search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100849"

    கும்பகோணம் அருகே தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.

    இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.

    இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.

    இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. #tamilnews
    கோவை கணபதி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் கோவை கணபதி ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது-

    எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வர இருப்பதாகவும் அதற்கான கட்டிட பணிகள் விரைந்து நடப்பதாகவும் அறிகிறோம். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் கோவில்களும், பள்ளிகளும் உள்ள காரணத்தால் இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் 40, 50, 60 வயது வரை உள்ளவர்களுக்கும், காது கேளாதோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. நாங்கள் சுமார் 1000 பேர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறி உள்ளனர். #tamilnews
    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சேர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #kiranbedi #Congress #Narayanasamy
    புதுச்சேரி:

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன், ம.தி.மு.க. புதுவை மாநில அமைப்பாளர் கபிரியேல், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, புதிய நீதிக்கட்சி பொன்னுரங்கம், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது குறித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாத கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பின் மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் மாளிகை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கவர்னரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (நேற்று) முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

    ஆனால், அவர் முதியோர் உதவித் தொகை தவிர, மற்ற கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதிலை அளிக்கவில்லை.

    எனவே, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொகுதி வாரியாகவும், ஒவ்வொரு கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது தொடர்பான யுக்திகளை கையாளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கட்சி தலைவர் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகவும் எண்ணுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #kiranbedi #Congress #Narayanasamy
    வெளி மாநிலங்களில் இருக்கும் காஷ்மீரிகளுக்கு எதிரான மனப்போக்கு மற்றும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தால் காஷ்மீரில் இரண்டாவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #Pulwamaattack #Normallifeaffected #Kashmirbandh
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

    குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா நேற்று மாலை டெல்லி வந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிற மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசித்தார்.

    இதற்கிடையில், வெளி மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று பிற்பகலில் இருந்து கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த போராட்டத்துக்கு காஷ்மீர் பொருளாதார கூட்டமைப்பு சங்கம், காஷ்மீர் வியாபாரிகள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. பஸ், டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.



    ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் சந்தையில் இன்று இருவர் கூட கடை வைக்கவில்லை. இதேபோல் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடைகள் திறக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, புல்வாமா தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல்கள் வெடிக்காமல் இருப்பதற்காக அம்மாநிலத்தின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் இருப்பதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Pulwamaattack #Normallifeaffected #Kashmirbandh 
    திருப்பூரில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது சிலர் பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய காரை மோதியதில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானார்கள். இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இறந்த ராணுவ வீரர்களுக்கு விளக்கேற்றி வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதில் ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் வாசுநாதன், பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், லகு உத்யோக் பொறுப்பாளர் மோகனசுந்தரம், பி.எம்.எஸ். சார்பில் சந்தானம் மற்றும் தொழில் துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது சிலர் பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை தீ வைத்து எரித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு போலீசார் எரிந்த கொடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் டவுன்ஹாலில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காந்தி சிலை வரை அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

    இதில் தொழில்துறையினர், பொதுமக்கள், வணிக அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர். #tamilnews
    கோபியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணியினர் ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணத்தை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #ValentinesDay
    கோபி:

    இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

    இந்த காதலர் தினத்துக்கு இந்து முன்னணி சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு நூதனப்போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் ஜோடி-ஜோடியாக வருவார்கள்.

    அவர்களை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் சிலர் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம் காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர்.

    இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினரின் போராட்டத்தால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் ஜகா வாங்கினர். அவர்கள் சென்ற பிறகு இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு சென்றனர். காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். #ValentinesDay
    பாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பங்கேற்பு Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் காகிதத்தில் செய்யப்பட்ட மாதிரி விமானங்களை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தற்போதைய ரபேல் ஒப்பந்தத்தை விட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம்தான் சிறந்தது என, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட ராணுவ அமைச்சக அதிகாரிகள் குழுவில் இடம்பெற்று இருந்த 7 அதிகாரிகளில் 3 பேர் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    இதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி 2 வாதங்களை வைத்திருந்தார். அதாவது, சிறந்த விலை மற்றும் விரைவான வினியோகம் என அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த வாதங்கள் அனைத்தும் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியால் தவிடுபொடியாகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதைப்போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆங்கில நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி கூறுகையில், ‘திருடன் அகப்பட்டு விட்டார்’ என்று தெரிவித்து இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்டு இருந்த ஒப்பந்தத்தை விட தற்போதைய 36 விமானங்கள் 55 சதவீதம் விலை அதிகம் எனவும், யூரோபைட்டர் நிறுவனம் வழங்கிய 25 சதவீத தள்ளுபடியை கணக்கில் கொள்ளாததால் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament


    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AndhraGovt #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டார்.

    இந்த போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    தற்போது இந்த போராட்டத்துக்கு மொத்தம் எவ்வளவு தொகை செலவானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஆந்திர அரசு செலவில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை டெல்லிக்கு அழைத்துசென்றார். இதற்காக 2 ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டது. ஆந்திர அரசே மத்திய ரெயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரெயில்களை முன்பதிவு செய்து ரெயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளித்தது.

    முக்கிய வி.ஐ.பிக்களுக்கு சொகுசு அறைகள், பொது மக்களுக்கு தனியாக அறைகள் என மொத்தம் 1100 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

    உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகி உள்ளது. இதற்கான தொகையை 6-ந்தேதியே ஒதுக்கீடு செய்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசி இருந்தார். அதில், ‘இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது.

    இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். #AndhraGovt  #ChandrababuNaidu

    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.

    இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.

    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

    முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.

    இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து போராட்டம் நடத்திய 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AkhileshStopped #SamajwadiProtest
    லக்னோ:

    அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக லக்னோ விமான நிலையத்துக்கு சென்ற அவரை விமானத்தில் ஏறவிடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அலகாபாத் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.



    அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோ, பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் தர்மேந்திர யாதவ் எம்பி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.

    இவ்வாறு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  2 எம்பிக்கள் உள்ளிட்ட 46 முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் நேற்று உ.பி. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #AkhileshStopped #SamajwadiProtest

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. #Jactogeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் பங்கேற்று கைதானார்கள். இதனால் அரசு துறை பணிகள் மட்டுமின்றி மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது.

    பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த 1529 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு அந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வித்துறை நியமித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் மற்றும் 17-பி விதியின்படி மெமோ வழங்கப்பட்டன.

    இதற்கிடையில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 8 நாட்கள் வரை போராட்டத்தை நீட்டித்து கொண்டு சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன்கருதி போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டத்தை கைவிட்டாலும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு அறிவித்தது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

    வேலை நிறுத்த காலத்தில் எத்தனை நாட்கள் பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    தொடக்க கல்வி துறையில் 95 ஆயிரம் பேரும், பள்ளி கல்வி துறையில் 80 ஆயிரம் பேரும் போராட்டத்தில் கலந்து கொண்ட புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 17-பி ‘மெமோ’ வழங்கப்பட்டன. பலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது. 1529 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 3 வகையான நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படுகின்றன.

    சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு தாங்கள் இதுவரையில் பணி செய்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். மேலும் 17-பி ‘மெமோ’ -வின்படி 2 வருடத்திற்கு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது. இதுதவிர 3 வருடத்திற்கு பதவி உயர்வு பட்டியலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

    ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வரிடம் கலந்து பேசி இதுபற்றி ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடவடிக்கையை கைவிட வேண்டும் என அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கல்வித்துறை நடவடிக்கைக்கான அனைத்து முழு விவரங்களையும் சேகரித்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா? கைவிடுமா? என்பது ஒருசில நாட்களில் தெரிய வரும். #Jactogeo
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #UPgovt #ESMAinUP
    லக்னோ:

    அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும்பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்.

    இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

    தபால், விமான நிலையம், துறைமுகம், ரெயில்வே உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கான சேவைகள் பாதிக்காத அளவில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சட்டம் அமலில் இருக்கும்போது போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தக்கோரி அம்மாநில அரசு பணியாளர்கள் நாளை முதல் (6-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசின் தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே இதற்கான உத்தரவை நேற்றிரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #UPgovt #ESMAinUP
    ×