search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102691"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்பனை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு போகவில்லை.

    இதனால் அவர்களது படகுகள் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
    நெல்லை அருகே காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் 2 என்ஜினீயர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் பகுதியை சேர்ந்த பால்துரை மகன் கிங்ஸ்டன் (வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், டிப்ளமோ என்ஜினீயர் ஆவார்.

    இந்த நிலையில் குறிப்பன்குளம் பகுதியில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று பழுதாகி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இதனை சரிசெய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளத்தைச் சேர்ந்த என்ஜினீயர் முத்துப்பாண்டி (25) என்பவர் வந்திருந்தார்.

    இருவரும் பழுதான காற்றாலை டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்து பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு பணி முடிந்து, மீண்டும் டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பை கொடுத்தபோது பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

    இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். டிரான்ஸ்பார்மர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் முத்துப்பாண்டி, கிங்ஸ்டன் ஆகியோர் உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். #tamilnews
    நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 22 பேரை கைது செய்த போலீசார் 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்திய கும்பலால் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்துவோரை கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.

    மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.எந்திரங்கள் மற்றும் லாரிகள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி பகுதியில் மணல் கடத்திய 2 பேரும், தாழையூத்து பகுதியில் 5 பேரும், சீவலப்பேரியில் 2 பேரும், களக்காட்டில் 6 பேரும், முன்னீர்பள்ளத்தில் ஒருவரும், சேரன்மகாதேவி, ஊத்துமலை, சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டார்கள்.#tamilnews
    நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மக்கள் நீதி மய்யம் பெரிய இயக்கமாக மாறும் என்று கமல்ஹாசன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாளாக சுற்றுப்பயணம் செய்தார். பாளை முருகன்குறிச்சி நூற்றாண்டு மண்டபம் அருகே கூடிநின்ற மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    பல காலங்கள் என்னுடன் சேவை செய்த நற்பணி மன்றத்தினர் இன்று கட்சிக்காரர்களாக மாறி வந்துள்ளீர்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பல புதிய முகங்கள் வந்திருக்கிறார்கள். உங்களுக்கு நன்றி. உங்கள் முகங்களை பார்ப்பதற்கும் மனங்களை பிடிப்பதற்கும் நான் வந்துள்ளேன். மீண்டும் வருவேன். உங்களை புரிந்து கொள்ள இந்த பயணம் உதவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து அவர் மேலப்பாளையம் சந்தை பகுதிக்கு சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு நின்று கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.

    அவர்கள் மத்தியில் திறந்த காரில் நின்று கமல்ஹாசன் பேசியதாவது:-

    உங்களை தெரிந்துகொள்ளவே பயணம் மேற்கொண்டுள்ளேன். இது நீங்கள் நோன்பு இருக்கும் காலம் என்பதை தெரிந்து கொண்டேன். நேரம், காலம் தெரியாமல் வந்ததற்கு மன்னிக்கவும். இந்த இயக்கம் பெரிய இயக்கமாக மாறும்.

    இங்கு நிறைய இளைஞர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் பயணிக்கும் தூரம் வெகுதூரம். அடுக்கு மொழியில் பேசுவதைவிட அடுத்தவேலையை பற்றி பேசுவது முக்கியம். மக்கள் நீதி மய்யத்திற்கு நிறைய உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். அதற்காகவே செயலி உருவாக்கியுள்ளோம். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த செயலி தமிழர்களை புதிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்தவர்கள் சொல்லிக்கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நெல்லை டவுண் வாகையடிமுக்கு பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது சரித்திர புகழ் வாய்ந்த இடம். பெரிய தலைவர்கள் பேசிய இடம். பாரதி உலாவிய வீதி. இங்கு பேசுவது பெருமையாக உள்ளது. பெரிய அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளார்கள். நானும் வந்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம். மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல விசிலி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது தமிழகத்தை செதுக்கும் உளி. இந்த உளி உங்கள் கையில் இன்னும் கூர்மை பெறும். நான் செல்லும் அனைத்து இடங்களிலும் உங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது. இது நம்ம ஊர் என்ற மன்பான்மை வருகிறது. இங்கேயே தங்கிவிடலாம் என தோன்றுகிறது.

    யாதும் ஊரே யாவரும் கேளிர். இதுவரை நான் பணத்திற்காக வசனம் பேசினேன். இப்போது உங்கள் அன்பின் வெளிப்பாட்டை பேசி வருகிறேன். இது ஒத்திகை பார்த்து பேசுவது அல்ல. உங்களை பார்த்ததும் அன்பாக வருகிறது. உங்கள் அன்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். இதனால் பேச்சு வரவில்லை. இந்த அன்பிற்கு சினிமா மட்டும் காரணம் என கூறமுடியாது.

    இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து வருகிறேன். கடமையை செய்யுங்கள். ஒத்தகருத்துள்ள நிறைய பேர் உள்ளார்கள் என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தபின் புரிகிறது. 30 வருடத்திற்கு முன்பு உங்களை சந்தித்து பேசியது நினைவுக்கு வருகிறது. சாதனை என்பது சொல் அல்ல செயல். செயலை செய்வதற்கு செயலியை மக்கள் நீதி மய்யம் அறிமுகம் செய்துள்ளது. புதிய தமிழகம் படைக்கும் பொறுப்பில் பங்கேற்றுகொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 10 வாகனங்களும் பறிமுதல செய்யப்பட்டது.
    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலால் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்துவோரை கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.

    மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.எந்திரங்கள் மற்றும் லாரிகள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி பகுதியில் மணல் கடத்திய 2 பேரும், தாழையூத்து பகுதியில் 5 பேரும், சீவலப்பேரியில் 2 பேரும், களக்காட்டில் 6 பேரும், முன்னீர்பள்ளத்தில் ஒருவரும், சேரன்மகாதேவி, ஊத்துமலை, சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டார்கள். #Tamilnews
    நெல்லை, மதுரை, கோவை மண்டலத்தில் என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன. ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம் புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.



    அதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இள நிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    எனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்வதாகவும் அதற்கு வழிகாட்டி மக்கள் தான் என்றும் பணகுடியில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeediMaiam #KamalHaasan
    நெல்லை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார்.

    இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பணகுடியில் அவருக்கு நெல்லை மாவட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் செந்தில்குமார் தலைமையில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பணகுடி பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசினார்.

    உங்களை நான் அறிந்து கொள்ள மேற்கொண்டுள்ள பயணம் இது. மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது. அதற்கு வழிகாட்டி நீங்கள்தான். உங்கள் ஆசி இல்லாமல் அந்த பயணத்தை தொடர முடியாது. உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இது. கண்ணோடு கண் பார்த்து உங்கள் அன்பை அறியும் இந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

    திரைப்படம், டி.வி. மீடியா மூலமாக உங்களை ஏற்கனவே சந்தித்து வந்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக என்னை நீங்கள் பார்த்துள்ளீர்கள். பக்தர்கள் தரிசனம் என்பது போல உங்களை தரிசிக்க வந்துள்ளேன். மக்களின் தேவைகளுக்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் திசையன்விளை, உவரி ஆகிய பகுதிக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். கமல்ஹாசன் வருவதை அறிந்ததும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். கமல்ஹாசன் பேசும் போது அவர்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினார்கள்.

    வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்க
    பகுதியில் மக்கள் திரண்டு நின்ற காட்சி.

    இதன் பிறகு அவர் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் மணப்பாட்டில் மீனவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது மீனவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். பின்பு அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து கமல்ஹாசன் இன்று மாலை 4மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.

    மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, இன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

    பின்னர் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். நாளை பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். #MakkalNeediMaiam #KamalHaasan
    செங்கோட்டை அருகே பணத்துக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை தாயே விபசாரத்தில் தள்ளிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீமூலப்பேரி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகில் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சைகால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை புளியரையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த தோட்டத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அஜித் (38) என்ற நபருடன் வசித்து வந்தார். இவர்கள் அந்த தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். அந்த பெண், தனது 13 வயது மகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்க வைத்து 8-ம் வகுப்பு படிக்க வைத்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவி, ஆரியங்காவு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு தனது தாயுடன் வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் மகளை திடீரென்று காணவில்லை என்றும், தன்னுடன் வசித்து வந்த அஜித் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக அந்த பெண் புளியரை, தென்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக தென்மலை போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் புகார் கொடுத்த மறுநாளே அஜித், அந்த மாணவியுடன் புளியரையில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து மாணவியின் தாய், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதற்காக தென்மலை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், தனது மகளும், அஜித்தும் திரும்ப வந்து விட்டதாகவும், புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். அந்த பெண்ணின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியின் தாய்க்கும், அங்கு வேலை செய்த அஜித்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. உடனே இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அப்போது அந்த பெண், தனது மகளையும் அழைத்துக்கொண்டு அஜித்துடன் வந்து விட்டார்.

    அதன்பிறகு புளியரை பகுதியில் உள்ள தோட்டத்தில் இருவரும் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு வேலைக்கு சேர்ந்த‌னர். தங்களது கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பாள் என்று கருதி மகளை திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுதியில் தங்க வைத்துள்ளார் அந்த பெண். இதற்கிடையே பணத்துக்கு ஆசைப்பட்டு விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி தோட்டத்து வீட்டில் வைத்து பலருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவர்களது கட்டாயத்தின் பேரில் மாணவி விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விடுதிகளிலும், வீடுகளிலும் தங்க வைத்தும் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்கு மாணவியின் சித்தப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியின் சித்தப்பாவே மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    தனது மகளை, தனக்கு தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடுத்த மாணவியின் சித்தப்பா முடிவு செய்தது தனக்கு பிடிக்காததால் போலீசில் புகார் செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் தாயையும், அதற்கு உடந்தையாக இருந்த சஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலன் அஜித் மாணவியின் சித்தப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புளியரை பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.
    தூத்துக்குடி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சென்றார். இன்று (புதன் கிழமை) குமரி மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு நாகர்கோவிலில் தங்குகிறார்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். மக்கள் குறை கேட்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை காலை 10 மணிக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து காலை 10.15மணிக்கு மணப்பாடு மீனவர் மக்கள் சந்திப்பும், 11 மணிக்கு திருச்செந்தூரில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, மாலை 4 மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்கள் சந்திப்பு நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதிமய்யத்தினர் செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டநிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, அன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிர குளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

    பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். 18-ந்தேதி பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

    நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்து தலைமறைவான மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்துக்கு இன்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பரமசிவன் ஓட்டினார். கண்டக்டராக சின்னப்பன் என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 10 பயணிகளே பயணித்தனர்.

    அந்த பஸ் தாழையூத்து தென்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வடக்கு தாழையூத்தில் ஒரு திருப்பத்தில் பஸ் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் கையில் பெட்ரோல் கேன் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பரமசிவன் பஸ்சை நிறுத்தினார். உடனே பஸ்சில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து பஸ்சை ஓரமாக ஓட்டி செல்லுமாறு மிரட்டினார். இதனால் பயந்து போன டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தினார்.

    இதையடுத்து பஸ்சில் ஏறிய மற்றொரு நபர் பயணிகளிடம் இந்த பஸ்சுக்கு தீ வைக்க போகிறோம், ஆகவே அனைவரும் இறங்கி சென்று விடுங்கள் என கூறினார். இதனால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.

    இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். பஸ் முழுவதுமாக கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது அந்த மர்ம நபர்கள் ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் வீசியவாறும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி உடனடியாக தாழையூத்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பாளை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அரசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மற்றும் போலீசார் அதிரடி படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விவரங்கள் கேட்டறிந்தார். மேலும் பஸ்சுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து அடையாளங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தாழையூத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியான ராதாபுரம் தாலுகாவில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர கோடையில் வெயில் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது. அதே நேரம் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் வரை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வந்ததால், வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் தண்ணீர் வருகிறது. நெல்லை மாவட்ட அணை பகுதியிலும் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இரவுகளில் பாளை பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கடற்கரை பகுதியான ராதாபுரம் தாலுகாவில் கனமழை பெய்தது. ராதாபுரத்தில் இன்று காலை வரை 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது. அணைகளில் நீர்மட்டமும் அதே அளவு தொடர்ந்து நீடிக்கிறது. பாபநாசம் அணையில் 19.60 அடியும், மணிமுத்தாறு அணையில் 74.30 அடியும் உள்ளது.

    இந்த கோடையில் மணிமுத்தாறு அணையில் 74.30 அடி தண்ணீர் உள்ளதால் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. தொடர்ந்து வழக்கம் போல் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை அருகே இன்று காலை காரும் லாரியும் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    நெல்லை:

    பாளை மேலப்பாளையம் வசந்தாபுரத்தை சேர்ந்தவர் மணி(வயது30). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுசியா (25). இவர்களுக்கு தர்‌ஷன் என்ற மகன் உள்ளான்.

    நேற்று மணி தனது மனைவி, மகன், தாய் தனம் (52), தம்பி குமார் (28) ஆகியோரையும், நண்பரான நெல்லை சந்திப்பு விளாகத்தை சேர்ந்த சண்முகம் (38), அவரது மனைவி செல்வி (33), அவர்களது குழந்தைகள் கார்த்திக் (8), சுபஸ்ரீ (3) உள்ளிட்டோரையும் அழைத்துகொண்டு ஒரு காரில் குற்றாலத்துக்கு சென்றார்.

    காரை தச்சநல்லூர் நம்பிராஜபுரத்தை சேர்ந்த சுரேந்தர் (21) என்பவர் ஓட்டிச்சென்றார். அவர்கள் இரவு முழுவதும் பல்வேறு அருவிகளுக்கு சென்று குளித்து விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பினர். அவர்களது கார் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் நெல்லை அபிஷேகப்பட்டி ‘பவர்கிரிட்’ அருகே வந்தது.

    அப்போது அவர்களது காரும், எதிரே தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த மணியின் மனைவி அனுசியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    மணி மற்றும் அவரது தம்பி குமார், தாய் தனம், சண்முகம், அவரது மனைவி செல்வி, அவர்களது குழந்தைகள் கார்த்திக், சுபஸ்ரீ, டிரைவர் சுரேந்தர் ஆகிய 8 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்து பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் பணியான அனுசியாவின் உடலை போலீசார் மீட்டு பிரிதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணி, குமார் ஆகிய சகோதரர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன் சிங் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் டிரைவரான கடைய நல்லூரை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×