search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியது.
    • வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை நகரின் வரலாற்றில் ஜார்ஜ்டவுன் பகுதி முக்கியமானது. பழமையான பாரம்பரியமிக்க கட்டிடங்கள் எழில் மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பகுதியில் சாலை யோரம் குடிசை அமைத்து சில குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாபர் சாரங், நாராயணப்பா தெருக்களில் 3 தலை முறையாக இவர்கள் வசித்து வருகிறார்கள்.

    100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடற்ற நிலையில் வசித்து வருவதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பை தொடங்கியது. அவர்கள் விரைவில் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தெருக்களில் ஒன்றில் உள்ள சுங்க அலுவலகம் இப்பகுதியில் கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளை வழங்குமாறும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஜார்ஜ் டவுன் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு எர்ணாவூரில் வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை இவர்கள் ஏற்கவில்லை.

    இதுகுறித்து 3 தலை முறையாக வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் கூறும்போது, எர்ணாவூரில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற விருப்பம் இல்லை. நாங்கள் மிண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கவே விரும்புகிறோம். எங்கள் குடும்பங்கள் இங்கு ஆண்டாண்டு காலமாக வசித்து வருகின்றன. எங்கள் பெற்றோரும் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். இங்குதான் எங்கள் வாழ்வாதாரமும் உள்ளது' என்று கூறினார்கள்.

    சில இளம் பெண்களை கொண்ட குடும்பங்கள் தெருக்களில் வாழ்வது பாதுகாப்பாற்றது என்று உணர்ந்து தங்கள் உடமைகளில் சிலவற்றை அங்கே விட்டுவிட்டு அருகில் உள்ள சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

    இந்த பகுதி வார்டு கவுன்சிலர் ஆசாத் கூறும் போது, `வீடுகள் வழங்கப்பட்டதில் திருப்தி அடையும் வரை குடும்பங்கள் இடம் மாறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கணக்கெடுப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்' என்றார்.

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    • அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.

    சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

    குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


    இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    • எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
    • காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு உள்ளார்.

    முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.

    நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி யுள்ளன.

    ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள்.

    எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது பற்றி தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    வருகிற 19-ந்தேதியுடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. இதன் பின்னர் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க. மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

    • கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது.
    • தாம்பரம் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னையின் 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 2 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதனால், எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு அடுத்த படியாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படத் தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறிவிக்கப்படும் எந்த ரெயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது.

    அந்த அளவிற்கு தாம்பரம் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

    ஆனால் சென்ட்ரல், எழும்பூர் போல தாம்பரம் ரெயில் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த நிலையில், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.1000 கோடி செலவில் உலகத் தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், இந்த ரெயில் நிலையத்தில் கழிவ றைகள், டிஜிட்டல் பல கைகள், எஸ்க லேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச்சேரி சாலை, ஜி.எஸ்.டி. சாலை என இருபக்கமும் பிர மாண்ட முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் உலக தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரெயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது.

    மேலும் பசுமை பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளது. ரெயில் நிலையத்தில் 6 அடுக்கு கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன. மேலும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதியும் அமைக்கப்படுகிறது.

    இந்த திட்டம் 5 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    • பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.

    தாம்பரம்:

    சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. இதனால் இங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன போக்கு வரத்திற்கு முக்கியமான சாலையாக உள்ளது.

    தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் முக்கிய சந்திப்பு இடமாக உள்ள பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறையும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டது.

    அதன்படி பெருங்களத்தூர் ரெயில்நிலையத்தின் இரு பக்கங்களிலும் இருந்த, எல்.சி.32, எல்.சி.33 ரெயில்வே கேட்டுகளை, நிரந்தரமாக மூடிவிட்டு, அந்த இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக முதலில் கடந்த 2000-ம் ஆண்டில் ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்தன. நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த பணி ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது.

    பின்னர் கடந்த 2018-ம் ஆண்டில் மீண்டும் மேம்பாலப் பணி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.236 கோடியில் புதிதாக திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெருங்களத்தூரில் முட்டை வடிவில் ரவுண்டானாவுடன் கூடிய பிரமாண்டமான மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் பெருங்க ளத்தூர், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், நெடுங்குன்றம், மற்றும் வண்டலூர், தாம்பரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமாக, வண்டலூரில் இருந்து பீர்க்கன்கரணை ஏரிக்கரை வரையில், மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு அந்த பாதை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக மேம்பாலத்தின் மேற்குப் பகுதியான, ெரயில்வே பாதையை கடந்து, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர் வழியாக, காமராஜ் நெடுஞ்சாலையில் இணையும், மேம்பால பணி தீவிரப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. அந்த மேம்பாலப்பாதை கடந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    மேம்பாலத்தின் 3-வது கட்டமான தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள மேம்பால பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் தாமதமானது.

    தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமான மேம்பால ப்பணியும் முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே இந்த பாதை அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதத்தில் 2 வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கடைசியாக உள்ள 4-வது கட்டமான கிழக்குப் பகுதியில் இருந்து சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் அமைப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதில் வனத்துறை நிலம் குறுக்கிடுவதால், பணிகள் தாமதம் அடைந்துள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள பெருங்களத்தூர் துணை மின் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அந்தத் துணை மின் நிலையத்தை முழுமையாக இடமாற்றம் செய்தால் தான் மேம்பாலப்பணியை தொடர முடியும் என்ற சிக்கலும் ஏற்பட்டு உள்ளது.

    துணை மின்நிலை யத்திற்கான மாற்று இடம் அமைவதில் பிரச்சி னைகள் ஏற்பட்டு உள்ளதால் மேம்பால பணிகள் முடங்கிப் போய் நிற்கிறது.

    இப்போது புது பெருங்களத்தூர் நேதாஜி சாலையில், மின்வாரிய துணை மின் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது.

    இதைப்போல் மின்வாரிய அலுவலகத்தையும் முழுவதுமாக இடமாற்றம் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மின்வாரியத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பெருங்களத்தூர் துணை மின் நிலைய அலுவலகம் வருகிற 8 மாதத்திற்குள் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதன் பின்னர் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெருங்களத்தூர் மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, `பெருங்களத்தூர் மேம்பாலத்தின் இறுதிக்கட்டமான மேற்குப் பகுதியில் சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளை இணைக்கும் மேம்பால பணி, தற்காலிகமாக தடைப்பட்டு நிற்கிறது.

    வனத்துறை நிலம் குறுக்கீடு, துணை மின்நிலையம் இடமாற்றம் அதற்கு காரணமாக இருந்தது. அதில் துணை மின் நிலையம் இடமாற்றப் பணிகள், டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்கி விட்டது. துணை மின் நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இதைப்போல் வனத்துறையிடம் நிலம் பெறுவதில், மாநில மத்திய அரசுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து முடியும் நிலையில் உள்ளன. மேம்பால பணியை விரைந்து முடித்து முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    பொதுமக்கள் கூறும்போது, `பெருங்களத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். மேம்பாலத்தின் 4 கட்ட பணிகளும் முடிந்து மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு முழுமையான பலன் கிடைக்கும்' என்றனர்.

    • ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
    • இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

    ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.

    அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்

    15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்டு மாதத்திற்கான வினியோகத்துக்கும் இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை மிக மிக கடுமையாக உயர்ந்து விட்டதால் அவற்றுக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-15-ம் ஆண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது.

    தற்போது அந்த மானிய தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் ரேசன் கடை களில் தொடர்ந்து துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு ஒரு கிலோ துவரம் பருப்பை வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு ஏழை எளியவர்களுக்கு 30 ரூபாய்க்கு கொடுத்தது. அது போல பாமாயிலை வெளிச்சந்தையில் லிட்ட ருக்கு 45 ரூபாய் கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்கு 25 ரூபாய்க்கு வழங்கியது.

    தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ 155 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 95 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.

    தமிழக அரசு இந்த விலைக்கு கொள்முதல் செய்தாலும் ரேசன் கடைகளில் 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது போல இன்றும் துவரம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயிலை 25 ரூபாய்க்கும் வழங்கி வருகிறது.

    துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய 2 பொருட்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இத னால் இந்த விவகாரத்தில் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களை பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    அதன்படி ரேசனில் வழங்கும் துவரம் பருப்பு, பாமாயில் விலையை சற்று அதிகரிக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    என்றாலும் சில மாதங்களில் ரேசனில் துவரம் பருப்பு, பாமாயில் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    • பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
    • 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

    இந்த நிலையில் தேசிய பட்டியல் ஆணையமும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. நேரில் விசாரிப்பதற்காக தேசிய பட்டியல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ராமசந்தர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    பெரம்பூர் வேணு கோபால்சாமி தெருவுக்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் நடந்தது பற்றியும், காரணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து பிற்பகலில் கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி. போலீஸ் கமிஷனர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் பேசுகிறார்.

    அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிகிறார். வழக்கின் புலன் விசாரணை, கொலைக்கான சதி பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்கிறார்.

    இந்த ஆய்வை முடித்துக் கொண்டு இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 21-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 13 செமீ, வால்பாறையில் 9 செமீ, சோலையாரில் 8 செமீ, தேவாலாவில் 7 செமீ, அவலாஞ்சி, விண்ட் வொர்த் எஸ்டேட், பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை உயர்வு.
    • இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.

    பரவலாக பெய்து வரும் மழை மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    வெளிமாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பீன்ஸ் விலை குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.50-க்கும், அதேபோல் ஊட்டி கேரட், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:-

    நாசிக் வெங்காயம்-ரூ.38

    சின்ன வெங்காயம்-ரூ.60

    உருளைக்கிழங்கு-ரூ.34

    உஜாலா கத்தரிக்காய்-ரூ.50

    வரி கத்தரிக்காய்-ரூ.40

    பீன்ஸ்-ரூ.50

    அவரை க்காய்-ரூ.60

    வெண்டைக்காய்-ரூ.15

    முருங்கைக்காய்-ரூ.60

    ஊட்டி கேரட்-ரூ.60

    பீட்ரூ.ட்-ரூ.25

    முள்ளங்கி-ரூ.30

    சவ்சவ்-ரூ.30

    கோவக்காய்-ரூ.30

    வெள்ளரிக்காய்-ரூ.30

    குடை மிளகாய்-ரூ.50

    பன்னீர் பாகற்காய்-ரூ.50

    நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50

    புடலங்காய்-ரூ.25

    முட்டை கோஸ்-ரூ.20

    பீர்க்கங்காய்-ரூ.20

    சுரக்காய்-ரூ.8

    • ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது.
    • சிறப்பு தரிசனத்துடன் உணவு, பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2024-2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மூத்த குடிமக்கள் பயன் பெறும் கட்டணமில்லா ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 19.07.2024 அன்று தொடங்குகிறது.

    ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்கள் சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை, காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், மாங்காடு, காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,

    திருச்சி மண்டலத்தில் உறையூர், வெக்காளியம்மன் கோவில், உறையூர், கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம், மாரியம்மன் கோவில், சமயபுரம், உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,

    மதுரை மண்டலத்தில் மதுரை, மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர், மாரியம்மன் கோவில், மடப்புரம், காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர், கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி, மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சூலக்கல், சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும்,

    தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோவில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர், பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர், மகா மாரியம்மன் கோவில், திருக்கருகாவூர், கர்ப்பகரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம், துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில் களுக்கும்,

    திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம், ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு, பகவதியம்மன் கோவில், குழித்துறை, சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    ஆடி மாத அம்மன் கோவில் முதற்கட்ட ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×