search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deputy tahsildar"

    • கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.
    • அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் பழனியப்பன், கீழக்கரை விஏஓ நல்லுசாமி ஆகியோர் கடந்த 1-ந்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூர் தாசில்தார் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ந்தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கடந்த 2-ந்தேதி அதிகாலை துணை தாசில்தார் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
    • நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மை சான்று வழங்குவதற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் (வயது 42) ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி துரைராஜ் நேற்று மாலை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே மறைந்திருந்தனர்.

    அங்கு துரைராஜ் லஞ்ச பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பழனியப்பன், அலுவலகத்தில் இருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை (42) லஞ்ச பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடம் இருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்க கூறிய இடத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது நல்லுசாமி துணை தாசில்தார் கூறியதன் அடிப்படையில் தான் பணம் பெற்றதாக கூறினார். இந்த நிலையில் துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

    இதையடுத்து நல்லுச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறிய துணை தாசில்தார் பழனியப்பனை சிகிச்சைக்காக அவரது மேலதிகாரி தாசில்தார் சரவணன் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்ட போது, அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேண்டும் என்று நெஞ்சு வலிப்பதாக கூறி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

    அதைத் தொடர்ந்து இன்று காலை அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேம சித்ரா, தாசில்தார் சரவணனை தொடர்பு கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வாருங்கள்.பழனியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

    அப்போது காலை 7 மணி அளவில் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்கேன் எடுக்க செல்வதாக வார்டில் இருந்து சென்ற அவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவலை அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஹேம சித்ரா கூறும்போது, பழனியப்பனை விசாரணை செய்வதற்கு முன்பாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவரது உயர் அதிகாரியான தாசில்தார் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இப்போது அவர் அங்கிருந்து மாயமானதாக தகவல் சொல்கிறார்கள். நான் தாசில்தாரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன் என்றார்.

    தப்பி ஓடிய பழனியப்பனுக்கு பெரம்பலூர் நாரணமங்கலம் சொந்த ஊராகும். அவர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    லஞ்சம் வாங்கிய வழக்கில் பிடிபட்ட துணை தாசில்தார் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரம்ப லூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் பூங்காவனம் (வயது 41). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 8-ம் வகுப்பு பயிலும் ரம்யா என்ற பெண் குழந்தையும், 3-ம் வகுப்பு பயிலும் கோகுலகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் திண்டிவனம் கலால் துறையில் 5 வருடமும், செஞ்சி ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு வருடமும் துணை தாசில்தாராக பணி செய்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக செஞ்சி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டார். செஞ்சி அருகே காரையில் குடியிருக்கும் பூங்காவனம் அங்கிருந்து தினமும் மேல்மலையனூருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்றவ ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள், பூங்கா வனம ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துணை தாசில்தார் பூங்காவனம் மயங்கி விழுந்த கிடந்த இடத்திற்கு அருகே வயல்வெளிக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து பாட்டீல் இருந்ததை கண்டறிந்தனர்.மேலும், அவர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுட ன்தான் உறுதியாக கூறமுடியு மென டாக்டர்கள் தெரிவித்தனர். துணை தாசில்தார் பூங்காவனம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டா ரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காங்கயம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த ஈஸ்வரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக ஈ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பாலவிக்னேஷ் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக தலைமையிடத்துக்கு துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபோல் அவினாசி மண்டல துணை தாசில்தாராக இருந்த சாந்தி மீண்டும் அதே இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா மீண்டும் அதே இடத்திலும், மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வளர்மதி மீண்டும் அதே இடத்திலும், தாராபுரம் மண்டல துணை துணை தாசில்தாராக இருந்த மகேஸ்வரி மீண்டும் அதே இடத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.

    • திருமங்கலம் அருகே ஓய்வு பெற்ற துணை தாசில்தார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவகு மார்(வயது60). துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். அவரது மகன் தாயுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது பூர்விக வீட்டிற்கு சென்றார். அங்கு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்பு சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிவகுமார் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தர்மபுரி செல்வதற்காக நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • போலீசார் சதாசிவத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    தர்மபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி சாலையை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 59). துணை தாசில்தார். இவர் நேற்று காலை அலுவலக வேலையாக சென்னை வந்தார். பின்னர் உயர்நீதிமன்ற பணிகளை முடித்துக் கொண்டு தர்மபுரி செல்வதற்காக நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது சதாசிவம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது சதாசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் சதாசிவத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
    • ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பல மணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அருகே உள்ள இடையிருப்பு வருவாய் கிராமத்தில் பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கிரா மமக்கள், வருவாய்துறை. மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    பாபநாசம் மண்டல துணை தாசில்தார் விவேகானந்தன்,பொதுப்ப ணித்துறை உதவி பொறியாளர் செல்வபாரதி, பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் வட்ட அளவையர்கள் மம்தாபீவி, அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சர்வே செய்யப்பட்டது பின்னர் பாப்பா வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    உடன் வருவாய்ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் கிராமமக்கள் பலர் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பல மணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது. பதற்றத்தை தணிக்க பாபநாசம், மெலட்டூரை சேர்ந்த போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.

    துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு பிறப்பிக்க துணை தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 22.5.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தபோது அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இத்தகைய அடக்குமுறையினை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் எனவும், கொலைகாரர்கள் எனவும் சிருஷ்டிப்பதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வந்தனர்.

    இதுவரை துப்பாக்கிசூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு ஒரு வாரமாக பதிலளிக்க மறுத்து வந்த தமிழக அரசும், காவல்துறையும் தற்போது இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவின் பேரில் தான் துப்பாக்கி சூடு நடந்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

    கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள நிலையில் இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா? 22-ந்தேதி ஊர்வலத்தையொட்டி 144 தடை உத்தரவு போட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை விட்டு ஏன் வெளியேறினார்கள்?

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உத்தரவிட துணை வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? அவர்களுக்கு ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாதபோது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும்? அவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

    இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன? இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா? நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன.

    வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காக மத்திய மோடி அரசின் வழி காட்டுதலில் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை ஏவிவிட்டு பலரை கொன்று விட்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழக அரசு பல பொய்யான ஆவணங்களை தயார் செய்து வருவது தெளிவாகிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் உண்மையை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும், நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதுடன் அப்பாவியாக உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கைது படலம் தொடர்ந்து கொண்டுள்ளது.

    இக்கொடுமையினை எதிர்த்து அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து தலையிட்டு இவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மே மாதம் 22-ந்தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால் தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கி சூடுக்கு 13 உயிர்கள் பலியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், பலர் குண்டு காயங்களுடன், தடியடி காயங்களும் ஏற்படுவதை தடுத்திருக்க முடியும்.

    ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக்குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு.

    தற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதி மன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதி மன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்பிற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    ×