search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது.

    பல்லடம் :

    பல்லடத்தில் தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர். பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும், முன்னே செல்லும் வாகனங்களை அதிரடியாக முந்திச் செல்வதும், வளைந்து, வளைந்து தாறுமாறாக ஓட்டுவதும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சூழ்நிலையில், இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது. எனவே போலீசார் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மஹாராஷ்டிரா போலீசார் தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வனை சந்தித்தனர்.
    • செல்போன் டவர் மூலம் மாவோயிஸ்டு இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

    திருப்பூர் :

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் சிவக்குமார், மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் இருளப்பட்டி தேர் திருவிழாவுக்கு திருப்பூரில் இருக்கும் தன் சித்தி மகள் அஞ்சலியை அழைத்திருந்தார். இதையடுத்து அவர் கணவர் சீனிவாச முல்லாகெவுடு(வயது23) மற்றும் தன் இரு குழந்தைகளுடன் பாப்பம்பாடி சென்றார்.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் மஹாராஷ்டிரா போலீசார் தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வனை சந்தித்தனர். அப்போது, மஹாராஷ்டிராவில் இருந்து தப்பித்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் பாப்பம்பாடியில் பதுங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீசார், செல்போன் டவர் மூலம் சிவக்குமார் வீட்டில் மாவோயிஸ்டு இருப்பதை உறுதிப்படுத்தினர்.அங்கு சென்ற போலீசார் மாவோயிஸ்டு சீனிவாச முல்லாகெவுடுவை கைது செய்தனர்.

    மஹாராஷ்டிரா மாநிலம், களிரோலி மாவட்டம், தாமராஜா அடுத்த பங்காரப்பேட்டையை சேர்ந்த முல்லா என்பவரின் மகன் சீனிவாச முல்லாகெவுடு என்பதும், தாமராஜா போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் அவர் மீது மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தது, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர், தன் மனைவி அஞ்சலி, மற்றும் குழந்தைகளுடன் தமிழகத்திற்கு தப்பி வந்து திருப்பூரில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.5 மாதமாக அவர் திருப்பூர் முதலிபாளையத்தில் குடியிருந்து வந்துள்ளார்.

    திருப்பூரில் தொழிலாளர் போர்வையில் ஏற்கனவே பதுங்கியிருந்த மாவோயிஸ்டு தம்பதி, தீவிரவாதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தினரையும் கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் 5 மாதமாக மாவோயிஸ்டு தீவிரவாதி பதுங்கியிருந்தது திருப்பூர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெளி மாநில தொழிலாளர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மர்மவிலங்கு தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
    • வனத்துறை சார்பில், கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை சுற்றுப்பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் மர்மவிலங்கு தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இதையடுத்து வனத்துறை சார்பில், கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சின்னவீரம்பட்டி இந்திராநகரைச்சேர்ந்த விவசாயி தங்கவேலு பட்டியில் மர்மவிலங்கு புகுந்து ஆடுகளை தாக்கியுள்ளது.இதில் பலத்த காயமடைந்த 2 ஆடுகள் உயிரிழந்தன. அப்பகுதிகளில்மர்மவிலங்கும் நடமாட்டம் மீண்டும் துவங்கியுள்ளது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மறைந்த ஜீவானந்தத்தின் 115 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மறைந்த ஜீவானந்தத்தின் 115 வது பிறந்தநாள் விழா இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்உடுமலை ெரயில் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எம்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி முன்னிலை வகித்தார். உடுமலை நகர செயலாளர் தெய்வகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அரசு ஊழியர் சங்க நிர்வாகி நடராஜன் கொடி ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா, உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா முடிவில் மாதர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் வைதேகி நன்றி கூறினார்.

    • உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாளையக்காடு பகுதியில் ஆய்வு நடத்தினர்.
    • சாக்கடை கால்வாய் ஒன்று சேர்வதால், எந்த இடத்தில் சாயம் திறந்துவிடப்பட்டது என கண்டறியமுடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சர்ந்த சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் இந்நிறுவனங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிவப்பு நிற பட்டியலில் வைத்துள்ளது. சாய ஆலை மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. சுற்றுச்சூழல் விதிகளை மீறும் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதியின்றி வாடகை வீடுகள், குடோன்களில் ரகசியமாக பட்டன் ஜிப் டையிங், டேபிள் பிரின்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை சாக்கடை கால்வாய் மற்றும் அருகிலுள்ள நீர் நிலைகளில் திறந்துவிடுகின்றனர்.ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, ரெயில்வே பாலம் பகுதி சாக்கடை கால்வாயில் நீல நிறத்தில் சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், பகல்வேளையிலேயே தைரியமாக சாயக்கழிவுநீரை திறந்து விடுவதை பார்த்து இயற்கை ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார் கூறியதாவது:- பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், மாசுகட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாளையக்காடு பகுதியில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள் சென்றபோது, சாயக்கழிவுநீர் நின்றுவிட்டது. மீண்டும், சூர்யா காலனி, கோல்டன் நகர் உள்பட அப்பகுதி முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. பொதுமக்களிடமும் விசாரித்தோம்.பல்வேறு பகுதி சாக்கடை கால்வாய் ஒன்று சேர்வதால், எந்த இடத்தில் சாயம் திறந்துவிடப்பட்டது என கண்டறியமுடியவில்லை. அப்பகுதியில் நிறுவனங்கள் இல்லை. வீடுகளில் வைத்து பட்டன் ஜிப் டையிங் அல்லது டேபிள் பிரின்டிங் இயக்கி, சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டிருக்கலாம்.பாளையக்காடு சுற்றுப்பகுதிகளில் தினமும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். சாயக்கழிவுநீரை திறந்து விடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டால்,0421 2236210என்கிற எண்ணில், பொதுமக்கள் உடனடியாக மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார். 

    • ஆங்கிலேயர் காலத்தில் கோட்டையாக செயல்பட்ட மேடை போலீஸ் நிலையத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்து வந்தது.
    • ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் நிலையங்களாக செயல்பட்டு வந்த அதிலிருந்த 2 அறைகள் புதுப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பழங்கால கட்டிடங்கள், பொருள்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கோட்டையாக செயல்பட்ட மேடை போலீஸ் நிலையத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்து வந்தது. அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி வந்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மரங்கள் முளைத்து கிடந்த அந்த மேடை போலீஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.

    ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் நிலையங்களாக செயல்பட்டு வந்த அதிலிருந்த 2 அறைகள் புதுப்பிக்கப்பட்டது. மேலும் புல் வெளிகள் அமைக்கப்பட்டு பார்ப்பவர்களை கண் கவரும் வகையில் பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு அதிகரித்துள்ளது.

    அங்குள்ள அறையில் வரலாற்றை எடுத்துக் கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளது. கோட்டைக்கு மேலே ஏறி செல்லும் படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அதில் அமர்ந்து பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    மேலும் பார்வையாளர்கள் அமரும் வகையில் மினி காங்கிரீட் கேலரி உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பொழுதுபோக்கும் விதமாக இங்கு வருவார்கள் என்பதால் கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாளை சமாதான புரத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மனு

    பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு சிதிலமடைந்து காணப்பட்டதால் அந்த குடியிருப்பு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்கு வசித்த வந்த பொதுமக்களை தற்காலி கமாக வேறு இடத்திற்கு தங்கி கொள்ள உத்தர விடப்பட்டது. இந்நிலையில் அங்கு பொதுமக்கள் தங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    திடீர் தர்ணா

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கட்டிட பணிகள் நடைபெறும் 3 ஆண்டுகள் தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கி கொள்ளவும் அதற்கான வாடகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட னர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 100 குடும்பத்தை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது மாநகராட்சி சார்பில் புதிதாக குடியிருப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் எங்களை தற்காலிகமாக வேறு இடத்திற்கு வசித்து கொள்ள கேட்டுக்கொண்டனர்.

    இதற்காக வாடகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாடகை பணம் தற்போது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் குறைவாக உள்ளது. பாளை மார்க்கெட்டில் புதிதாக கடை அமைப்பதற்காக வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் எங்களுக்கும் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும். அது வரை நாங்கள் வீடுகளை காலிசெய்ய மாட்டோம் என கூறினர்.

    தொடர்ந்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.
    • 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கத்தாங்கன்னி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது‌. கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டு, நொய்யல் ஆற்றில் அணைப் பாளையம் அருகே கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை மூலம் பருவமழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பாசனத்துக்கு அப்போது தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்குளத்தின் மூலம் சுமார் 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.

    பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் இறுதியாக கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது. திருப்பூர் தொழில் வளர்ச்சி காரணமாக சாய நீர் தொடர்ச்சியாக சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் மற்றும் பாசன நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2009-ஆம் ஆண்டு குளங்களுக்கு நீர் செல்வதை தடுக்க நொய்யல் தடுப்பணைகள் உடைக்கப்பட்டு குளத்துக்கு நீர் வருவது தடுக்கப்பட்டது.

    கடந்த 2010 க்கு பின் குளங்களுக்கு தண்ணீர்‌ திறக்கப்படாமல் இருந்த நிலையில், திருப்பூர் சாய ஆலைகள் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் நொய்யல் ஆற்றில் சாய நீர் கலப்பது குறைந்தது. இதனை அடுத்து மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வரும் மழை நீரை குளங்களுக்கு திறக்கக் கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில் வரும் வெள்ள நீரின் டிடிஎஸ்.ஐஅளவீடு செய்து, மழைநீர் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களுக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில்,நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் 23 தடுப்பணைகள் வழியாக 31 குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

    இதில் இறுதி 31-வது குளமான கத்தாங்கன்னி குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழைநீர் திறக்கப்பட்டதால் குளத்தின் மொத்த உயரமான 18 அடியை நோக்கி நீர் வேகமாக நிரம்பி வந்தது.நேற்று காலை குளம் முழுமையாக நிரம்பியதை அடுத்து, வெள்ளப் போக்கி பகுதி வழியாக 24 ஆண்டுக்கு பின் உபரி நீர் வெளியேறியது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உபரி நீர் வெளியேறுமிடத்தில் மலர் தூவி தண்ணீருக்கு மரியாதை செய்தனர். பல ஆண்டுக்கு பின் கத்தாங்கன்னி குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயி பொன்னுசாமி கூறுகையில், பல ஆண்டுக்கு பின் மழை நீரால் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. இதன் மூலம் இப்பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளோம். குளம் முழுமையாக நிரம்பி வழிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
    • பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலானவங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

    கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • மதுரை ெரயில் நிலையத்தில் சுதந்திர தின செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உற்சாகம் கண்டுகளித்தனர்.
    • நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்தில் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதை வலியுறுத்தி "செல்பி பாயிண்ட்" அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.

    மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பொதுமக்கள் குடும்பத்துடன் ரெயிலின் மேற்கூரை, பெட்டிகளின் இணைப்பு பகுதிகளில் சிரமப்பட்டு பயணம் செய்த துயர சம்பவங்களின் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதுவும் பார்வையாளர்களை கவர்ந்தது.

    புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பேரையூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அழகம் பெருமாள் (வயது 98) பேசுகையில், "எனக்கு அப்போது 18 வயது. மதுரை ரெயில் நிலையம் எதிரே கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டேன். இதற்காக எனக்கு ஆங்கிலேய அரசு, 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. கர்நாடக மாநிலம் அலிபுரம் சிறையில் அவதிப்பட்டேன். மதுரை ரெயில் நிலைய 75-வது சுதந்திர அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில், 80 ஆண்டு–களுக்கு பிறகு மீண்டும் கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

    நிகழ்ச்சியில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவி அதிகாரி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே திருவனந்தபுரம் கோட்ட சாரண- சாரணியரின் வாகன பேரணி மதுரை வந்தது. மதுரை கோட்டம் சார்பில் ரெயில்வே மேலாளர் பத்மநாதன் அனந்த் கொடியை பெற்றுக் கொண்டார்.

    மதுரை கோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் வாகன பேரணி திருச்சிக்குப் புறப்பட்டு சென்றது. மதுரை ரெயில் நிலையத்தில் சுதந்திர தின அமுதப் பெருவிழா வினாடி- வினா போட்டி, ஆட்சி மொழி அதிகாரி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் வர்த்தக பிரிவு ஊழியர்கள் கிருஷ்ணன், முருகப் பொற்பாண்டியன், நிதி பிரிவு அமுதா ஆகியோரின் அணி முதல் பரிசு பெற்றது.

    • உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.
    • பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.

    மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.‌ 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலிருந்து காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார். இதில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள், திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென் இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்து காட்சி படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அறுசுவை அரசி என்ற பட்டமும், பரிசும் வழங்கப்பட உள்ளது.

    • ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ஜெய்ஹிந்த்புரம் புதிய போலீஸ் நிலையம் அருகே திரண்டு வந்தனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுமக்கள் அத்துமீறி வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஜெய்ஹிந்த்புரத்தில் அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், அரசிடம் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் மதுரை எம்.கே.புரம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ஜெய்ஹிந்த்புரம் புதிய போலீஸ் நிலையம் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×