search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • கட்சிப் பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம்.
    • கோவையில் 14-ந் தேதி நடத்த உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியின் மாவட்ட மாநகர, மாநில அமைப்பாளர். துணை அமைப்பாளர்கள் செய்து வரும் கட்சிப்பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்.

    தற்போது 5-வது மண்டலத்தில் உள்ள நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தை கோவையில் 14-ந் தேதி நடத்த உள்ளார். கோவை லீ-மெரிடியன் ஓட்டலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு வரை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    முதலில் நீலகிரி மாவட்டம், அதன் பிறகு திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கட்சி பணிகள் குறித்து வெளியான புகைப்பட கோப்புகளையும் உடன் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி
    • பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை வியாசர்பாடி, மாதவரம்: லெதர் எஸ்டேட், கே.கே.ஆர். டவுன்) கம்பன் நகர், முல்லி தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, கணேஷ் நகர், ஸ்ரீ ஸ்ரீநீவாச பொருமாள் கோவில் தெரு பழனியப்பா நகர், மேத்தா நகர், பத்மாவதி நகர், மாத்தூர், 1-வது மெயின் ரோடு எம்.எம்.டி.எ. 1 பகுதி, எடைமா நகர், ஆவின் குடியி ருப்புகள், மெட்ரோ வாட்டர் பம்பு ஹவுஸ், சி.எம்.பி.டி.டி., தாத்தாங்கு ளம் ரோடு, தாரபந்த் அப்பார்ட்மென்ட், தேவராஜ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

    சித்தாலபாக்கம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சி.பி.ஒ.எ. காலனி, வீனஸ் காலனி, எம்.ஜீ.ஆர். தெரு.

    எம்பாசி: (பெரும்பாக்கம்) எம்பாசி அப்பார்மெண்ட் பகுதி.

    கிருஷ்ணா நகர்: (பள்ளிக்கரணை) ராஜலட்சுமி நகர், துலக்காணத்தம்மன் கோயில் தெரு, வள்ளாள பாரி நகர், ரங்கநாதபுரம்.

    கோவிலம்பாக்கம்: மேடவாக்கம் மெயின் ரோடு, வெள்ளக்கல், நன்மங்களம் ஒரு பகுதி.

    மாடம்பாக்கம்: வேங்கை வாசல் மெயின் ரோடு, நகர், புனித ஜான்ஸ் தெரு, தாமஸ் தெரு.

    அடையார்: வேளச்சேரி பைபாஸ் ரோடு, மெட்ரோ வாட்டர், முதல் விஜயா நகர் பஸ் நிலையம் வரை, வெங்கடேஷ்வரா நகர், தேவி கருமாரியம்மன் நகர்.

    தி.நகர்: தணிக்காசலம் ரோடு, தியாகராய ரோடு, பனகல்பார்க், சுப்பிரமணிய விஜயராகவாச்சாரி தெரு, கிரியப்பா சாலை பகுதி, உஸ்மான்சாலை பகுதி, ராமசந்திரன் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, இந்தி பிரசார சபா தெரு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.
    • இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    கல்வி, விளையாட்டு என்று வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ வேண்டிய குழந்தை பருவத்தில், சில குழந்தைகள் தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் உழைப்பது மிகவும் கொடுமையான செயலாகும். இது அவர்களது எதிர்காலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், ஊறுவிளைவிக்க கூடியதாகும்.

    பெற்றோர்களுக்கு போதிய வருமானம் இல்லாமையினாலும் குடும்ப சூழ்நிலைகளினாலும் குழந்தை தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு தரமான கல்வி அளித்திடவும், பெற்றோர்களின் சுமைகளை குறைத்திடவும், அரசு பல்வேறு நலத்திட்டங் களை செயல்படுத்தி வருகிறது.

    குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னோடி மாநில மாக திகழ்கிறது.

    குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    குழந்தைத் தொழிலா ளர்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது, பொதுமக்களும் வேலை அளிப்போரும் இப்பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்களும் அரசு அலுவலர்களும் தங்களது மாவட்டங்களை குழந்தைத் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக அறிவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசின் இந்த சீரிய முயற்சிகளால் தமிழகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி பூண்டு, நம் நாட்டை வளமிக்க ஒன்றாக மாற்றுவோம் என சூளுரைப்போம். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • 4 முனைப்போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் தீவிர பரிசீலனை.

    சென்னை, ஜூன்.11-

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி வருகிற 14-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகிறது.

    இதில் தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது நாளைக்குள் (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தி.மு.க.வில் 'சீட்' கேட்டு அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகிய 4 பேர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி முயற்சி செய்திருந்தும் அவருக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதனால் இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற முனைப்பில் இப்போது கவுதம சிகாமணி 'காய்' நகர்த்தி வருகிறார். ஆனால் இவரைப் போல் கட்சியில் முக்கியஸ்தராக இருக்கும் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரனும் எம்.எல்.ஏ. சீட் கேட்டு வருகிறார். இதில் ஜெயச்சந்திரனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதேபோல் அ.தி.மு.க.வில் கடந்த முறை போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் 2021 தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி இருந்தார். அதாவது 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.

    நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா கட்சிகள் இணைந்திருந்தது. அதன் பிறகு இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார்.

    எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலும் பா.ம.க.வும் வேட்பாளரை களம் இறக்குகிறது.

    பா.ம.க. சார்பில் சிந்தாமணி புகழேந்தி ஏகமனதாக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் ஏற்கனவே போட்டியிட்ட ஷீபா ஆஸ்மியை வேட்பாளராக நிறுத்தும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது. அப்போதுதான் வெற்றி எளிதாக கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 72,188 வாக்குகளும், அ.தி.மு.க. 65,365 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 8,352 வாக்குகள் வாங்கி உள்ளது.

    இதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்கும்போது 4 முனை போட்டி நிலவினால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பா.ம.க. நிறுத்தும் வேட்பாளரை பொறுத்து அரசியல் களம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க 15 அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நியமிக்க கூடும் என தெரிகிறது.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை நிறுத்த தீவிர பரிசீலனையில் இறங்கி உள்ளது.

    • உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.
    • ஒரு நியாயமான, சமநிலை சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலைச் சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.

    இவ்வாறு அதில் கூறியுளளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன.
    • அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் குறைந்த கட்டணத்தில் சேர முடியும்.

    கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் அதிக மதிப்பெண் பெற்ற னர். அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் தமிழக மாண வர்கள் 8 பேர் இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும். 720க்கு 720 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் 600க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டு 1538 பேர் மட்டும் எடுத்து இருந்தனர். அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்தார்.

    நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் புதிய மருத்துவ கல்லூரி அல்லது தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படாததால் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடினமான சுழல் இந்த வருடம் நிலவக்கூடும்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ள 3 சுயநிதி நிறு வனங்கள் உள்பட 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன.

    புதிதாக மருத்துவ இடங்கள் அதிகரிக்காததால் கடந்த வரும் இருந்த அதே இடங்களுக்கு அதிகளவில் மதிப்பெண் குவித்தவர்கள் எண்ணிக்கை கூடி உள்ள தால் கட்-ஆப் மதிப் பெண் உயருகிறது. இது மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடினமான நிலையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

    செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்ட 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 400 இடங்கள் கிடைத்து இருந்தால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

    கூடுதலாக இடங்கள் வந்திருந்தால் கட்-ஆப் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால் அதற்கு இந்த ஆண்டு வாய்பப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த வருடம் மருத்துவ இடங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.
    • 7 நிமிடங்களில் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எத்தனை சிறப்பு ரெயில்கள் அறிவித்தாலும் அவை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு விடப்பட்ட சிறப்பு ரெயில்கள் கோடை விடுமுறைக்கு பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

    வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் எப்போதும் முழு அளவில் செல்கின்றன.ரெயில்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய திட்டமிட்ட முன்பதிவு தான் சிறந்ததாக உள்ளது.

    ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமின்றி வசதியாகவும், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதாலும் சாதாரண முன்பதிவு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தட்கல் மூலம் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் பயணத்தை திட்டமிட்டு தொடர வசதியாக 4 மாதங்களுக்கு முன்னதாக அதாவது 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

    பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களை கணக்கிட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தை மக்கள் தொடர்கின்றனர்.

    இந்த நிலையில் ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 11-ந் தேதி வெள்ளிக்கிழமையும், அதற்கு மறுநாள் 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    எனவே 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ந் தேதி (புதன்கிழமை) பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. அக்டோபர் 10-ந் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டு செல்பவர்கள் நாளை (12-ந் தேதி) வேண்டும். ஆயுத பூஜை நாளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி பயணத்தின் 3 நாட்கள் தொடர் விடுமுறையை கழிக்க விருபுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய காத்து நின்றனர்.

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், அடையாறு, அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்பதிவு மையங்களில் குறைந்த அளவில் மக்கள் வரிசையில் நின்றனர்.

    இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும்பாலும் டிக்கெட் கவுண்டர்களுக்கு வருவது இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்து விடுகின்றனர்.

    அதன்படி முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பி விட்டன. கவுண்டர்களில் வரிசையில் நின்ற சிலருக்கு உறுதியான டிக்கெட் கிடைத்தது.

    7 நிமிடங்களில் தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு சில ரெயில்களில் ஏ.சி. வகுப்பு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர் மற்றும் கோவை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்திலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பின.

    • குடோனின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருமழிசை:

    சென்னை திருமழிசையை அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு அலுவலகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டு இங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    குஜராத்தை சேர்ந்த இந்த குடோனின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து பூந்தமல்லி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக இருந்து இந்த குடோனை கவனித்து வருகிறார்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென்று இந்த குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டதும் அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ அடுத்தடுத்த இடங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதையடுத்து கூடுதலாக கிண்டி, அம்பத்தூர், ஆவடி, கொருக்குப்பேட்டை வியாசர்பாடி உள்ளிட்ட 12 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அருகே இருந்த மற்றொரு சோப்பு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த குடோன்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைத்தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை நிரப்ப கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் போராடி நள்ளிரவு 12.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பா.ஜ.க.வில் 19 வேட்பாளர் நிறுத்தி 11 பேருக்கு டெபாசிட் போனதுதான் மிச்சம்.
    • ஆட்சி தானே கவிழ்ந்து மீண்டும் புதிய பிரதமர் வருவார்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் கங்கா ஆர். சுரேஷ் தலைமையில் சென்னை கொளத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசிய தாவது:-

    தி.மு.க.வை நம்பி கூட்டணிக்கு வந்த காங்கி ரஸ் 9 சீட்டில் இருந்து 10 சீட்டாக உயர்ந்துள்ளது. பாராளுமன்ற கணக்கில் விடுதலைசிறுத்தைகள் தனிச்சின்னம் பெறும் வகையில் மாநில அந்தஸ்தும் பெற்றுள்ளது.

    ம.தி.மு.க. பாராளுமன்றத்தில் தன் பெயரை புதிதாக பதிவு செய்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மாநிலங்களவையில் கால் பதிய இருக்கிறது.

    பா.ஜ.க.வில் 19 வேட்பாளர் நிறுத்தி 11 பேருக்கு டெபாசிட் போனதுதான் மிச்சம். ஒன்றிய அரசில் நாங்கள்தான் என்று இறுமாப்பாக சொல்ல வேண்டாம்.

    1998-ல் 13 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்த வாஜ்பாய் ஆட்சிபோல் இன்று உங்கள் நிலைமை. அன்று மாதத்திற்கு இருமுறை ஒன்றிய அமைச்சர்கள் மாறி மாறி கூர்காபோல போயஸ் தோட்டத்து வாசலில் நின்றனர். அதுபோல்தான் இன்றைய நிலைமை. நிதிஷ்குமார் வீட்டிலும், சந்திரபாபு நாயுடு வீட்டிலும் நிற்கத்தான் போகிறீர்கள்.

    கிழவி பஞ்சாங்கம் பார்த்து மஞ்சள் பூசிக்கொண்டாளாம் என்ற கதையில் பா.ஜ.க.வில் சிலர் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டு சேர்ந்திருந்தால் கூடுதலாக வந்திருக்கும் என கூறுகின்றனர்.

    இந்தியா கூட்டணியில் கூட மம்தாவுடன் கூட்டுடன் மேற்கு வங்கத்தில் நின்றிருந்தால் ஒரிசாவில் பிஜூ பட்நாயக்குடன் நின்றிருந்தால், உ.பி.யில் மாயாவதியுடன் நின்றிருந்தால் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாமல் போயிருக்குமே.

    கடவுளே கூட 5 ரவுண்டு வரை பின் தங்கினார் என்பதை புரிந்து இனி வரும் காலத்திலாவது ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. என எதிர்கட்சி அரசியல்வாதிகள் மீது திணிப்பதை நிறுத்துங்கள். இல்லையேல் 1998 போல பா.ஜ.க ஆட்சி தானே கவிழ்ந்தது போல் மீண்டும் தேர்தலில் புதிய பிரதமர் வருவார். அவர் தளபதி கை காட்டும் நபராக அமர்வார்.

    இவ்வாறு கூட்டத்தில் தி.மு.க வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசினார்.

    • முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.
    • தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாட புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்!

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

    சென்னை:

    பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அரசு அறி விப்பு வெளியிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

    இதனால், குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி, பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.

    அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர்நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

    இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப் படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப் படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கணக்கிட்டு நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

    இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 59 எக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

    தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 2, பிளாட் எண்-59 மற்றும் 75, ரோஜாம்பாள் சுப்பிரமணிய முதலியார் தெரு, காரை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தங்கள் ஆட்சேபத்தை எழுத்து மூலமாக அளிக்கலாம்.

    ஆட்சேபனை மனுக்கள் மீது ஜூலை 22 மற்றும் 23 30-ந் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

    ஏற்கனவே இது போன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொடவூர் கிராமம், அக்கமாபுரம், சிறுவள்ளூர் பகுதியில் உள்ள நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது.

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×