search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
    • வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    பொன்னேரி:

    சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை செங்குன்றம், பொன்னேரி மீஞ்சூர், திருவொற்றியூர், பஞ்செட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எவ்வித தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்.

    இந்த சாலைகளில் தடையை மீறி வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவ்வப்போது ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    மேலும் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து செல்வதும் அதன் பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    ரேசின் போது ஆட்டோ ஒன்று கவிழ்ந்த போது அதனை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில் 2 பேர் பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே ஆட்டோ ரேஸ் செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டே ரேஸ் செல்வதை பார்க்கும் போதே அச்ச உணர்வு ஏற்படும் வகையில் சீறிப்பாய்கின்றன.

    வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாகச ரேசை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
    • அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேர் தாமரை சின்னத்தில போட்டியிட்டார்கள்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. 2 ஆண்டுகளுக்கு முன்பே வியூகம் அமைத்து பணியாற்றியது.

    குறிப்பாக சில தொகுதிகளை தேர்வு செய்து தனிகவனம் செலுத்தி தேர்தல் பணியாற்றியது. பா.ஜ.க.வின் வெற்றி கணக்கு தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    கள நிலவரங்களை ஆய்வு செய்து கூட்டணி கட்சிகள் உள்பட 5 முதல் 10 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

    குறிப்பாக மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொன் பாலகணபதி உள்ளிட்டவர்களை கட்சி மேலிடம் நட்சத்திர வேட்பாளர்களாக நம்பியது.

    ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்ற சில முக்கிய காரணங்களை தோல்விக்கான அடிப்படை காரணங்களாக கூறினார்கள்.

    இது ஒருபக்கம் இருந்தாலும் முதல் முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை இருந்தது. ஆனாலும் அப்போது பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதத்தைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கான காரணங்களை டெல்லி மேலிடமும் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நாளை (புதன்) காலையில் கமலாலயத்தில் கூடுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.கேசவ விநாயகம், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கிறார்கள். 

    • வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.
    • அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த வர்களை தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என்று பெருமை பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கடந்த காலங்களில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அன்று திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார் சமூக நீதிக்கு அரசியலமைப்புச் சட்டம் எதிரானது என்று அதை எரித்தார்.

    அதன் பின்னர் வந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழித்து அவமரியாதை செய்தார்கள். அன்றைய சூழ்நிலையில் அச்சம்பவத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழிக்கவில்லை காகிதத்தை தான் கிழித்தோம் என்று கூறி வெளிவந்த வரலாறும் உண்டு.

    அப்படிப்பட்ட வரலாற்றில் வந்த தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று அரசியலமைப்பை காக்கப்போகிறோம் என்று கூறுவது வேடிக்கை.

    ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடித்தார்கள், வெளிநடப்பு செய்தார்கள், வாக்குவாதம் செய்தார்கள், சபையில் கூச்சலிட்டார்கள், பாராளுமன்றத்திற்கு வெளியே சென்று மறியல் செய்தார்கள். இதைத்தவிர தமிழகத்திற்கு தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏதாவது செய்தார்களா?

    அதைத்தான் நான் முன்னரே கூறினேன் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் காதறுந்த ஊசிகள்... தைக்க உதவாது... குத்தத்தான் உதவும் என்று.

    அதைப்போல இன்றைக்கு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்களே தவிர வழிநடத்த மாட்டார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாட்டு பயணத்தின் போது நியூயார்க் நகரத்தில் ஆற்றிய உரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி அதற்கான பாதுகாப்பையும் நன் மதிப்பையும் உலகறிய செய்திருக்கிறார். இந்தியாவே கோவில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகமே புனித நூல் என்று கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது மிகுந்த பெருமதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது உலகறிந்த செய்தி.

    இந்த முறை தேசிய ஜன நாயக கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வாக்குகளை பெற்றுக்கொண்டு மக்களை சமாதானப் படுத்துவதற்காக இப்போது இது போன்ற பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    எந்த நிகழ்விலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    மோடி பிரதமராக பதவிஏற்கும் முன்னர் உள்ளார்த்த பூர்வமாக இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியதை வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-

    பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

    பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன்.
    • தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை.

    சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டனில் காவலர் குடியிருப்பில் கடந்த 3 நாட்களில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    தற்கொலை செய்த ஜான் ஆல்பர்டிற்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதே குடியிருப்பில், நேற்று முன்தினம் போக்குவரத்து காவலர் முகமது ஜாவித் அலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

    தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
    • நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

    மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.
    • சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    டிரைவர்-கண்டக்டர் கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இது சம்பந்தமாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்கு வரத்து கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு:-

    மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணி புரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் கட்டாயம் சீருடை பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.

    எனவே டிரைவர்-கண்டக்டர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்."
    • இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான `தீரா மழை' இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.

    இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட படம், தொடர்பான இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
    • வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும்

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

    பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஆடுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆடுகள் வரையில் வர இருப்பதாக ஆட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் பொதுச் செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, பக்ரீத் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்தே 90 சதவீத ஆடுகள் வருகை தந்துள்ளன.

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன. சென்னையில் புளியந்தோப்பு, ரெட்டேரி, வியாசர்பாடி ஆகிய 4 இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு உற்பத்தி குறைவால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார்.

    பக்ரீத் பண்டிகையை யொட்டி வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது.
    • 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலேயே உள்ளது.

    சென்னை:

    அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீத முள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.

    எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    • கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சேவையும் இயக்கப்படுகிறது.
    • 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்கள் தேவை என்று பரிந்துரைத்தது.

    சென்னை:

    சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 55 கி.மீ. தூரத்திற்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சேவையும் இயக்கப்படுகிறது.

    அலுவலகப் பணியில் ஈடுபடுவோர், தொழில் சார்ந்தவர்கள் என அனைவரும் தற்போது மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்பி மேற்கொள்கிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில்கள் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. மற்ற வழித்தடங்களில் இயக்கப் படும் ரெயில்கள் 6 முதல் 12 நிமிடங்கள் இடைவெளியில் செல்கின்றன. மெட்ரோ ரெயில் சேவையை இன்னும் அதிகரித்தால்தான் `பீக்' அவர்சில் நெரிசல் இல்லாமல் பயணிக்க முடியும்.

    அதற்கு கூடுதல் ரெயில்கள் வேண்டும் என்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் உறுதி செய்தது. இதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு ஆலோசகரை கொண்டு ஆய்வு நடத்தியது. அதில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக முதல் கட்ட திட்டத்திற்கு 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்கள் தேவை என்று பரிந்துரைத்தது.

    புதிதாக ரெயில்களும், ரெயில் நிலைய வசதிகளையும் மேம்படுத்த ரூ.2,820 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு திட்ட முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டத்துக்கு நிதி அளிக்க சர்வதேச வங்கி ஏற்கனவே வட்டி விகிதத்தை தெரிவித்து உள்ளன.

    இப்போது நிதி ஆயோக் அனுமதி அளித்துள்ளதில் நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அடுத்த மாதம் அனுமதி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய ரெயில்கள் தயாரித்து வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    • இன்று முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்யக் கூடும்.
    • இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

    சென்னை:

    தென்னிந்திய பகுதி களின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் இன்று வீசக் கூடும். நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை சூறாவளிக் காற்றுடன் கடல் சீற்றமும் ஏற்படும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    ×