search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102422"

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அங்காயி. இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அங்காயி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் 2 நாட்களாக சிகிச்சை அளித்தும், அங்காயி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் நேற்று இரவு முதல் காய்ச்சல் பாதிப்பும் அதிகமானது.

    இந்த நிலையில் இன்று காலை அங்காயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் அத்தனூர் பகுதியில் பரவும் காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். #Swineflu #Dengue

    சேலத்தில் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம், சூரமங்கலத்தை அடுத்த சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு கடையில் யு.பி.எஸ் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு சோளம்பள்ளம் ஜங்சன் அருகே உள்ள தாரமங்கலம் ரோட்டில் தனது வீட்டிற்கு செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த 2 பேர் விஜயக்குமாரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பித்து சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயக்குமார் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் எஸ்.ஐ. கேசவன் தாரமங்கலம் ரோட்டில் துரத்தி சென்று கே.ஆர்.தோப்பூர் அருகே அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 2 பேரும் தாதகாப்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் ரமேஷ் கண்ணன் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இது குறித்து எஸ்.ஐ. கேசவன் கூறும்போது, சமீபகாலமாக செல்போன் திருட்டு சேலத்தில் அதிகளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இதனால் நாங்கள் செல்போன் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். பொதுமக்கள் ரோட்டில் செல்லும் போதோ அல்லது பஸ்சில் பயணம் செல்லும் போதோ பாதுகாப்பாக செல்போனை பயன்டுத்த வேண்டும் என்றார்.

    காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆங்கில ஆசிரியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டியபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 135 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு 8 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் உணவு இடைவேளையின்போது, 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், வழக்கம்போல் வீட்டிற்கு உணவு சாப்பிட சென்றுவிட்டு மதியம் தாமதமாக பள்ளிக்கு வந்தார்.

    இதனால் வகுப்பு ஆங்கில ஆசிரியை கிரிஜா, அந்த மாணவரை ஏன் தாமதமாக வந்தாய் என கேட்டு கண்டித்துள்ளார். மேலும் பெஞ்ச் மீது ஏறி நிற்குமாறு கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர் தான் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொம்மைகளை சுவரில் எறிந்தார். இதில் ஒரு பொம்மை சுவரில் பட்டு எகிறி ஆசிரியை கிரிஜா மீது விழுந்தது. உடனே அவர், பள்ளியில் மற்ற மாணவர்களை போல் ஒழுங்காக இருக்குமாறு கூறி சத்தம் போட்டார்.

    இதனால் கோபம் அடைந்த அந்த மாணவர் தேர்வு அட்டை, தன்னுடைய புத்தகப்பை மற்றும் கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். மேலும் ஆசிரியையை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கிரிஜா, தலைமை ஆசிரியை புவனேஸ்வரியிடம் சென்று மாணவர் இப்படி செய்வதற்கு எல்லாம் நீங்கள் தான் காரணம் எனக் கூறி குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மாணவர் பள்ளியில் நடந்த வி‌ஷயத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோரும் பள்ளிக்கு வந்து எங்களது மகனை நீங்கள் எப்படி? பெஞ்ச் மீது ஏறி நிற்க சொல்லலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு ஆங்கில ஆசிரியை கிரிஜா எல்லா பிள்ளைகளும் முன் கூட்டியே வகுப்பறைக்கு வந்து விடுகிறார்கள். உங்கள் மகன் மட்டும்தான் தினமும் தாமதமாக வருகிறான் என்று கூறினார். அதன் பிறகு தான் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த வி‌ஷயம் நேற்று மாலையில் தான் வெளியே தெரியவந்தது. உடனடியாக வட்டார கல்வி அலுவலர் அன்புலி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அங்கு ஊர் மக்களும் திரண்டனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரியையும், ஆங்கில ஆசிரியை கிரிஜாவையும் இடமாறுதல் செய்ய வேண்டும். இந்த 2 ஆசிரியைகளின் பனிப்போர் தான் பிரச்சினைக்கு காரணம். இவர்களின் மோதலால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி கல்வி அதிகாரியிடம் முறையிட்டனர்.

    அப்போது கல்வி அதிகாரி கூறுகையில், இப்போதைக்கு இடமாறுதல் எதுவும் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட மாணவர், தனது வகுப்பு ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது. இனிமேல் இவ்வாறு செயல்பட்டால் மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசாரிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியை புவனேஸ்வரிக்கும், ஆங்கில ஆசிரியை கிரிஜாவுக்கும் இடையே வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது 2 பேரும் மோதிக் கொள்வார்கள். அதன் எதிரொலியாக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக விசாரணையில் எங்களுக்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்விதுறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு இதில் சம்பந்தமில்லை என கூறி கைவிரித்து விட்டனர்.

    சேலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடையப்பன். இவரது மனைவி ஜம்பு . இவர் நேற்று லீ-பஜார் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை எடுத்துக் கொண்டு பஸ்சில் வந்து இறங்கினார். லீ பஜாரில் பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் ஜம்பு அதிர்ச்சி அடைந்தார்.

    யாரோ நைசாக நகையை திருடி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம், தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    சேலம், தர்மபுரி மண்டலத்திற்கான புதிய அரசு பஸ்கள் இயக்கத்திற்கான விழா சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேலம் மண்டலத்திற்கான 13 புதிய அரசு பஸ்கள், தர்மபுரி மண்டலத்திற்கான 17 புதிய அரசு பஸ்கள் என மொத்தம் 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மேலாண் இயக்குனர் அரவிந்த், துணை இயக்குனர்கள் ஜெயக்குமார் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய அரசு பஸ்கள் சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், செந்தாரப்பட்டியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், எடப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் வழியாக பெங்களூரு வரையிலும், எடப்பாடியில் இருந்து கும்பகோணம் வரையிலும், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரையிலும், கடத்தூரில் இருந்து திருப்பூர் வரையிலும், கோவையில் இருந்து திருவண்ணாமலை வரையிலும், சேலத்தில் இருந்து திருப்பூர் வரையிலும், நங்கவள்ளியில் இருந்து கோவை வரையிலும், சேலத்தில் இருந்து கரூர் வரையிலும், திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு வரையிலும் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    சேலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (28).இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது.

    இவர்கள் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூனம்பட்டியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். கணவன்-மனைவிக்கிடைேய தகராறு இருந்து வந்தது.

    இதில் மனம் உடைந்த சதிஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதிஷ் குமார் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ததையடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு லேசான தூறல் விழுந்தது.

    இதனால் சேலம் காந்திசிலை, 4 ரோடு, 5 ரோடு உள்பட பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் சாலையோர கடைகளுக்குள்ளும் புகுந்தது. சீத்தாராமன் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, செரிரோடு, சங்கர் நகர், அரிசிப்பாளையம், நாராயணநகர், புதிய பஸ் நிலையம், சினிமாநகர், சத்திரம், பழைய பஸ்நிலை யம், அம்மாப்பேட்டை பச்சப்பட்டிஏரி, கிச்ச்சிப் பாளையம், குகை, பஞ்சந்தாங்கி ஏரி போன்ற தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் இந்த தண்ணீர் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    நாராயணன் நகர், 5 ரோடு ஸ்ரீராம்நகர், தமிழ்ச் சங்க சாலை போன்ற பகுதிகளில் வீடுகளில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் அகற்றினார்கள். அதிக அளவில் தண்ணீர் புகுந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் டேங்க் லாரிகளை கொண்டு வந்து மோட்டாரை வைத்து மழைநீரை அகற்றினார்கள். சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி, சாலைகளில் உள்ள தண்ணீர் அதில் செல்ல வழிவகை செய்தனர்.

    4 ரோடு பகுதியில் மேம்பாலம் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவழி பாதையில் சென்றதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம்-72.20 மி.மீ
    ஆத்தூர்-3.60
    ஏற்காடு-30.40
    மேட்டூர்-15.20
    வாழப்பாடி-8.30
    கெங்கவல்லி-5.40
    எடப்பாடி-47.60
    தம்மம்பட்டி-7.20

    நாமக்கல்லில் நேற்று மாலையில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. அதுபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம், பரமத்திவேலூர், கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்னை, பாக்குமரம், வாழை போன்றவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஜெயில்களில் சோதனை நடத்துவது காலம் கடந்த நடவடிக்கை என்று நல்லக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TNPrisons #Nallakannu

    நாகர்கோவில்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புழல் ஜெயிலில் கைதிகள் அறையில் பயன்படுத்தப்பட்ட டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் துணை இல்லாமல் ஜெயிலுக்குள் டி.வி. கொண்டு செல்ல முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகம் முழுவதும் ஜெயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை காலம் கடந்து நடத்தப்படும் நடவடிக்கை ஆகும்.

    தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது. இதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    27 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கலும் இல்லை. மக்கள் ஆதரவும் அளித்துள்ளனர். எனவே அவர்களை தாமதம் இல்லாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

    தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயபாஸ்கர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

    ஆட்சியை தக்க வைக்க வேண்டும், வரும் தேர்தலை அதிகாரத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டே அவர்கள் செயல் படுகிறார்கள். மக்களை பற்றி கவலைப்பட வில்லை. ஜனநாயக விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

    அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதாவின் கை பொம்மையாக உள்ளது. எச். ராஜா உள்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வரைமுறை இல்லாமல் பேசுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடிக்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தபோது, அதே விமானத்தில் வந்த மாணவி சோபியா பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் கைது செய்யப்பட்டும், அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கிய பிறகு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பிரதமர் மோடியும் காலம் கடந்து வந்தே இங்கு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, மலை வாழ் மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை.

    நாகர்கோவிலில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை வசதி பற்றி அரசு கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPrisons #Nallakannu

    சேலம் அருகே தனியார் பேருந்துகள் மோதி 7 பேர் பலியான இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். #BusAccident
    சேலம்:

    சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் பெங்களுருவில் இருந்து ஏற்காடு சென்ற தனியார் பேருந்தும், சேலத்தில் இருந்த் தர்மபுரி சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 30-க்கு மேற்பட்டோர் சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தால் சேலம் - பெங்களூர் தெசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், அதிகாலையில் விபத்து ஏற்பட்டதை அறிந்த சேலம் கலெக்டர் ரோகிணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை ஆய்வு செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அதிகாலையில் இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலியானது சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BusAccident
    சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். #BusAccident
    சேலம்:

    சேலம் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இன்று அதிகாலை மாமாங்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 20க்கு மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். #BusAccident
    தந்தை சத்தம் போட்டதால் விரக்தியில் ஓரே குடும்பத்தில் அக்காள்-தங்கை உள்பட 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா (வயது 33) கலை மகள் (26) உள்பட 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மணமகன் வீட்டார், அழகேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அழகேசன் வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்றிருந்தார். மகள்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள் மணமகன் வீட்டாருக்கு டீ, காபி கொடுக்கவில்லை என தெரிகிறது. தங்களை சரியாக கவனிக்காதது குறித்து மணமகன் குடும்பத்தினர் அழகேசனிடம் புகார் கூறினர்.

    இதனால் வெளியே சென்றிருந்த அழகேசன் வீட்டிற்கு வந்து மேனகா, கலைமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோரை அழைத்து சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் அவர்கள் மனம் உடைந்தனர். 3 பேரும் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்தனர். இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தான குருணை மருந்தை வாங்கி 3 பேரும் ஓரே நேரத்தில் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதையறிந்த உறவினர்கள் பதறி துடித்தனர். உடனடியாக மேனகா, கலைமகள் உள்பட பேரையும் மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அம்மாப்பேட்டை போலீசார் நேராக அழகேசன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    சேலத்தில் நேற்று நடந்த அகில இந்திய நாய்கள் கண்காட்சியில் 30 வகையான நாய்கள் பங்கேற்றன.
    சேலம்:

    தி சேலம் அக்மெ கென்னல் கிளப் சார்பில் சேலம் கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வளாகத்தில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சிக்கு பொமரேனியன், டேஸ்ஹவுண்ட், பீகிள், ராட்வீலர், டால்மேசன், கிரேட்டன், டாபர்மேன், மினியேச்சர் பின்சர், காக்கர் ஸ்பேனியல், புல்டாக், ஐரிஸ்டிடம், பூடுல், செயின்ட் பெர்னார்ட், சலூகி, பூடுல், ராஜபாளையம் நாய், ரொடிஸியன் ரிட்ஜ்பெக், புல்டெரியா உள்பட 30 வகையான சுமார் 300 நாய்கள் அழைத்து வரப்பட்டன.



    கோலாப்பூர், மராட்டியம், பெங்களூரு, கேரளா, சென் னை, பஞ்சாப், போபால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நாய்கள் கலந்து கொண்டன. நடுவர்களாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பீட்டர் கட்லர், கேமாக் மற்றும் சென்னையை சேர்ந்த சுதர்சனன் இடம் பெற்றனர்.

    இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாய் இனங்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், உடல் எடை, அழகு, கீழ்படிதல், திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாய்கள் முதல் 3 இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு சுழற்கோப்பை, கேடயம் என பரிசுகள் வழங்கப்பட்டன.

    கண்காட்சியில் நாய்களுக்கு தேவையான உணவு பொருட்கள், உபகரணங்கள் வாங்க ஸ்டால்களும், பொதுமக்களுக்கு தேவையான உணவு வகை ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் கிளப் செயலாளர் நடராஜன், உதவி செயலாளர் சாந்தமூர்த்தி, பொருளாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×