என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chennai Salem greenway road"
சென்னை:
சென்னையில் இருந்து சேலத்துக்கு ஆத்தூர், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக ஒரு பாதையும் ஏற்கனவே உள்ளன.
இருபாதைகளுமே மிகவும் சுற்றி செல்பவையாக இருக்கின்றன. எனவே, 3-வது பாதையாக சென்னையில் இருந்து போளூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, அரூர் வழியாக கல்வராயன் மலையை கடந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
277 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை 8 வழி பாதையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க ஏற்பாடுகள் செய்தது.
சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. சாலை மொத்தம் 5 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்காக அளவீடு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுற்றுச்சூழல்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு போர்க்கொடி உயர்த்தின.
திட்டத்தை எதிர்த்து 12 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பாதிப்புகளை குறைத்து பணிகளை செய்வதற்கு உத்தரவிட்டது.
இதன் காரணமாக சாலை பணிகளில் பல மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை உருவாக்கியது.
ஏற்கனவே வனப்பகுதி அல்லாத இடங்களில் 90 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது, 70 மீட்டராக குறைக்கப்பட்டது. வனப்பகுதியில் 50 மீட்டராக குறைக்கப்பட்டது.
மேலும் வனப்பகுதியில் 13¼ கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது, 9 கி.மீட்டராக குறைக்கப்பட்டது. இத்துடன் வனப்பகுதியில் 120 ஹெக்டேர் நிலம் சாலைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது, 45 ஹெக்டேராக குறைக்கப்பட்டது.
ஆனாலும் கூட, இந்த சாலை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணைகளிலும் நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிபுணர்கள் குழு இது சம்பந்தமாக மீண்டும் ஆய்வு செய்தது. இதற்கான கூட்டம் கடந்த 30, 31-ந் தேதிகளில் நடந்தன.
அப்போது இந்த சாலை பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில், பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி சாலை அமைப்பது தொடர்பாக புதிதாக 2 விதமான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய சுற்றுச் சூழல்துறை மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.
மலைப்பகுதியில் சுற்றுச் சூழல் முறைகள் பாதிக்காமல் இருக்கவும், சமூக பொருளாதார நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அதற்கு தகுந்த மாதிரி இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் பொருத்தமான நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளை செய்யக்கூடிய தகுதி உள்ள அரசு நிறுவனங்களாக தேசிய சுற்றுச்சூழல் அரசு ஆராய்ச்சி மையம், ஜி.பி. பந்த் தேசிய இமாலயன் சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை உள்ளன.
இந்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்றிடம் இந்த பணிகளை ஒப்படைக்கலாம் என்றும் அந்த குழு யோசனை தெரிவித்துள்ளது.
இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக இன்னும் 2 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, 8 வழிச்சாலை திட்டத்தில் இன்னும் பல மாறுதல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சாலை அமைக்கும் பணி நடப்பதற்கு மிகவும் கால தாமதம் ஆகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புதிய ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டாலும் ஏற்கனவே கோர்ட்டில் வழக்குகள் உள்ள தால் அதன் தீர்ப்புக்கோ அல்லது நடுவர்மன்ற தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. #GreenExpressway #HC
திருவண்ணாமலை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசும் மாநில அரசும் 8 வழி பசுமை சாலையை சென்னையிலிருந்து சேலம் வரை அமைக்க உள்ளது. இந்த சாலை தேவையற்றது. சாலை அமைப்பதற்காக நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஆண்களையும் பெண்களையும் விரட்டுகின்றனர். தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பை நடத்துகின்றனர். இந்த சாலைக்காக மலைவளம், நிலவளம், வன வளம் மற்றும் மரங்கள் எல்லாம் அழித்து எதற்காக சாலை அமைக்க வேண்டும்.
வனங்களை அழித்து இந்த சாலையை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சாலையால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட போவதில்லை. தொழிற்சாலைகளும் புதிதாக அமையப் போவதில்லை.
தமிழகத்தில் 50,000 சாலைகள் போடப்பட்டுள்ளதாக சட்ட மன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். சாலை போட்டால் தொழிற்சாலை வந்துவிடும் பொருளாதாரம் வளர்ந்து விடும் என்று சொல்லுவது ஏமாற்று வேலை. தவறான கருத்துக்களை சொல்லி மக்களை ஏமாற்றி சாலைகளை போடுகின்றனர்.
இந்த சாலை திட்டத்திற்காக ஒரு கிலோ மீட்டருக்கு சராசரியாக 32 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த அளவிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு சாலை எங்கும் அமைக்கப்படவில்லை. இந்த சாலை தங்கத்திலா அமைக்கபட உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் இந்த மோசமான போக்கை கண்டித்து இந்த சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் அறிவித்து உள்ளோம். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கின்றது ஏன் என்று தெரியவில்லை.
போலீசாரின் உத்தரவுக்கு உட்பட்டு அமைதியாக சாலை ஓரத்தில் நடக்கிறோம். அமைதியான முறையில் மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் வகையில் நடைபெறும் இந்த நடை பயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad
திருவண்ணாமலை:
சென்னையில் இருந்து சேலத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் கையகப்படுத்தப்படுகிறது.
இதற்கு விவசாயிகள் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பசுமை சாலைக்காக தனது நிலத்தை பறிகொடுத்த விரக்தியில் செங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிராக ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் இன்று திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் நடைப்பயணம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்காக திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் அங்கு திரண்டனர்.
நடை பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. தடையை மீறி கம்யூனிஸ்டு கட்சியினர் நடை பயணயத்துக்கு ஆயத்தமாகினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, ஏ.டி.எஸ். பிக்கள் அசோக்குமார், வனிதா, டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நடைபயணம் சென்ற கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
நடை பயண தொடக்க விழா பகுதியை சுற்றிலும் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். நடைபயண குழுவினர் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
அங்கு அமைக்கப்பட்ட மேடையில் சென்னை, மதுரை, சேலம், கன்னியாகுமரி கலைக்குழுவினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன அதில் 8 வழிச்சாலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் பாடப்பட்டன.
இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நடைபயணத்துக்கு புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் நடைபயணத்துக்கு அனுமதி இல்லை இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதனால் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்கு வாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட 500க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #GreenWayRoad #Farmersprotest
செங்கம்:
ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் அழிக்கப்படுகிறது. பசுமையை அழித்து பசுமை சாலையா? என விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.
5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு குறியீடு கற்கள் நடப்பட்டன. சோறு போடும் நிலத்தை கொடுக்க விரும்பாமல் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் அடக்குமுறையால் விவசாயிகளின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு சின்ன பாப்பா என்ற மனைவி, ஆனந்த், அன்பழகன் என்ற 2 மகன்கள், சங்கீதா என்ற ஒரு மகள் இருக்கிறார்கள். சேகருக்கு வீடு, பாசன கிணற்றுடன் 3 ஏக்கர் நிலம் உள்ளது.
பசுமை வழி சாலைக்கு சேகரின் விவசாய நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் பறிபோனதால் அவர் மனமுடைந்தார். என் உயிரே போனாலும் விளை நிலத்தை விட்டு தரமாட்டேன் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி வேதனைப்பட்டார். நேற்று மாலை திடீரென விஷம் குடித்து சேகர் தற்கொலை செய்து கொண்டார்.
மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenWayRoad #Farmersuicide
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்பே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை பறிப்பதற்காக அரசே பொய்களை அவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடீஸ்வரர்களாகி விடலாம் என்று விவசாயிகளுக்கு ஆசை காட்டும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன.
உள்ளூர் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மூலம் மக்களை அணுகும் ஆட்சியாளர்கள், நிலத்திற்கு கோடிகளில் இழப்பீடு வழங்கப்படும்; இழப்பீடு தேவையில்லை என்றால் செழிப்பான பகுதிகளில் மாற்று நிலம் வழங்கப்படும் என்று ஆசை காட்டுதலும், மிரட்டலும் கலந்து மக்கள் மனதை கரைக்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பசுமைச் சாலைக்காக நிலங்களை கையகப்படுத்திய பின்னர் ஆட்சியாளர்களின் அணுகு முறை எவ்வாறு மாறும் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இன்றைய நிலையில் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான முதன்மை சாலை உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சாலை தான். இந்த 4 வழிச் சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி.
உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், திருமண அரங்குகள், கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 லட்சம், கிணறுக்கு ரூ.10 லட்சம், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், நிலம் கொடுக்க பெரும்பாலான விவசாயிகள் தயாராக இல்லாத நிலையில், அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசி, இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தால் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் என்று ஆசைக் காட்டினர்கள்.
அதை உண்மை என்று நம்பிய மக்களும் தேசிய நெடுஞ்சாலை அமைப்ப தற்காக தங்களின் நிலங்களை வழங்கினார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டது. நியாயமான இழப்பீடு வழங்கக் கோரியவர்கள் மிரட்டப்பட்டார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பது தான் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பாகும். ஆனால், அந்ததீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை இன்று வரை அரசு நிறைவேற்ற வில்லை.
சென்னை-சேலம் பசுமைச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ரூ.9 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். ஆனால், அது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால், எந்தெந்த நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்களை வெளியிடும்படி முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சவால் விடுத்திருந்தேன்.
ஆனால், இருவர் தரப்பிலிருந்துமே இதுவரை எந்த பதிலும் இல்லை. மற்ற மாவட்ட ஆட்சியர்களாலும் இதுதொடர்பாக விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்க முடிய வில்லை.
இத்தகைய சூழலில் பசுமை வழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உளுந்தூர்பேட்டை- சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்கள் உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டதைப் போல இவர்களும் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் மக்களிடம் இழந்த நம்பிக்கையை அரசு மீண்டும் பெற வேண்டுமானால், உளுந்தூர்பேட்டை- சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். சென்னைசேலம் பசுமைவழிச் சாலை சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மை உற்பத்திக்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #GreenWayRoad
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதைத் தொடர விடக்கூடாது. இது நல்லதல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நாத்திகம் பேசும் கொள்கை கொண்ட அவருக்கு கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது தொடர்பாக அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சி மற்றும் விவசாயத்தை பற்றி அறியாத அப்பாவி மக்களை தூண்டி விட்டு எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த வைக்கின்றனர். டெல்லியில் 14 வழிச்சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அங்கு இத்தகைய எதிர்ப்பு ஏற்பட வில்லை.
காஷ்மீரில் பா.ஜ.க. 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்கவில்லை. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சியினர் சதி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #GreenWayRoad
சேலம்:
சேலம்-சென்னைக்கு 8 வழி விரைவு சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் 277 கி.மீ. தூரத்திற்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதற்கான நில அளவீடு கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது. 70 அடி அகலத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைய உள்ள இந்த சாலைக்கு 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
அதிகாரிகள் நில அளவீடு செய்த போது விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆச்சாங் குட்டப்பட்டி, குப்பனூர், உடையாப்பட்டி எருமாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் நேற்று வீடியோ எடுக்கப்பட்டது.
இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று ஆள் இல்லாத குட்டி விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கியவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் சொல்லாததால் அந்த பகுதி விவசாயிகளும், பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் எவ்வளவு தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் மற்றும் மாமரங்கள் உள்ளது என்பது குறித்தும், விவசாய பயிர்கள், தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் வீடியோ எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்த வீடியோ பதிவுகள் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் இந்த இடங்களில் எவ்வளவு மரங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்