search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கடத்தல்"

    கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் போல நடித்து ரூ.97 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.

    இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

    கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று பஸ்சை வழி மறித்தது. பின்னர், பஸ்சில் ஏறிய வாலிபர்கள் சிலர், கோபிநாத்திடம் சென்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் விசாரணைக்கு வருமாறு அவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி காரில் கடத்தினர்.

    பின்னர் கீழ்ப்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி கார் சீறிப்பாய்ந்தது. வண்டலூர் அருகில் வைத்து கோபிநாத்திடம் இருந்த ரூ.97 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது.

    இதுபற்றி கோபிநாத் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபிநாத்தை காரில் கடத்திச் சென்ற கும்பல் அடையாளம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    கோவை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை பெண்ணின் அண்ணன் காரில் கடத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சித்திரகள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). தொழிலாளி.

    இவர் அதேபகுதியை சேர்ந்த ரகிஷா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கோவை வந்தனர். நண்பர்கள் உதவியுடன் சுங்கம் இந்திரா நகர்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தினர்.

    மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காரில் வந்த ஒரு கும்பல் மணிகண்டனை கடத்தி, அடித்து உதைத்து தாக்கியது. இந்நிலையில் கார் புளியம்பட்டி அருகே சென்ற போது மணிகண்டன் காரில் இருந்து கீழே குதித்து தப்பினார். கும்பல் தாக்கியதில் காயமடைந்த மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் புளியம்பட்டி போலீசார் கோவை ராமநாதபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், மணிகண்டனை மீட்டு கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.

    காதலுக்கு ரகிஷாவின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அவரது நண்பர்கள் 3 பேர் தான் காரில் வந்து தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    காஞ்சிபுரத்தில் வீட்டில் இருந்த வாலிபர் கடத்தி பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் காஞ்சிபுரம் நடுத்தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் வேல்முருகன் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் வேல்முருகனை திடீரென குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். 4 பேரும் வழியில் வேல்முருகனை சரமாரியாக தாக்கினர்.

    வீட்டில் இருந்த வேல்முருகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை அருகே வேல் முருகனை திடீரென இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிசென்று விட்டது.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். இதுபற்றி விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேல்முருகனை கடத்தி சென்ற கும்பல் யார்? அவரை திடீரென விடுவித்தது ஏன்? என்பது தெரியவில்லை. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காதல் தகராறில் வாலிபரை காரில் கடத்திய கும்பலை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 28). இவர் புதுவசூர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாணாபாடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேணுகோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் வேணுகோபாலிடம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வேணுகோபால் மீண்டும் மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பெண்ணின் தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வேணுகோபால் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தனர். அங்கு வேணுகோபாலை சந்தித்து திருமணம் குறித்து பேசினர். கம்பெனிக்கு வெளியே வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கும்பல் திடீரென அவரை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். இதைப்பார்த்த அக்கம்பெனியின் மேலாளர் உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் வேணுகோபாலை கடத்திச் சென்ற கார் எண் குறித்தும் அக்கம்பெனியின் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அந்த எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

    கடத்தப்பட்ட வேணுகோபாலை, அக்கும்பல் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் பாலாற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அக்கும்பலில் 3 பேர் வேலூரில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக வேலூருக்கு அதே காரில் சென்றனர். வேணுகோபால் மீதம் உள்ள 3 பேரின் பிடியில் இருந்தார்.

    கார் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அந்த காரை பார்த்தனர். அதில் வேணுகோபால் இல்லை. இதுகுறித்து வாலாஜா போலீசார் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த காரை வாலாஜா போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். சத்துவாச்சாரி அருகே கார் வந்தபோது சத்துவாச்சாரி போலீசாரும், வாலாஜா போலீசாரும் அக்காரை மடக்கி காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை சீனிவாசபேட்டை தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (29), காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூவரசன் (30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த புத்தன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வேணுகோபாலை அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார், பிடிபட்ட 3 பேரிடம் உங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து வேணுகோபாலை விடுவிக்குமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் தங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து அவரை விடுவிக்குமாறு கூறினர். அதைத்தொடர்ந்து வேணுகோபாலை அவர்கள் விடுவித்தனர். பின்னர் அவர், தனது உறவினர் பாஸ்கர் என்பவர் மூலம் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். வேணுகோபாலை விடுவித்த 3 பேரும், தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபர் மீட்கப்பட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காட்பாடியில் வாலிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் ரமேஷ். வேலூரில் உள்ள லாரி சர்வீஸ் சென்டரில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் டிஜோ ரமேஷ் (வயது 29). ஊட்டியில் விசுவல் கம்யூனிகே‌ஷன் படித்து முடித்தார்.

    வீட்டில் இருந்தபடி வேலை தேடி வருகிறார். நேற்று இரவு 9 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது காரில் வந்த கும்பல் டிஜோ ரமேசை தூக்கி காரில் உள்ளே போட்டு கடத்தி சென்றனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதற்குள் கார் வேலூர் நோக்கி வேகமாக சென்று விட்டது. டிஜோ ரமேஷின் பெற்றோர் பதறியபடி விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். டிஜோ ரமேஷின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே வாலிபர் டிஜோ ரமேஷ் மற்றொரு செல்போனில் இருந்து அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது என்னை தேட வேண்டாம் எனக் கூறிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.

    அந்த செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கடத்தல் கும்பல் வேலூர் கொணவட்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொணவட்டத்தில் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் கொணவட்டம், சேண்பாக்கம் பகுதியில் தெரு தெருவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சதுப்பேரி ஏரிக்கரை பகுதியிலும் தேடுதல் வேட்டை நடந்தது.

    அதிகாலையில் கடத்தல் கும்பல் கருகம்புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்ததை செல்போன் மூலம் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

    அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை காட்பாடி, விருதம்பட்டு பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை எதற்காக யார் கடத்தி சென்றார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

    வாலிபர் கடத்தல் சம்பவத்தில் காட்பாடி, விருதம்பட்டு ரவுடி கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து ரவுடி கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்திரமேரூரில், வாலிபரை கடத்தி சென்று ரூ.15 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). கடந்த 29-ந் தேதி ராஜேஷ் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் முனியப்பனின் செல்போனுக்கு மர்ம வாலிபர் பேசினார். அப்போது ராஜேசை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த முனியப்பன் இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடத்தல் கும்பல் ராஜேசை திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் சிறை வைத்து இருந்தனர். அவரிடம் இருந்த வங்கி டெபிட் கார்டை பறித்த கும்பல் அதன் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு ராஜேசை விடுவித்து விட்டனர்.

    இதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று அரசு பஸ் மூலம் உத்திரமேரூர் வந்து சேர்ந்தார். இதுபற்றி உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜேசிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் கடத்தலில் ஈடுபட்டது சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வீரமுத்து, ஒலையூரை சேர்ந்த மகரஜோதி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் கூட்டாளிகள் மல்லிகாபுரம் சுதீஷ், நெல்வாய் பிரகாஷ், சின்ன மாங்குளம் புருசோத்தமன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
    ×