search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver conductor"

    அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் இன்று அதிகாலை சிவகாசி நோக்கி புறப்பட்டது. காரைக்குடியை சேர்ந்த ஜெய்சன் சாமுவேல் பஸ்சை ஓட்டிவந்தார். பாலசுப்பிரமணியன் கண்டக்டராக இருந்தார்.

    காலை 7 மணிக்கு மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புறாக்கூடு என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பார்சல் லாரி பஸ் மீது மோதுவது போல் வந்தது. அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை லேசாக திருப்பினர். எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலை தடுமாறி சாலையோர புளியமரம் மீது மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ்சின் பெரும்பகுதி சேத மடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜெய்சன் சாமுவேல், கண்டக்டர் பால சுப்பிரமணியன், பயணிகள் மனோஜ்குமார் (வயது 27), சுகந்தி (37), கார்த்திக்குமார் (32) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஜெய்சன் சாமுவேல், பால சுப்பிரமணியன் உள்பட சிலரின் நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சியில் நேற்று இரவு அரசு பஸ்சை மறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகே தாளக்குடியை சேர்ந்தவர் ஜெகன்மோகன் (வயது 40). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வருபவர் பழனியப்பன். இவர்கள் இருவரும் நேற்று இரவு 11.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்யாணி கவரிங் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அவ்வழியாக சென்ற மற்றொரு பைக், பஸ்ஸில் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓட்டுனர் பஸ்சை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். 

    இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த வாலிபர் காந்தி மார்க்கெட் ஆர்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்த பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.

    இது குறித்து பஸ் டிரைவர் ஜெகன் மோகன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோதலில் ஈடுபட்ட மதுரை ரோடு கல்யாண சுந்தர புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கவியரசர் என்ற பழனிசாமி (25), அவரது நண்பர்கள் மணிகண்டன் (20), சரவணன் (26), சதீஷ்குமார் (29) மற்றும் ரவிக்குமார் (25) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் அனைவரும் காந்தி மார்க்கெட் வெங் காயமண்டியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
    கோடைகாலத்தை முன்னிட்டு அரசு பஸ் பயணிகளுக்கு தாகம் தணிக்க குடிநீர் வழங்கும் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் பஸ்களின் பயணம் செய்யும் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் ஒரு அரசு பஸ்சில் தினமும் பயணிகளுக்கு டிரைவர் -கண்டக்டர் குடிநீர் வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த மனித நேயம் பொதுமக்களின் அமோக பாராட்டை பெற்று உள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் இருந்து செங்கிப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 20 லிட்டர் குடிநீர் கேன் வைத்து பயணிகளுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். தினமும் தங்கள் சொந்த செலவில் டிரைவரும்- கண்டக்டரும் அதனை வழங்கி வருகின்றனர். அரசு செய்யாத இந்த பணியை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டிருப்பது அனைவருக்கும் முன் உதாரணமான செயலாக கருதப்படுகிறது. இதுபோல் மற்ற அரசு பஸ்களிலும் கோடை காலத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக கண்டக்டர் செல்வராஜிடம் கேட்டபோது, கோடை தாகத்துக்காக நாங்கள் பாட்டிலில் கொண்டு வரும் குடிநீரை சில பயணிகள் வாங்கி குடிப்பார்கள் அப்போது எங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் ஒரு முறை பயணம் செல்ல 1 மணி நேரத்துக்கு மேலாகும் போது பல பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதி படுவதை கண்டோம்.

    இதைத்தொடர்ந்து குடிநீர் கேன் கொண்டு செல்ல உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று குடிநீர் வழங்கி வருகிறோம். இந்த சின்ன உதவி எங்களுக்கு பெரிய மன நிறைவை தருகிறது என்றார்.

    ×