search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டம்"

    கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே மரப்பாலம் சீனக்கொல்லி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை நுழைந்தது.

    பின்னர் அது பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நேற்று விடியற்காலையில் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு காட்டு யானை வராமல் தடுக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம்ப், அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் தினமும் இரவு காட்டு யானை வந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில சமயங்களில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் காட்டு யானை நின்று வருகிறது. இன்னும் 1 வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் காட்டு யானை வருகையால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே வனத்துறையினர் காட்டு யானை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல்த்கேம்ப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்துக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கி.காமாட்சிபுரம் தென்பழஞ்சி தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது42). அதே பகுதியில் சொந்தமாக நிலம் வைத்து வெள்ளைச் சோளம் பயிரிட்டு வருகிறார். மேலும் கால்நடைகளும் வளர்த்து வருவதால் தீவனங்களை தோட்டத்தில் வைத்திருந்தார்.

    இந்த தோட்டத்தில் திடீரென தீப்பற்றியது. அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும் வெள்ளைச் சோளம், கால்நடை தீவனங்கள், வைக்கோல் போர் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

    அவரது தோட்டத்துக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்பவரது செல்போன் கண்டெடுக்கப்பட்டது. எனவே அவர்தான் தனது தோட்டத்திற்கு தீ வைத்திருக்க கூடும் என செல்வம் ராஜதானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம்குமார் தீ வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆலங்குளம் அருகே தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது49), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு வெளியே உள்ள மலைப்பகுதியில் உள்ளது. தோட்டத்தில் இவர் காய்கறி பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் மலைப் பகுதிகளில் இருந்து பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    இதனால் அவற்றை விரட்டுவதற்காக பேச்சி முத்து இரவு தோட்டத்திற்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பேச்சிமுத்து அவரது தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தார். 

    இதுபற்றி ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக பேச்சிமுத்துவின் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இரவு காவலுக்கு சென்ற பேச்சிமுத்து கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
    கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுரங்கனாறு நீர் வீழ்ச்சி, வெட்டுக்காடு, பளியங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அகழிகள் வெட்டப்பட்டு சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அவை பராமரிக்கப்படாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    வெட்டுக்காடு சில்ராம படுகை பகுதியில் உள்ள பேச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ளார். தற்போது அவை தார் வெட்டும் பருவத்தில் இருந்துள்ளது. இங்கு புகுந்த யானை கூட்டம் வாழைகளை நாசம் செய்தன.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர காவலுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரும் எங்களுக்கு இது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து இலவ மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள லோயர்கேம்ப் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வாழை, தென்னை, மா, இலவ மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் ஆகியவை தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வேலி மற்றும் அகழிகள் அமைத்துள்ளனர்.

    குறிப்பாக நாயக்கர் தொழு, எள்கரடு, பளியங்குடி ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு மட்டும் அகழிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அகழிகளில் மண் மேவி காணப்படுவதால் மீண்டும் யானைகள் வலம் வரத் தொடங்கி உள்ளது.

    நேற்று நாயக்கர் தொழு, சரளைமேடு பகுதியில் பெருமாயி (வயது48) என்பவருக்கு சொந்தமான இலவ மரத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மரங்களை வேறுடன் சாய்த்து சேதப்படுத்தியது. அதிகாலையில் எழுந்து பார்த்த பெருமாயி மற்றும் அப்பகுதி விவசாயிகள் யானைகளின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாக யானைகள் இடம்பெயர்வது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அட்டகாசம் செய்திருப்பதால் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். வனத்துறையினர் பார்வையிட்டு மீண்டும் யானைகள் வராமல் இருக்க முகாமிட்டு உள்ளனர்.

    ஓமலூர் அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கர செட்டியப்பட்டி  ஊராட்சி கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (எ) சேட்டு (வயது 44). விவசாயி. இன்று காலை இவரது மஞ்சள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். இவரது மஞ்சள் தோட்டத்தில் உள்ள மின்சார கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து தண்ணீரில் விழுந்தது. தண்ணீர் பாய்ச்சும் போது மின்சாரம் தாக்கி சேட்டு சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி தோட்டத்தில் சென்று பார்த்தார் அங்கு அவர் மயங்கி கிடந்தார்.  

    இதைபார்த்த அவர் மனைவி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து டிரான்ஸ் பார்மரை ஆப் செய்து விட்டு, அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேட்டு இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதாகியுள்ளதாக வெள்ளாளப்பட்டி மின்சார வாரியத்தில் பல முறை முறையிட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும். இதனால் பழுதான மின் கம்பி அறுந்து  விழுந்து மின்சாரம் பாய்ந்து இறந்ததாக கூறினர். 

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சேட்டுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், சண்முகி, தரணிகா என்ற இரண்டு மகள், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர்.
    ×