என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 103053"
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என கலைஞரின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது.
இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம்.
அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.
அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது.
அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு காட்டுகின்ற நன்றி செலுத்துகின்ற காணிக்கை!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KarunanidhiStatue
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் “பாராளுமன்ற வாதி” என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
விருது பெற்ற அவர் இன்று சென்னை திரும்பினார். அதையொட்டி அவருக்கு தி.மு.க. மகளிர் அணி சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இன்னும் அதிகமாக பணியாற்ற இந்த விருது உத்வேகம் அளித்துள்ளது. அனைவரையும் இணைத்து மத சார்பற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக் கொள்கிறேன்.
மேகதாது பிரச்சனை குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறோம். இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
நடுவர்மன்ற கருத்து கேட்காமல் அணைக்கட்ட முடிவு எடுத்தது சரியானது அல்ல. பாராளுமன்றத்தில் ரபேல் விமான ஊழல் குறித்தும் கேள்வி எழுப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #DMK #Kanimozhi
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திருவுருவச் சிலை வருகிற 16-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.
இதை முன்னிட்டு இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், தலைமைக் கழகத்தால் ‘சிறப்பு அழைப்பாளர்’களாக அழைக்கப்பட்டுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும்.
எனவே, கழக நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் சோனியா காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவமைப்பில் தயாராகி வருகிறது.
தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, மேடை அமைக்கும் பணியை கவனித்து வருகிறார்.
இந்த மேடை வெளியில் தயாரிக்கப்பட்டு ராயப்பேட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது. #DMK #KarunanidhiStatue #MKStalin
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
சோனியாகாந்திக்கு நாளை பிறந்தநாள் என்பதால் பகல் 11.30 மணிக்கு சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். அப்போது சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார்.
இதைத் தொடர்ந்து 10-ந் தேதி மதியம் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்று அங்கு வரும் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்குகிறார். பின்னர் அன்று இரவு முக ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். #DMK #Karunanidhi #SoniaGandhi #MKStalin
திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றியவர் செல்வராணி. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த போது இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டிருந்தார்.
அவரது கவிதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து செல்வராணி திருச்சி மாநகர காவல் துறையில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வில் செல்வதாக காவல் துறைக்கு கடிதம் அளித்தார். அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்நிலையில் விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கடிதம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து செல்வராணிக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் நேற்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்த தகவல் அறிந்து கே.கே.நகர் ரெங்கநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளனரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்க, இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன் என்றார்.
நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செல்வராணியின் கணவர் ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர். #MKStalin #Selvarani
நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த வீடு உள்ளது. அந்த வீடு முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் நினைவு நூலகமாக கருணாநிதி உயிரோடு இருந்தபோதே மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த வீட்டில் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் உருவ சிலைகள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பழைய நினைவுகளை கூறும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வீட்டை தி.மு.க.வினர் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.
பழமை மாறாமல் அந்த ஓட்டு வீடு பராமரிக்கப்பட்டு நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. இந்த நிலையில் கஜா புயலின் தாக்கத்தில் இந்த வீடும் தப்பவில்லை. கருணாநிதி பிறந்த வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. வீட்டுக்கு முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ‘நூலகம்’ என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகை மரம் விழுந்ததில் சேதமடைந்தது. மேலும் சூறாவளி காற்றினால் வீட்டின் ஓடுகளும் உடைந்தன.
இந்த தகவலை அறிந்த கருணாநிதியின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்ததுடன், உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், கருணாநிதி பிறந்த வீட்டை உடனடியாக சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். #GajaCyclone #Karunanidhi
தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை கடந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயலால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள், டவர்கள் கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கஜா புயல் வந்து சென்ற பின்னரும் இன்னும் டெல்டா பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை. நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீடு நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கஜா புயலால் இந்த வீட்டின் முன்பகுதியில் இருந்த மரம் விழுந்து ஓடுகள் உடைந்தன. முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் சேதம் அடைந்துள்ளன. இது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone
அண்ணா அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா முழு உருவ சிலை 16.9.87ல் நிறுவப்பட்டது. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
கருணாநிதி மறைந்து விட்ட நிலையில் அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீஞ்சூர் அருகே தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிலை உருவாக்கப்படும் பணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 முறை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முகவடிவமைப்பில் உள்ள குறைகளை எடுத்து கூறி சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன் அடிப்படையில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படுவதால் அதன் அருகே அண்ணா சிலை பழையதாக காட்சி தரும் என்பதால் அண்ணாவுக்கும் புதிதாக வெண்கல சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திரு உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் 16-ந்தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்க இருக்கிறார்கள்.
புனரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையும்-தலைவர் கலைஞர் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16-ந்தேதி தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #karunanidhi
தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு பிரச்சனை பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை” என்று பல பிரச்சனைகளைப் போல பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை சுப்ரீம் கோர்ட்டில் ஆக்கபூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த தி.மு.க. அரசுதான் என்பது ஏனோ முதல்-அமைச்சருக்குத் தெரியவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் நடைபெற்ற நேரத்தில் கூட அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-7-2016 அன்றே வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்ட அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் “தடுப்பணை கட்ட தடையாணை” கேட்டு வழக்குத் தொடர்ந்தது.
தன் மீதுள்ள ஊழல் வழக்கில் பதைபதைப்புடன் ஓடோடிச் சென்று சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி, அதே அக்கறையுடனும், வேகத்துடனும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஏன் தடை உத்தரவு பெறவில்லை?. இதைத்தான் நேரத்திற்கேற்ப நிறம்மாறும் செயல் என்று கூற வேண்டும்.
முதல்-அமைச்சரான பிறகு ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை கடிதம் எழுதினார்?. பொதுப் பணித் துறை அமைச்சராக இருக்கும் இவர் அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரிடமாவது பேசினாரா? பிரதமர் நரேந்திரமோடியை பலமுறை சந்தித்துள்ள முதல்-அமைச்சர் பாலாற்று பிரச்சினை குறித்து எத்தனை முறை பேசினார்?. எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான என்னைப் பார்த்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை எழுப்புவது ஆட்சியில் இருப்பது அவரா அல்லது நாங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை, கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில் வெளிப்படைத்தன்மை நிறைந்த கட்சி என்பது திடீர் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சருக்கு தெரியாது. குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றதே தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அ.தி.மு.க. பிரிவு போல் பா.ஜ.க.வுக்கும், பிரதமர் மோடிக்கும் கைகட்டி வாய்பொத்தி நின்று அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, மாநில உரிமைகளை மனச்சாட்சியின்றி அடகு வைத்து விட்டு திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை.
தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்று கூறும் பழனிசாமி, “அ.தி.மு.க. முதல்-அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் உள்ள எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?. ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் சொந்த நலனுக்கான உறவே தவிர, தமிழக நலனுக்காக துளியும் இல்லை.
ஆகவே சந்தர்ப்பவாதத்துக்கு சரியான அடை யாளம் பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஒரு பிரிவின் இணை ஒருங்கிணைபாளராக இருக்கும் முதல்-அமைச்சர்தானே தவிர, துணிச்சலுடனும், கொள்கை உறுதியுடனும் பா.ஜ.க.வையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தீரமுடன் நிமிர்ந்து நின்று எதிர்க்கும் தி.மு.க. தலைவரோ, தி.மு.க.வோ அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி இப்போதாவது புரிந்துகொள்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #EdappadiPalaniswami
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். அதபோல் இப்போது ஜனவரி மாதம் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்க உள்ளது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். மொத்தம் 5 நாட்கள் கூட்டம் நடைபெறும். இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல். ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும்.
ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பேரவை கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும். #TamilNaduAssembly
தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணம் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன.
இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
அதன்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியும் காலியாகி இருப்பதால் அவற்றையும் சேர்த்து நடத்திவிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் டிசம்பர் மாதமே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதம் நடத்த இயலாத பட்சத்தில் ஜனவரி மாதம் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 தொகுதி இடைத்தேர்தல் ‘‘மினி பொது தேர்தல்’’ ஆக கருதப்படுகிறது. இந்த 20 தொகுதி தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போடும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆளும் அ.தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது அந்த கட்சிக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே உள்ளது. 20 தொகுதிகளில் 8 அல்லது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அ.தி.மு.க. சட்டசபையில் மெஜாரிட்டியை பெற முடியும்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. இந்த 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய இலக்குடன் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தனர்.
20 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் என 120 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்குறி நீடிக்கும் நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களின் பணியை முடுக்கி விடுவதற்காக ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 120 பேரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
20 தொகுதி தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை எதிர்கொள்வது பற்றியும், அவர்களது பிரசாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரன் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சனையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று யோசனை கூறப்பட்டது.
ஆலோசனைக்கு பிறகு பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது “20 தொகுதிகளிலும் அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்” என்று அவர் கூறினார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். கட்சி நமது பக்கம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவும் ஆட்சியை 5 ஆண்டுக்கு கொண்டு செல்லவும் இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் ஜெயித்தே ஆக வேண்டும்.
அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், துரைக்கண்ணு மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஜே.சி.டி.பிரபாகர், விஜிலா சத்தியானந்த் எம்.பி., ஆதிராஜாராம், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், தளவாய்சுந்தரம், செம்மலை, ராஜன் செல்லப்பா, மாதவரம் மூர்த்தி, சிறுணியம் பலராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிந்து கொள்ள மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, ராஜேஷ், தி.நகர் சத்யா, விஜயகுமார் எம்.பி., இ.சி.சேகர், மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் திரண்டிருந்தனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam #TTVDhinakaran
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் 8 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி கருணாநிதி சிலை வடிவமைக்கும் பணி திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேடு கிராமத்தில் வசிக்கும் பிரபல சிற்பி தீனதயாளனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது கருணாநிதி சிலை வடிவமைக்கப்பட்டு, இறுதி வடிவம் பெற்றுள்ளது.
கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் நிறுவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் பெருநகர சென்னை மாநகராட்சியின் திறந்தவெளி நிலம் (ஓ.எஸ்.ஆர். லேண்ட்) என்பதால், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற வேண்டும். எனவே தி.மு.க. சார்பில் அனுமதி கேட்டு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவை அவர் மறைந்து 100-வது நாளான வருகிற நவம்பர் 15-ந் தேதி பிரமாண்டமாக நடத்துவதற்கு தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சிலை திறப்பு தேதி குறித்து, ‘நானே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #DMK #KarunanidhiStatue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்