என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ration shop"
- வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
- வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.
ஆனாலும், திமுக அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. திமுக அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
- நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்தது.
அதன் படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று, ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ரேஷன் கடை கட்டுனர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில், கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பாக இருந்த போதிலும் பட்டப்படிப்பு படித்த ஏராளமானோர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்கக் கூடும் என தெரிகிறது. மேலும், இந்த பதவிகளுக்கு மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை தெரிய வரும்.
- மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறலாம்.
- தொடங்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை:
கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குத் தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும், நியாய விலைக்கடை பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, துவக்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள் ஏ.டி.எம். கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு துவக்கிடவும் இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- இதற்காக 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.
ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், "தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால் ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3473 டன் மட்டுமே மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே திமுக அரசு தனறு தூக்கத்தை கலைத்து போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார்.
- ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் கீழத்தெரு மற்றும் தடிவீரன் கோவில் மேல தெரு ஆகியவை உள்ளன. இந்த 2 தெருக்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் ரேசன் அரிசி வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள கால்வாய் அருகே ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையில் இந்த ரேசன் கடைக்குள் வெள்ளம் புகுந்து முட்புதர்களும் அடித்து வரப்பட்டது. இதனால் அந்த கட்டிடம் சேதமடைந்ததோடு அங்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் கோடீஸ்வரன் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இங்கு சென்று வருவதற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் அல்லது பஸ்சில் பயணம் செய்தால் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேசன் கடையை உடனடியாக புதுப்பித்து தர கோரி நாம் தமிழர் கட்சியின் நெல்லை சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் மாரி சங்கர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் ஒரு முறை முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இதுவரை அதிகாரிகள் அந்த இடத்தை கூட வந்து நேரில் ஆய்வு செய்யவில்லை. வேறு இடம் தயாராக உள்ள நிலையில் அதிகாரிகள் ஒருவர் கூட அந்த பக்கம் வரவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் கோடீஸ்வரன் நகருக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் என்று கூறியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மாரி சங்கர் காட்சி மண்டபம் அருகே உள்ள தடிவீரன் கோவில் தெருவில் வினோதமான பேனர் ஒன்று வைத்துள்ளார்.
அதில் இதுவரை ரேசன் கடை குறித்த மனுவை எங்கெல்லாம் எந்தெந்த தேதியில் அனுப்பி உள்ளார் என்ற விவரத்துடன் பேனர் ஒன்று வைத்துள்ளார். இதனை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து செல்கின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செலவில் அந்த ரேசன் கடையில் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெறாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை:
ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேசன் பொருட்களை பெறாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை செப். 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை,
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
- மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது.
- வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
ஊட்டி:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானைகள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், உணவு பொருட்கள் சேதம் அடைவதால் அதற்கான தொகையை ஊழியர்கள் ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனால் வனப்பகுதிகளையொட்டி உள்ள ரேசன் கடைகளில் பணிபுரிவதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை ஆகிய இடங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது.
மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரேசன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை தூக்கி வெளியே வீசியுள்ளது.
இதில் கடையின் கதவுகள் உள்பட பல்வேறு பொருட்களும் சேதமாகின. இதனால் அருகே உள்ள கட்டிடத்தில் பொருட்களை மாற்றி வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன.
காட்டு யானை சேதப்படுத்திய ரேசன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை சீரமைக்கப்பட்ட ரேசன் கடையை மீண்டும் சேதப்படுத்தி ஷட்டரை உடைத்தது.
இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி மசினகுடி ரேசன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரேசன் கடையை சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் கூறியதாவது:-
மசினகுடி ரேசன் கடையை பாதுகாக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலை, இரும்பு கேட்ட, இரும்பு ஷட்டர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் செப்.5-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் செப்.5-ந்தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் செப்.5-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
- ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டை மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறுபடும்.
ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் இதுபோன்று பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 22-வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணநாதன் தெரு பகுதியில் அமுதம் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்த கடையில் நித்திய ராஜ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நித்தியராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதையில் கடைக்கு பணிக்கு வந்துள்ளார். மேலும் அவர் பொதுமக்களுக்கு பொருட்கள் எதுவும் வழங்காமல் போதையில் படுத்து உறங்கிவிட்டார்.
நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல முறை அழைத்தும் அவர் எழுந்திருக்கும் நிலையில் இல்லை. இச்சம்பவம் அறிந்த நகர் மன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
புகார் கூறப்பட்ட ஊழியர் நித்தியராஜ் பல மாதங்களாக ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக போதையில் இருந்த பணியாளர் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதுகுறித்து செய்தி வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்த தமிழ் நாடு குடிமைப்பொருள் விநியோக மண்டல மேலாளர் அருண் பிரசாத் விசாரணை நடத்தி பணி நேரத்தில் போதையில் தூங்கிய நியாய விலைக் கடை ஊழியர் நித்தியராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
- ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.
தருமபுரி:
உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், உத்தரவின் பேரில் கோவை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பஞ்சபள்ளி அருகே நல்லம்பட்டி கொல்லபுரி மாரியம்மன் கோவில் எதிரில் கிருஷ்ணகிரி அலகு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உட்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.
அவரிடம் விசாரணை செய்தபோது கர்நாடகா மாநிலம், ராம் நகர் மாவட்டம் கொல்லி கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகரன் மகன் பிரமோத் (22) என தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை கர்நாடகா மாநிலம் ராம்நகரில் உள்ள டிபன் கடைகளுக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்