search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர் கொள்கிறது.
    • டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    பிரிட்ஜ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.

    குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் கவனம் செலுத்த ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், புதுமுக, இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்.
    • பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், இதற்கான வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து இணையத்தில் வெளியான தகவல்களில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை தேர்வு செய்வதில் பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது.

    மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக கவுதம் கம்பீர் பி.சி.சி.ஐ.-இடம் சில நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பயிற்சியாளராக தான் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

     


    இந்த நிலையில், அடுத்த பயிற்சியாளர் விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டதாகவும், இதில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டதாக தெரிகிறது. கவுதம் கம்பீர் தவிர மேலும் சிலர் இந்த நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் விவகாரத்தில் கவுதம் கம்பீரின் பெயர் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், 2027 உலகக்கோப்பை தொடர் வரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான இந்திய அணிக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது.
    • விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் -1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான், வங்காள தேசமும், குரூப் 2 பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கவும் இடம் பெற்றுள்ளன.

    சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு நடை பெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

    அமெரிக்க ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சவாலாக இருந்தது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் தான் நடக்கிறது. இங்குள்ள 'பிட்ச்கள்' சமமானதாக இருக்கும்.

    இந்திய அணி லீக் சுற்றில் அயர்லாந்து (8 விக்கெட்), பாகிஸ்தான் (6 ரன்), அமெரிக்கா (7 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. கனடாவுடன் மோத வேண்டிய ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப் பட்டது. தோல்வியை சந்திக்காத இந்திய அணி நம்பிக்கையுடன் ஆப் கானிஸ்தானை சந்திக்கும்.

    'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. அதேநேரத்தில் ஆப்கானிஸ் தானை சாதாரணமாக கருதிவிட முடியாது. அந்த அணி இந்த தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் கவனமுடன் விளையாட வேண்டும்.

    கடந்த 2 போட்டியிலும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமான 'சூப்பர் 8' சுற்றில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான குல்தீப் யாதவ் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வில்லை. அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அக்ஷர் படேல் அல்லது ஜடேஜா கழற்றி விடப்படலாம். முகமது சிராஜ் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். இதனால் அவரது நிலையும் கேள்வி குறியாக இருக்கலாம். அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக உள்ளனர்.

    பேட்டிங்கில் ரிஷப்பண்ட், கேப்டன் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். உலகின் முன்னணி பேட்ஸ்மேனான வீராட் கோலி இந்த தொடரில் ஜொலிக்க வில்லை. 3 ஆட்டத்திலும் சேர்த்து 5 ரன்களே எடுத்தார். ஐ.பி.எல்.

    போட்டியில் அதிரடியாக விளையாடியதால் வாய்ப்பை பெற்றார். தொடக்க வீரரான அவரது வரிசையில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. வெற்றி அணியே போதுமானது என்று கருத்தினால் மாற்றம் இருக்காது.

    ரஷீத்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி லீக் ஆட்டத்தில் உகாண்டா (125 ரன்), நியூசிலாந்து (84 ரன்) பப்புவா நியுகினியா (7 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்து இருந்தது.

    வெஸ்ட் இண்டீசிடம் (104 ரன்) மட்டும் தோற்றது.

    ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. ரகுமதுல்லா குர்பாஸ், இப்ராகிம் சர்தான் ஆகியோர் பேட்டிங்கிலும், பரூக்கி, ரஷீத்கான் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    • பவுலர்களை ரோகித் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார்.
    • மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.

    டி20 உலகக் கோப்பையின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் பும்ரா போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை தலைகீழாக மாற்றியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவின் வியூகம் நிறைந்த மாஸ்டர் கிளாஸ் சிறப்பாக உள்ளது. பவுலர்களை அவர் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.

    இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானது. ரிஷப் பண்ட் நன்றாக விளையாடினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் நன்றாக பந்து வீசினர்.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."

    "இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது.
    • இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    அப்போது காயின் எங்க என்று கேட்ட ரோகித் சர்மா, டாஸ் காயினை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டு அதனை மறந்து காணாமல் தேடியுள்ளார். அப்போது பாபர் அசாம் பாக்கெட்டில் இருக்கிறது என்று சிரித்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார்.

    இதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பிறகு பந்து வீச்சா அல்லது பேட்டிங்கா என்பது குறித்து அந்த நேரத்தில் மறந்து விட்டார். பின்பு சிறிது நேரம் யோசித்து பதில் அளித்து இது தொடர்பான வீடியோ அந்த சமயத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரிகளில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

    இந்நிலையில் வீரர்களின் பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கம்பி வேலி போட்டிருந்ததற்கு வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோகித், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை பக்கத்தில் சென்று சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை கட்டியணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    உடனே ரோகித், கம்பி வேலி மத்தியில் இருக்கும் போது எப்படி கட்டியணைப்பது என யோசித்தாவறு நிற்க, உடனே பரவாயில்லை என்பது போல கம்பி வேலியுடன் சேர்ந்து அந்த ரசிகரை கட்டியணைத்தார். உடனே ரசிகர் மற்றும் ரோகித் சிரித்தவாறு அந்த இடத்தில் இருந்து விலகி சென்றனர்.

    இந்த வீடியோ Cute-ஆ இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    • இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 'ஏ'பிரிவில் இடம் பெற்று உள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இந்தப் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய தாவது:-

    7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாடினோம். தற்போது 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட இருக்கிறோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை.

    அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறேன். நியூயார்க் ஆடுகளங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.

    ஆடுகளங்களை சீரமைப்பவர்களும் ஆடுகளம் குறித்து புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
    • பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றிரவு நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. உலகக் கோப்பை தொடரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் மோதல் இருக்கிறது.

    அந்த வகையில், இன்றைய போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "போட்டியில் வெற்றி பெற ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நான் உள்பட 11 பேரும் பங்காற்ற வேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் போட்டியில் முக்கிய பங்காற்ற போகின்றார்கள். ஆனாலும், அனைவரும் அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்."

    "வங்காளதேசம் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், மிக முக்கிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் விராட். அந்த அனுபவத்தை எதுவும் வீழ்த்த முடியாது," என்று தெரிவித்தார். 

    • டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
    • நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று அரங்கேறுகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

    34 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்திற்கு இந்திய ரசிகர்களின் வருகையே அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் உற்சாகம் நமது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

    இந்திய அணி

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. அயர்லாந்தை 96 ரன்னில் மடக்கிய இந்தியா 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதமும், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (3 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (2 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (2 விக்கெட்) ஆகியோரது விக்கெட் ஜாலமும் வெற்றியை சுலபமாக்கின.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான சவால் வேறு மாதிரியானது. அந்த அணியில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

    நியூயார்க் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால், இவர்களை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை மனதில் வைத்து விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே ஆகியோரும் பேட்டிங்கில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், சிராஜ், பாண்ட்யா கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது.

    பாகிஸ்தான் அணி

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் மண்ணை கவ்வியது. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம். ஏனெனில் இந்தியாவிடமும் தோற்றால் ஏறக்குறைய அவர்களின் சூப்பர்8 கனவு கலைந்து விடும்.

    எனவே களத்தில் முழுமூச்சுடன் போராடுவார்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

    இந்த தொடரை பொறுத்தவரை ஆடுகளம் தான் இப்போது ஹீரோ. வழக்கத்துக்கு மாறாக பந்து வீச்சுக்கு நிறையவே ஒத்துழைக்கிறது. இந்த ஆடுகளத்தில் நிறைய வெடிப்புகள் காணப்படுவதால் சீரற்ற பவுன்ஸ்களை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.

    ஆடுகளம் சரியில்லை என்று ஐ.சி.சி. வரை புகார் சென்று விட்டது. 150-160 ரன் எடுத்தாலே அது பெரும்பாலும் வெற்றிக்குரிய ஸ்கோராக பார்க்கப்படுகிறது. அதனால் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு, சூழலுக்கு ஏற்ப தங்களை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டு எந்த அணி ஆடுகிறதோ அந்த அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் போட்டிக்கு மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், பஹர் ஜமான், ஷதப் கான், அசம் கான் அல்லது சைம் அயுப், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, முகமது அமிர் அல்லது அப்பாஸ் அப்ரிடி.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல் ராகுல் டிராவிட்.
    • நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன்.

    நியூயார்க்:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த முயற்சித்தேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய முதல் சர்வதேச போட்டியில் ராகுல் டிராவிட்தான் கேப்டனாக இருந்தார். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு வீரராக அவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார் என்பதும், பல ஆண்டுகளாக அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

    ஒரு அணியாக இதைதான் செய்ய வேண்டும் என என்னிடம் முதலில் கூறியது டிராவிட் தான். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வற்புறுத்தினேன்.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    இதுக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் , இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் நான் மீண்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

    • ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
    • இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் சந்திக்கிறது.

    இதையொட்டி இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நியூயார்க்கில் நேற்று சந்தித்தது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் புகுந்தனர்.

    2-வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் (1 ரன்) ஷோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத்தொடந்து ரிஷப் பண்ட், ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஷிவம் துபே (14 ரன், 16 பந்து, ஒரு சிக்சர்) நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் (18 பந்து, 4 பவுண்டரி), தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், மக்முதுல்லா, தன்விர் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக மக்முதுல்லா 40 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ஐந்து அமெரிக்க போலீசார் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். அதில் இருவர் அந்த ரசிகரை தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர். ரசிகரின் இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கினர். பின்பு அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர். அவர் லேசாக அசைந்ததால் அவர் மீது முழு எடையையும் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சியை பார்த்த அனைவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் இது போன்று அத்துமீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    ×