத வார்த்தையால் மாயவனை திட்டினார்.

    கிருஷ்ணன் நீங்கள் உடனே மின்சாரத்தை வினியோகம் செய்யாவிட்டால் உன்னை வேலையை தூக்கி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    நீங்கள் யார் என்று கேட்ட போது நான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரமுகராக இருக்கிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்துள்ளார்.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரி மாயவன் வீட்டிற்கு நேற்று மதியம் கிருஷ்ணன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் உடன் வந்த பழனி, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து மாயவன் வீட்டின் ஜன்னல் மீது செங்கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். இதை கண்ட பொதுமக்கள் சமாதானம் செய்தனர். இதில் மாயவன் மற்றும் தனது மகள் கோமதி ஆகிய 2 பேர் மீதும் செங்கற்களை வீசி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரை மீண்டும் அங்கு சென்று கிருஷ்ணன், பழனி, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் சென்று தாக்கியுள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாயவன், கோமதி ஆகிய 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மாயவன் அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அஞ்செட்டியை சேர்ந்த கிருஷ்ணன், பழனி, சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
    திண்டுக்கல் அருகே டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் ஆயில் லீக்கேஜ் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனை அதிகாரிகள் கவனிக்காததால் இன்று காலை திடீரென டிரான்ஸ்பார்மரில் இருந்து புகை கிளம்பியது.

    சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பரவியது. அதிகாலை நேரம் நடைபயிற்சி சென்றவர்கள் டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி எரிவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத்துறையினருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து போராடி தீயை அணைத்தனர். அதன்பின்பு டிரான்ஸ்பார்மரை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்பட்டது. காலை நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து மின்வாரிய அதிகாரி வீட்டில் சோதனை செய்வதாக கூறி 50 பவுன் நகையை கொள்ளையடித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதூர்:

    மதுரை ஒத்தக்கடை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 41). இவர் மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இன்று அதிகாலை இவர் வீட்டில் இருந்தபோது காரில் 5 பேர் வந்தனர். அனைவரும் டிப்டாப் உடையுடன், அடையாள அட்டை அணிந்திருந்தனர்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து வந்துள்ளோம். நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது. வீட்டை சோதனையிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் பெத்துராஜின் செல்போனையும் பிடுங்கிக் கொண்டனர். வீட்டில் இருந்த பெத்துராஜின் தாயார் மற்றும் மகனை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    5 பேரும் வீட்டில் இருந்த பீரோவை திறந்து செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளையும், வீட்டு பத்திரத்தையும் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் பெத்துராஜிடம் நகைக்கு உரிய கணக்கை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தெரிவித்துவிட்டு நகைகளை வாங்கிச் செல்லுமாறு கூறிய 5 பேரும் விறுவிறு என்று வெளியேறி விட்டனர்.

    சந்தேகம் அடைந்த பெத்துராஜ் இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் விசாரித்தபோது, டிப்டாப் உடை அணிந்த வாலிபர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    இந்த நூதன கொள்ளை தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான 5 டிப்டாப் வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ×