search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள்.
    • நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள். ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்து அவசர நிலையை காங்கிரஸ் அமுல்படுத்திய தினம்.

    இன்று பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. தி.மு.க.வும் அதற்கு துணைபோகிறது.

    அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் நாட்டில் அவசர நிலையை இந்திரா பிரகடனப்படுத்தினார். பத்திரிகைகள் முடக்கப்பட்டன. தலைவர்களை கைது செய்தனர். யாரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதுகூட தெரியாத இருண்ட சூழ்நிலை நிலவியது.

    ஒரு நாட்டில் அவசர நிலை அமுல்படுத்தினால் அந்த நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

    ஆனால் இன்று பிரதமர் மோடியை பார்த்து அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார் என்கிறார்கள். ஆனால் எனது புனிதநூல் எங்கள் அரசியல் அமைப்பு சட்ட புத்தகம்தான் என்று நம் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்க பாராளுமன்றத்திலும் மோடி முழங்கினார்.

    இன்று அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போவதாக காங்கிரஸ் கூச்சல் போடுகிறது. அதற்கு தி.மு.க.வும் துணைபோகிறது.

    அரசில் அமைப்பு சட்ட நகலை கிழித்து எறிந்து போராட்டம் நடத்தியவர்கள்தான் தி.மு.க.வினர். இதனால் வழக்கை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அரசியல் அமைப்பு சட்ட நகலை எரிக்கவில்லை. வெறும் காகிதத்தைதான் எரித்தோம் என்று பல்டி அடித்தார் கருணாநிதி.

    அப்போதும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க குரல் கொடுத்தது பா.ஜனதா தலைவர்கள்தான். நாடு முழுவதும் ஜனதா, பா.ஜனதா, காமராஜ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    எனது தந்தை காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தார். 6 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். நான் பள்ளி மாணவியாக இருந்தேன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்மாவை கவனிக்க யாருமில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நானே அழுதுகொண்டு ஆபரேசனுக்கு கையெழுத்துபோட்டுக் கொடுத்தேன். அந்த நிகழ்வுகள்தான் காங்கிரசை வெறுக்க வைத்தது.

    இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பது மோடி அரசு. ஆனால் அதன் குரல்வளையை நெறித்த காங்கிரசையும், அதற்கு துணைபோன தி.மு.க.வையும் புறக்கணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு குற்றமாகவே மாறிப் போயிருக்கிறது.

    விலை உயர்ந்த மோட் டார் சைக்கிள்களை கள்ளச் சாவி போட்டோ அல்லது மாற்று வழிகளிலோ திருடிக் கொண்டு செல்பவர்கள் சென்னை மாநகரில் சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகிறார்கள்.

    இப்படி மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்பவர்களை கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிப்பதற்கு சென்னை மாநகரில் நவீன கேமராக்கள் கைகொடுத்து வருகின்றன.. ஏ.என்.பி.ஆர். (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகனேசன்) என்று அழைக்கப்படும் இந்த கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    இதுபோன்று நிறுவப்பட்டுள்ள 100 கேமராக்கள் மூலமாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த கேமரா திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை எப்படி கண்டுபிடித்து கொடுக்கிறது?

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எந்த பகுதியில் திருடப்பட்டுள்ளது. அது எந்த வகையான வாகனம் என்பது பற்றி வாகனங்களை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்திருப்பார்கள்.

    அந்த தகவல்கள் அனைத்தையும் இதற்கென உரு வாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். இது போன்று 2021-ம் ஆண்டில் இருந்து 3,200 வாகனங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருட்டு வாகனங்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் நவீன கேமராக்கள் அதனை புள்ளி விவரத்தோடு காவல் துறையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து வருகிறது.

    பரங்கிமலை பகுதியில் காணாமல் போன ஒரு மோட்டார் சைக்கிள் பாரி முனை பகுதியில் ஓடுவதை அந்த கேமரா சமீபத்தில் காட்டிக்கொடுத்தது. உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு அது கைகொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

    இது போன்று சென்னை மாநகரில் தினமும் மூன்று அல்லது நான்கு திருட்டு வாகனங்கள் பிடிபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக நடமாடும் கேமராக்களையும் காவல் துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கேமராக்களும் திருட்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிக் கொடுத்து வருகின்றன.

    இத்தகைய 50 கேமராக்களும் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிள்களை கண்டுபிடிப்பது தற்போது காவல்துறைக்கு மிகவும் எளிதான விஷயமாக மாறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குற்றச் செயல்களுக்கு சென்னையில் ஓடும் லட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களே பெரும்பாலும் திருடப்பட்டு வருகிறது. இப்படி திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை குற்றவாளிகள் செயின்பறிப்பு செல்போன் பறிப்பு போன்ற குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தி விட்டு ஏதாவது ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு செல்வார்கள்.

    பின்னர் மீண்டும் அந்த வாகனத்தை எடுத்து பயன்படுத்துவார்கள். தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலமாக நிச்சயம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன்மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் இனி சென்னை போலீசாரிடம் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 மணல் குவாரிகளில் சோதனை நடைபெற்றது.
    • ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

    6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்ற தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.

    குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சில ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி இழப்பை ஏற்படுத்தியதையும் கண்டுபிடித்தனர்.

    விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி.கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டனர். அதில் மணல் அள்ளப்பட்ட இடங்களில் அளவுக்கு அதிகமாக மணல்கள் அள்ளப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    மொத்தம் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றுள்ள நிலையில் கணக்கு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பலகோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி.விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.

    அதன் அடிப்படையில் விசாரணை இப்போது தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

    மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணிக்கு கோபெல்கோ கன்ஸ்டக்ஷன் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 16 இடங்களுக்கு மொத்தம் 273 எந்திரங்களை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.

    இதன் மூலம் சட்ட விரோ தமாக மணல் விற்பனையில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததின் அடிப்படையில் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம்.
    • அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    புதிய தொலைத் தொடர்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதி தி ஒப்புதலை பெற்றது.

    138 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெலிகிராம் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்படுகிறது. இந்த புதிய தொலைத்தொடர்பு சட்டமானது அவசர காலங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்குகளின் கட்டுப்பாட்டை ஏற்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் விதிகளை உள்ளடக்கியது.

    2023-ன் தொலைத் தொடர்பு சட்டம் இந்திய தந்தி சட்டம் (1885) மற்றும் 1933-ன் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் ஆகிய இரண்டையும் மாற்றும் புதிய சட்டம் தொலைத் தொடர்பு துறையில் கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு வரும்.

    1, 2, 10 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உள்பட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சட்டப்பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 வரையிலான விதிகள் நடைமுறைக்கு வரும்.

    ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஒதுக்கீடு குறிப்பிட்ட விதிமீறல்களை தீர்ப்பது மற்றும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 1997-ல் திருத்தங்கள் ஆகியவை நாளை முதல் நடைமுறைக்கு வராது.

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் தொலைத் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள், பாதுகாப்பு போன்றவற்றிற்கான தர நிலைகள் அமைக்கும் அதிகாரங்ளை இந்த சட்டம் வகுத்துள்ளது.

    இந்த சட்டத்தில் புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக பெய்து வரும் கோடை மழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக 55 முதல் 60 லாரிகளில் தக்காளி குவிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக 45 லாரிகளாக குறைந்ததால் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.45-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது.

    இதேபோல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ் விலை சற்று குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கும், அவரைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் அதன்பயன்பாட்டை இல்லத்தரசிகள் குறைத்து உள்ளனர்.

    • மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது.
    • மீன்களை மக்கள் போட்டிபோட்டு வாங்கிசென்றனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் 61 நாட்கள் அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

    கடந்த வாரம் மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை விசைப் படகு மீனவர்கள் அதிக அளவில் கரை திரும்பாததால் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. மேலும் விலையும் குறையாமல் இருந்தது.

    இந்த நிலையில் தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு முதலே அதிக அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கினர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பியதால் கடந்த வாரத்தை விட பெரிய மீன்கள் வரத்து இன்று அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப் பட்டது. இதனால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்தது.

    கடந்த வாரத்தில் ரூ.1500 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ரூ.1200-க்கு விற்பனை ஆனது. இதே போல் மற்ற மீன்களில் விலையும் குறைந்து இருந்தது.

    இதனால் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை போட்டிபோட்டு வாங்கிசென்றனர். காசி மேட்டில் மீன்வாங்க அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் நல்ல விற் பனை ஆனதாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கூடுதல் நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் அடுத்த வாரம் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே அடுத்தவாரம் இப்போதைய நிலையை விட கூடுதலாக பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், மேலும் விலையும் குறையும் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். காசிமேட்டில் மீன்கள் விலை (கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம் - ரூ.1200

    வெள்ளை வவ்வால் மீன்- ரூ.1200

    கருப்பு வவ்வால் மீன்- ரூ.700

    சங்கரா - ரூ.350

    ஷீலா - ரூ.250

    கிழங்கா - ரூ.300

    டைகர் இறால் - ரூ.1000

    இறால் - ரூ.300

    கடமா - ரூ.300

    நண்டு - ரூ.300

    • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன.
    • கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் 4 மாவட்டங்களுக்கு தலைவர் பதவி காலியாக உள்ளது.

    வழக்கமாக புதிய மாநில தலைவர் பதவிக்கு வந்ததும் தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக நியமிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை 40 மாவட்ட தலைவர்கள் வரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

    இதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்றார். இன்னும் பல மாவட்டங்களுக்கு செல்லவில்லை. அடுத்த வாரம் முதல் மீண்டும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணம் முடிந்ததும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில் கட்சி பணியை தீவிரப்படுத்த மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    அதாவது 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் 117 மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் கூடுதலான 45 புதிய மாவட்டங்கள் உருவாகும். நிர்வாகிகள் பலருக்கு இதன் மூலம் புதிய பதவிகளும் கிடைக்கும்.

    புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் புதிய மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள்.

    இதில் 10 பேர் வரை பெண்களாகவும், சிறுபான்மையினர், இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    • ஜூலை 8- முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

    சென்னை:

    ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (ஜூலை) 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளத்தில் கடந்த மாதம் (மே) 13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

    அந்தவகையில் தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 35 ஆயிரத்து 667 ஆசிரியர்களும், பள்ளி கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 46 ஆயிரத்து 810 ஆசிரியர்களும் என மொத்தம் 82 ஆயிரத்து 477 ஆசிரியர்கள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.

    இவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக அது மாற்றப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

    அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ம் தேதி வெளியாகிறது. அதன்பின் அதில் திருத்தம், முறையீடுகள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டபின், 6-ம் தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

    • குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
    • 5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

    சென்னை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:-

    சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்படும். 2 கோடி ரூபாய் செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.

    கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுய தொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    6 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படும். காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும்.

    குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

    பள்ளி சத்துணவு மையங்களில் ரூ.9 கோடி செலவில் முட்டை உரிப்பான் எந்திரங்கள் வழங்கப்படும்.

    முதியோர்கள் பயனடையும் வகையில் ரூ.40 லட்சம் செலவில் யோகா, தியான பயிற்சி வழங்கப்படும்.

    அரசினர் குழந்தைகள் இல்லங்களில் கழிவறை வசதியுடன் கூடிய அறை ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்படும்.

    தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மகளிர் விடுதிகள் பதிவு உரிமம் எளிமையாக்கப்படும்.

    5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய திறன் கைபேசிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன.
    • கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவை முன்னவரான துரை முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. இது வருத்தமடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், வாதாடுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது விதிமுறைகளுக்குட்பட்டுதான் இருக்க வேண்டும். சபை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். அவர் முதல்-அமைச்சராக இருந்தவர்.

    கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும். ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்கலாம் என இருந்தேன். ஆனால் அவர்கள் யாரும் உட்கார வில்லை. விஷச்சாராயம் பற்றி பேசுவதற்கோ, ஆட்சியை பற்றி பேசுவதற்கோ எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு.

    ஆனால் கேள்வி நேரத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. சட்டசபையை விட்டு வெளியே போகிற முனைப்புடனேயே அவர்கள் நடந்து கொண்டனர். அதற்காக ஆச்சரியப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    எதிர்க்கட்சியினர் ஜீரோ நேரத்தில் பேசலாம். இங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் அளித்துள்ளனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அவையில் பதாகைகளை கொண்டு வந்து காட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.

    அவர்கள் அனுமதியின்றி இங்கு நடந்து கொண்டது இந்த அவையின் மாண்பை மீறுவதாக இருந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
    • ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
    • அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    "சாகர் கவாச்" என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த ஒத்திகை பின்னர் அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம்-புதுவையில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர், உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவும் நபர் களை உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மடக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சமாகும்.

    இதன்படி தீவிரவாதிகள் போல வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழையும் போலீசாரை பாதுகாப்பு படையினர் பல இடங்களில் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை வேட்டையின் போது கவனக்குறைவாக செயல்படும் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்பதால் மிகுந்த எச்ச ரிக்கையோடு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை

    சென்னையில் மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் சுற்றுலா கடற்கைரை பகுதிகள், காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நாளை மாலை வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போன்று சென்னையை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்

    மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த மீனவர்கள் போன்று வேடமிட்டு வந்த போலீசாரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.

    இதேபோல் கடலோர காவல் படையினர், போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் படகில் சென்று சந்தேகப்படும் நபர்கள் படகில் வருகிறார்களா? எனவும் கண்காணித்தனர். கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் புறவழிச் சாலை, பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் 89 போலீசார், 20 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன் வளத்துறை, வருவாய்த்துறை யினரும் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் மேற்பார்வையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

    நாகை மாட்டம்

    நாகை மாவட்டம், வேதா ரண்யம் கடலோர பகுதி களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்ப வனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிரா மங்களில் டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வை யில் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×