search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas cylinder blast"

    அருப்புக்கோட்டை அருகே எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப் பட்டியைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 55), விவசாயி. இவர் அங்குள்ள காட்டுக் கொட்டாயில் ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய வீட்டில் மனைவி சங்குலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்தது.

    பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டரால் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பருத்தி பஞ்சுகள் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வாணியம்பாடியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவரது வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது.

    இதனால் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் வசிக்கும் முரளி, செல்வம், ராஜன்பாபு, கர்லின், காசியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதானல் அந்த வீடுகளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் 6 வீட்டில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து நடந்த இடத்தை தாசில்தார் கிருஷ்ணவேனி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அ.தி.மு.க.நகர செயலாளர் சதாசிவம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் நிர்வாகிகள் சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    பெண்ணாடம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீப்பற்றியதில் கல்லூரி மாணவி உடல் கருகி பலியானார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மகள் வித்யலட்சுமி (18). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிமுத்து தனது மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். வித்யலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் உணவு சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு குடிசை வீட்டில் தீப்பற்றியது.

    அந்த தீ வீடு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. அப்போது வித்யலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வர முயன்றார். அதற்குள் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    சிதறிய தீ அருகில் உள்ள பச்சைமுத்து, இளங்கோவன், ஈஸ்வரன், மணிகண்டன் ஆகியோரின் வீட்டிற்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    வீட்டில் பிடித்த தீ கல்லூரி மாணவி வித்யலட்சுமி மீதும் பற்றியது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம் பகத்தினர் தீயை அணைத்து வித்யலட்சுமியை மீட்டனர்.

    அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் வித்யலட் சுமி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.

    தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த நகை-பணம் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சத்யன் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

    இந்த தீ விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கடலூர் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்ததால் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×