search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death"

    • மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
    • விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் மோதி ஊராட்சி மன்ற கவுன்சிலரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பொதுமக்கள் 10 பஸ்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கலாவதி. இவர் போடிச்சிபள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    நண்பர்களான குமாரும், கணேசும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர்.

    ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கெலமங்கலம் கூட்ரோடு வழியாக வந்தபோது எதிரே ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவன வாகனம் ஒன்று அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே காயமடைந்த கணேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கர், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை தவிர்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அப்போது கிராம மக்கள் கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலையில் வேகத்தடை இல்லாததும், டாடா தனியார் கம்பெனி பேருந்துகள் அதிவேகமாக செல்வதும் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் இந்த கம்பெனி பஸ்கள் இதுபோன்று ஏராளமான விபத்துகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் மற்றும் ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் விபத்தில் சிக்கிய குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்

    முன்னதாக தனியார் நிறுவன வாகனங்களில் வந்த ஊழியர்களை போலீசார் பத்திரமாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கெலமங்கலம் கூட்ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போடிச்சிபள்ளி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    • டெல்லியில், 2-வது சர்வதேச உணவு தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடந்தது.
    • பாதுகாப்பான உணவு, எளிதாக அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி அவசியம்.

    புதுடெல்லி:

    டெல்லியில், 2-வது சர்வதேச உணவு தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடந்தது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் வெளியிட்ட வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது.

    வீடியோவில், டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் கூறியிருப்பதாவது:-

    பருவநிலை மாற்றம், மக்கள்தொகை வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றால், நமது உணவு முறைகள் சவால்களை சந்தித்து வருகின்றன.

    கலப்பட உணவுகளால், உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகின்றனர். ஆண்டுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம்பேர், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர்.

    எனவே, பாதுகாப்பற்ற உணவை தடுக்க வேண்டிய முக்கிய பங்கு உணவு தர நிர்ணய அமைப்புகளுக்கு இருக்கிறது. 30 லட்சம் பேருக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கவில்லை. எனவே, ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

    பாதுகாப்பான உணவு, எளிதாக அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இம்மாநாட்டில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுகாதார செயலாளர் அபூர்வா சந்திரா, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கமலா வர்த்தன ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது.
    • 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.

    பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா. இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது.

    மரணம் அடைந்த சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு செல்வி என்ற மகள் இருக்கிறார்.

    சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு 'கைதி கண்ணாயிரம்' என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

    1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

    படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.

    நடன கலைஞராக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர்.-சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

    அதன் பிறகு டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். குடும்பம், சொந்தம், வாழ்க்கை, அக்னி சாட்சி, கஸ்தூரி, பூவிலங்கு, கல்யாண பரிசு, தமிழ்ச்செல்வி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    சி.ஐ.டி. சகுந்தலா மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40).

    இவருக்கு மனைவி மற்றும் மாரீஸ்வரி (12), சமீரா (7) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    கண்ணன் இன்று காலை தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆண்டாள் (67) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள பெட்ரோல் கிடங்கில் டீசல் ஏற்றுவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி வடக்கு பைபாஸ் சாலையில் உலகம்மன் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணன், மாரீஸ்வரி, சமீரா, ஆண்டாள் ஆகியோர் மீது மோதியது.

    இதில் கண்ணன் உள்பட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான கண்ணன் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா, துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து தொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த நெல்லை பத்தமடையை சேர்ந்த கணேசன் என்ற டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நள்ளிரவில் திடீரென கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
    • யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் பிரசித்தி பெற்ற குன்றக்குடி சண்முகநாதர் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமையப் பெற்ற இந்த கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மதுரை மண்டலம் சிவகங்கை வனக்கோட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும்.

    இதன் அடிவாரத்தில் கோவில் யானை தங்குவதற்காக தகரத்தினாலான கொட்டகை போடப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் கூரையும் வேயப்பட்டு இருந்தது.

    இந்த கோவிலில் வளர்ப்பு யானை சுப்பு என்ற சுப்புலட்சுமி பெண் (வயது 54) கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் யானை தங்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டு மேற்கூரை தீப்பற்றி எரிந்தது.

    இதில் யானையின் மீது எரிந்த கூரை விழுந்து தீக்காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த அந்த யானை பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறியது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் குன்றக்குடி உதவி கால்நடை மருத்துவர் சிரஞ்சீவி மற்றும் மதுரை, தேனி, நாமக்கல், ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவக்கு ழுவினர் நேரில் சென்று தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    30 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. யானை சுப்புலட்சுமி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த யானை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் மிகுந்த அன்பைப் பெற்றதாக திகழ்ந்தது.

     

    தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    தீ விபத்தில் உயிரிழந்த யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    உயிரிழந்த யானைக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட வன அலுவலர் பிரபா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் யானையின் உடலுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் கண்ணீருடன் வழிபட்டனர்.

    யானை மறைவையொட்டி குன்றக்குடி கோவிலில் இன்று மணி அடிக்காமல் பூஜை நடத்தப்பட்டது. மேலும் குன்றக்குடி வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

    • கட்டடம் இடிந்த விபத்தில் இதுவரை 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    • மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியும் நொறுங்கியது.

    இந்த விபத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

    • பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்துள்ளார் அபாவ்
    • தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது

    சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்ற ஊழியர் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 வயதான அபாவ் [A'bao] என்று நபர் கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங்[Zhejiang] மாகாணத்தில் உள்ள சோசவுன் [Zhoushan] பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு [2023] பிப்ரவரி மாதம் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்த அபாவ் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று மட்டுமே உடம்பு சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு தனது டார்மெண்ட்ரியில் [ஷேரிங் அறையில்] ஓய்வு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அபாவ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறலால் கடந்த ஜூன் 1 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

    அவரின் உயிரிழப்புக்குத் தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனமே காரணம் என்று அபாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அபாவின் உயிரிழப்புக்கு நிறுவனமும் 20 சதவீதம் காரணமாக உள்ளது என்று கூறிய நீதிமன்றம் அபாவின் குடும்பத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 யுவான் உட்பட மொத்தம் 400,000 யுவான்[இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47,000 லட்சம்] நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

    சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக வேலைப் பளு காரணமாக உயிரிழப்புகளும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மையும் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் அதிக வேலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கரோஷி எனப்படும் டிரண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

     

     

    • இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று மாடி கட்டடம் இடித்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.

    இதில் பலர் உள்ளே சிக்கிய நிலையில் தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் அவர்களை வெளியில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்தனாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

    • 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்
    • பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானார்

    பிரேசிலை சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் [Matheus Pavlak] 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

     

    பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

    • 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.
    • அடமெல்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

    பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி [Audi] நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவர் ஃபேப்ரிசியோ லாங்கோ [Fabrizio Longo] மலையேற்றத்தில் போது 10,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான ஃபேப்ரிசியோ லாங்கோ கடந்த 2013 முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் யூனிட்டுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார்.

     

    மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட லாங்கோ இத்தாலி-சுவிஸ் எல்லைக்கு சில மைல் தூரத்தில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் [Adamello mountains] அமைந்துள்ள Cima Payer சிகரத்தை நோக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கேபிள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாகச் சிகரத்தின் அருகில் செல்வதற்கு முன்னர் 10,000 ஆதி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.

     

    அவருடன் சென்ற மற்றொரு மலையேற்ற வீரர் உடனே மீட்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் 700 அடி பள்ளத்தாக்கிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஃபேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு ஆடி நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

    • அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
    • அனிகா மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அனிகா தனது அறையின் தரையில் கிடந்தார். மேலும் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக அனிகா உயிரிழந்ததாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஏ., எல்.எல்.பி. 3-ம் ஆண்டு மாணவியான அனிகா ரஸ்தோகி, மகாராஷ்டிர கேடரின் 1998 பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார்.

    சஞ்சய் ரஸ்தோகி தற்போது தேசிய புலனாய்வு அமைப்பில் (என்ஐஏ) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

    அனிகாவின் உடலில் உடைகள் அப்படியே இருந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். விடுதி அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும், சந்தேகப்படும்படியான எதுவும் உள்ளே காணப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன.

    உத்தர பிரதேசத்தின் இந்தோ-நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காயமடைந்தனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.

    ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால், இப்பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கமின்றி தவிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

    இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வனத்துறையினர், தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடிவருகின்றனர்.

    இது தொடர்பாக பஹ்ரைச் மாவட்டத்தின் வனத்துறை அதிகாரி அஜீத் பிரதாப் சிங் கூறுகையில், "ஜூலை 17 அன்று ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

    தெர்மல் ட்ரோன்களின் உதவியுடன் ஓநாய்களின் கூட்டத்தை பிடிக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம்" என்று கூறினார்.

    வன அதிகாரிகளின் மதிப்பீட்டில், மனிதர்களை மட்டுமே தாக்கும் 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளன.

    20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் இந்த பகுதிக்கு திரும்பி உள்ளன. 2004-ம் ஆண்டில், ஓநாய்களின் வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2020-ம் ஆண்டிலும் ஓநாய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

    குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ×