search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative"

    • கருந்தலைப்புழுவால் பாதித்ததென்னை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
    • 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தேங்காய் காய்த்த நிலையில் இலையில் கருந்தலைப்புழு தாக்கி தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இது குறித்து தகவல் அறிந்து, புழுதேரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் மற்றும் தலைவர் திரவியம், வேளாண் விஞ்ஞானி தமிழ்ச்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், கரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் இரவு நேரங்களில் விளக்கு பொறி வைக்கும்படியும், அதேபோல் ஒட்டுண்ணிகளை தென்னை மரங்களில் விட வேண்டும் என்றும் இது போல் தொடர்ந்து செய்து வந்தால் கருத்தலை புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து தென்னை மரங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கினார்கள்.

    • குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
    • பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    கரூர்

    கரூர் தோகைமலையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒன்றிய அளவிலான ஆலோசனை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும், குழந்தைகளை பராமரிக்க முடியாத குடும்பங்களை அறிந்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு திட்டங்களை எடுத்துக்கூறி வழி காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல் இளந்தளிர் இல்லம் என்ற திட்டம் மூலம் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுப்பதற்கும் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    • விவசாயிகள் பல பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
    • மண்வளம் பெருக்க

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மண் வளம் காக்க பல பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

    இது குறித்து பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் தெரிவித்துள்ளதாவது,

    பல பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். பொதுவாக தானியங்களில் 2 வகை, எண்ணெய் வகை வித்துக்களில் 2 வகை, பயறு வகைகளில் 2 வகை, பசுந்தாள் ஒரு வகை என ஒவ்வொன்றும் ஒரு கிலோ வீதம் 7 கிலோ ஒரு ஏக்கருக்கு போதுமானது.

    கோடையின் இறுதியில் பருவப்பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்க பெறும் இடைக்காலத்தில் பசுந்தழை பயிர்களோ பல பயிர்களோ பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் சிறந்த ஒரு தொழில்நுட்பம் ஆகும். பல ஆண்டுகளாக செயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லி பயன்பாட்டில் வளம் இழந்துள்ள மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் இயற்கை விவசாயத்தை துவக்குவதற்கும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டிய பல பயிர் விதைப்பு நடவடிக்கையாகும்.

    இம்முறையில் தானிய வகை பயிர்களான சோளம் ஒரு கிலோ, கம்பு அரை கிலோ, தினை, சாமை தலா 250 கிராம், உளுந்து, பாசிசப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவை தலா ஒரு கிலோ எண்ணெய் வித்து பயிர;களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு தலா 2 கிலோ, எள் 500 கிராம், பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை தலா 2 கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. நிலத்தின் பரப்பு கிடைக்கும் விதைகளை பொறுத்து விதைக்கலாம்.

    விதைகள் வளர்ந்து 45-50 நாட்களாகி பூத்த பின்பு செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டசத்து இயற்கையாகவே கிடைத்திட இது வழி செய்கிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரம், பூச்சிகொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவதோடு மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது. பல தானிய பயிர்களை மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் துவங்க ஏதுவாகும் என தெரிவித்துள்ளார்.

    • கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கட்சி கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, தொடர்பான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    குறிப்பாக சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயன் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்பாகும்.
    • மேற்கு மண்டல தலைவர் நந்தி குமார் தலைமை தாங்கினார்.

    தென்திருப்பேரை:

    அரியானா மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மனித உரிமைகள் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு, கர்நாடகா மாநில பொறு ப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நந்தி பவனில் நடைபெற்றது. இந்த அமைப்பு மத்திய அரசின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மேற்கு மண்டல தலைவர் நந்தி குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல இயக்குநர் அலுபினிஷ் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைவர் ஆரோக்கியபழம், பெங்களூரு மண்டல தலைவர் வாஸ்து பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தென் மண்டல இயக்குநர் அலுபினிஷ் பிரேம்குமார் கூறியதாவது:-

    இந்த அமைப்பு மத்திய அரசின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை, அரசுத்துறை, அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பொதுமக்களுக்கு எவ்வித மனித உரிமை மீறல்கள் எந்த சூழல்களில் ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நேர்மைக்காக கை கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கம் என கூறினார். மேலும் சிறப்பாக மக்கள் நல பணிபுரிந்த சேலம் நந்தி குமாருக்கு 'மனித நேயர் விருது' வழக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள், தென் மண்டலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள், மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரு மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை சிறுபான்மை பிரிவு தலைவர் பாபு நெகமியா தொகுத்து வழங்கி னார். மேற்கு மண்டல பொதுமக்கள் தொடர்பு அலுவலர் நந்தினி நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பேட்டியளித்தார்.
    • பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையில் செயல்படுவது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தி யாருக்கு ஆதரவு என தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நலன் கருதி ஒற்றை தலைமைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    ×