என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராஜீவ் காந்தி கொலை வழக்கு"
- திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
- திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
திருச்சி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரை கடந்த ஆண்டு விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு முகாமில் இருந்த அவர்கள் 4 பேரும் தங்களை முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இதில் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, நேற்று இரவு 3 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் திருச்சியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
பின்பு அங்கிருந்து இன்று (புதன்கிழமை) காலை இலங்கை விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 33 ஆண்டுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு.
- உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மாரடைப்பால் மோசமானது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதை அடுத்து, வரும் மார்ச் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.
திருச்சி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.
இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்
'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.
எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.
எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.
இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.
அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.
எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.
எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை.
- முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கடந் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்திய குடியுரிமை பெற்ற காரணத்தினால் அவரவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரையில் திருச்சி மத்திய ஜெயில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் இங்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையிலும் 4 பேரும் விடுவிக்கப்படவில்லை. அவரவர் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பப்படவில்லை. தற்போது சிறப்பு முகாமில் இருக்கும் முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கை செல்லவும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் நெதர்லாந்து செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் சிறையில் நடத்தப்படுவது போன்று நடத்தப்படுவதாகவும், தங்களை விடுவிக்க கோரியும் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:-
4 பேரின் விபரங்கள், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், அவர்கள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் உள்பட அனைத்து தகவல்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மேலும் நாடு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக (எப்.ஆர்.ஆர். ஓ.) தலைமை இடத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அங்கிருந்து இன்னும் எந்த உத்தரவுகளும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் எப்.ஆர்.ஓ. அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உத்தரவுகளின் அடிப்படையில் தான் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் வெளியே அனுப்ப இயலும்.
அந்த 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை. முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போன்று அவர்களும் நடத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு.
- பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
- வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது.
- வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து உள்ளது.
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி முருகனை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
- முதலமைச்சர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
- முதலமைச்சர், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டு காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறை தண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், அவர்களது விடுதலையின் மகத்துவத்தையும் தாங்கள் நன்றாக அறிவீர்கள்.
6 பேரும் விடுதலை பெற்று விட்டார்கள் எனும் மகிழ்ச்சிகரமான செய்தியை உள்வாங்கி முடிப்பதற்கு உள்ளாகவே, அவர்களில் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் தந்தது.
வெளியுலகத்திற்கும், சட்டத்தின் பார்வையில் அவர்கள் 4 பேரும் விடுதலை பெற்றதாகக் கொண்டாலும், சிறப்பு முகாம் என்பது அவர்களுக்கு மற்றுமொரு கொடுஞ்சிறையாகவே இருக்கும்.
தங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கக்கோரி ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களின் உடல் நலத்திற்கு எவ்வித தீங்கும் நேராமல் பாதுகாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.
அதுமட்டுமின்றி, தமிழக அரசு அளித்த நீண்ட சிறை விடுப்பில் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் வெளிவந்த நாட்களில் சட்டம் ஒழுங்கை மிகவும் மதித்து, மிக அமைதியான, கண்ணியமான வாழ்வினை மேற்கொண்டனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, முதலமைச்சர், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தங்கள் உறவுகளிடம் செல்ல விரும்புகிற பட்சத்தில், அவர்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார்.
- கணவர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று நளினி பதில் அளித்தார்.
திருச்சி:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த சிறப்பு முகாமில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஒட்டியுள்ள தனித்தனி அறைகளில் அவர்கள் 4 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே மேலும் வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்ய பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர்.
பின்னர் நளினி நிருபர்களிடம் கூறுகையில், கணவர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்.
- மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை.
- நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் 6 பேர் விடுதலையில் நான்காண்டு தாமதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
மாநில அரசின் முடிவுகளில் குறுக்கீடு செய்யும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு படிப்பினை. நியமனப் பதவியில் இருப்போர் மாநில அரசின் முடிவுகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
+2
- என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
- தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.
வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். அங்கிருந்து காரில் ஆண்கள் ஜெயிலுக்கு காரில் வந்தார். பின்னர் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.
முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உடன் அவரது தாய் மற்றும் சகோதரர் தங்கி உள்ளனர்.
பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.
ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.
நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு அப்படித்தான் சிறை வாழ்க்கையை நினைத்தேன். ஆனால் ஜெயில் ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன்.
சிறையில் இருந்த போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். வழக்கு நடந்த போதும் சிறையில் இருந்த போதும் இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.
என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஜெயிலில் இருந்த போது ஆன்மீகம், யோகா போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினேன். இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் பார்க்கிறார்.
இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே இருந்தோம். பேரறிவாளன் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து அறிந்து வந்தேன்.
7 பேர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் மட்டும் விடுதலையான தகவல் வந்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.
கெங்கையம்மன் கோவிலுக்கு போக வேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்கு துலாபாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்த கூடாது நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய சிறைகளில் இருந்து நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
- மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் 4 பேரும் விடுவிக்கப்படுவார்கள்.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி சப்-கலெக்டர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நான்கு பேரும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம் என்றும், மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலைக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் விடுதலை.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த கடந்த கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல் மற்ற 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பட்டதை அடுத்து மதுரை சிறையில் இருந்து ரவிச்சந்திரனும் விடுதலையானார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், துயரம் தனக்கானது என்றும், மகிழ்ச்சி, தமிழ் கூறும் நல் உலகம் அனைவருக்குமானது என்றும் கூறினார்.
ஏழு பேர் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடி தியாகத்தை நினைவு கூறுவதாக அவர் தெரிவித்தார். நீண்ட நெடிய வழக்கு முற்றுப் பெற்று ஏழு பேரும் விடுதலையாக காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்